இந்தியாவின் மகள்- ஒர் அலசல் - 2 -சந்தோஷ்

இந்தியாவின் மகள்- ஒர் அலசல் கட்டுரை. 2

அந்த கொடூர இரவுக்கு பின் நடந்தது என்ன ?
-------------------------------------------------------------

இந்திய தலைநகரில் அந்த கறுப்பு இரவில் நடந்த கொடூர வன்கொடுமையினால் உலக அளவில் இந்தியாவிற்கு தலைக்குனிவை ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல. சுற்றுலாவிற்கு இந்திய தேசம் வரும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. இந்தியாவில் , குறிப்பாக தலைநகர் டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு சரியாக இல்லை என பலவிதமாக சர்வதேச ஊடகங்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பில் இந்திய தேசத்தை விமர்சிக்க தொடங்கிவிட்டன. டெல்லியில் மாணவ மாணவிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. மாணக்கர்களின் கையில் அந்த கொடும்பாவிகள் சிக்கி இருந்தால் நிச்சயம் அடித்தே கொன்று இருப்பார்கள். தேசமெங்கும் போராட்டம் தீ கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. வக்கற்ற காவல் துறையினரை சமூக ஆர்வலர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். அரசு அதிகாரத்தை போராட்ட தீ பதம் பார்த்தது. ஒர் அசாத்திய சூழ்நிலையில் தான் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தர்மசங்கடத்தை சந்தித்தது.

இந்த நேரத்தில் வன்கொடுமைக்கு ஆளான பிசியோதெரபி மருத்துவ மாணவி நிர்பயா மரண வாக்குமூலம் பெற வேண்டும் என்பதற்காகவே ஒரளவு மயக்கம் தெளிய வைக்கப்படுகிறது . மரண வாக்குமூலத்தில் நிர்பயா ”நான் உயிர் வாழ ஆசைப்படுகிறேன். எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள். குற்றவாளிகளைத் தப்பவிட்டு விடாதீர்கள்" என்றார்.

போராட்டத்தின் அனல் எரிமலையாகிறது. ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த குற்றவாளிகளுடன் உத்திர பிரதேசத்தில் மறைந்திருந்த குற்றவாளி ஒருவன் பிடிபடுகிறான் . மற்றொரு குற்றவாளியும ஆறாவது நபராக கைது செய்யப்படுகிறான். இந்த ஆறாவது குற்றவாளி மைனர் என்பதால் இவன் பெயரை வெளியிடாமல் கடமையாற்றியது காவல்துறை. இந்த கைது படலங்கள், போராட்டங்களுக்கு இடையே உயர் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்ற நிர்பயா.. சிகிச்சை பலனின்றி டிசம்பர் 29 , 2012 அன்று பலபல கனவுகளை சுமந்த இளம் பெண் நிர்பயா எனும் ஜோதிசிங் பரிதாபமாக செத்து மடிகிறாள்.

ஆவணப்படமும். இந்திய அரசாங்கத்தின் லட்சணமும் :
---------------------------------------------------------------------------

இஸ்ரேலைச் சேர்ந்த லெஸ்லி உத்வீன் தயாரித்து, இயக்கிய பிபிசி ஆவணப்படத்தின் பெயர்தான் ‘இந்தியாவின் மகள் “

இயக்கம் ?? இயக்கம் என்பதின் சூட்சமத்தின் மறுபெயர் வியாபாரம் அல்லது வஞ்சகம் என்று குறிப்பிட விரும்புகிறேன்.

இந்திய அரசாங்கத்தால் தடைச்செய்யப்பட்ட இந்த படத்தை குறித்தான தகவல்கள் பெரும்பாலும் கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் இணையதளங்களில் விவாதிக்கபடுகிறது என்கிற அளவில் இதைப்பற்றி வெளிப்படையாகவே எழுதுவதில் எந்தவித தயக்கமும் எனக்கில்லை.

கவிஞர் குட்டிரேவதி அவர்கள் இந்த ஆவணப்படத்தை பார்த்தபிறகு எழுதிய ஒரு கட்டுரையில் .. **” 'இந்தியாவின் மகள்' என்ற டைட்டிலுக்குப் பதிலாக, 'பாரதத்தாயின் புதல்வர்கள்' என்று வைத்திருக்கலாம். அந்த அளவிற்கு, திரையில் தோன்றும் முதல் ஆண் மகன் முதல் கடைசியாகத் தோன்றிய ஆண்மகன் வரை, சமூகத்தில் பெண்கள் குறித்த தம் அரைகுறையான புரிதல்களைக் கூட மிகத் தெளிவாக, எந்த அளவும் தயக்கமில்லாமல் முன் வைத்துள்ளனர்.” ** இதுப்போன்ற ஒரு கருத்திற்குதான் பி.பி.சி எதிர்நோக்கி இருந்திருக்கும். கவிஞர் குட்டிரேவதி இவ்வாறு குறிப்பிட காரணத்தின் காரணி அந்த ஆவணப்படமே.

அந்த ஆவணப்படத்தில் குற்றவாளிகளின் பிண்ணனியை காட்டும்போது ஏழ்மை, கல்வியின்மை, ஒழக்கம் இல்லாமை என காட்டப்பட்டு.. இந்த குற்றவாளிகளே இந்திய ஆண்களின் ஒட்டுமொத்த பிம்பம் என்பதை போல சித்தரிக்க முயன்று இருக்கிறது. அதில் விடாப்படியாக வெற்றியும் பெற்று இருக்கிறது.

உலக அளவில் தவறான கண்ணோட்டத்தை இந்திய ஆண் மகன்கள் மீது திணிக்கப்பட்டு, இந்தியாவின் ஏகோபத்திய வர்த்தக நிலையை சீர்குலைக்க முயலும் நுண்ணிய அரசியல் சூட்சமம். உணர்ச்சி மிகுதியில் சர்வதேச மக்களிடையே இந்தியா பெண்கள் வாழ தகுதியில்லா நாடு என்கிற ஒரு பிம்பத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுகிறதோ பி.பி.சி என்பதை சந்தேக பார்வையில் பார்க்கப்பட வேண்டியிருக்கிறது.

எனினும், ‘ இந்தியாவின் மகள் ’ எனும் ஆவணப்படம் நம் நாட்டில் பெண்களுக்கு ஏற்படுத்த வேண்டிய பாதுகாப்பு முறைகளை பலப்படுத்த வேண்டிய அவசர நிலையையும்., மனம் பிறழ்வு ஏற்படும் ஆண்களிடம் பெண்கள் மீதான பார்வையை மாற்ற வேண்டிய அவசியத்தையும், இந்திய அரசு இயந்திரத்தின் ஒட்டைகளை அடைக்க வேண்டிய நிர்பந்தத்தையும், தண்டனைகள் குறித்தான சட்டங்களுக்கு அவசரகதியில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையின் அவசியத்தையும் எடுத்துரைக்கிறது. அந்த வகையில் பி.பி.சி நிறுவனத்திற்கு நன்றி சொல்வோம். ஆனால் ..ஆனால்... இந்த பி.பி.சி ஊடக நிறுவனம் செய்ய வேண்டிய இந்த வேலையை நம் உள்நாட்டு ஊடக துறைகள் ஏன் செய்யவில்லை. ? இதுதான் அரசியல் நுட்பம். சர்வதேச அரசியல் நுணக்கம்.

அந்த ஆவணப்படத்தில் வன்கொடுமையின் போது பேருந்து ஒட்டுநராக இருந்த முகேஷ் சிங் அளித்த பேட்டி. வெளிவந்த பிறகு பெரிதும் காயம்பட்டிருப்பதாக இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இப்போது வருத்தப்படுகிறார். ஆனால் அந்த பேட்டி எப்படி உள்துறைக்கு தெரியாமல் எடுக்கப்பட்டது எனும் கேள்வி ஒர் இந்திய குடிமகனாக என்னில் எழுகிறது.


சர்வ சாதரணமாக சர்வதேச நாடுகளிலும் பாலியியல் வன்கொடுமை நிகழ்கிறது. வெள்ளை மாளிகை முதல் பிரிட்டஷ் ராஜாங்க கோட்டை வரையிலான பாலுணர்வு, வன்கொடுமை நடக்காமல் இருக்கிறதா ? இதுபோன்ற செய்திகளை இந்திய ஊடகம் ஒன்று அவர்களின் நாட்டில் உள்நுழைந்து ஆவணப்படமாக எடுத்துவிட முடியுமா ?

முறையாக அனுமதி வாங்கி விட்டுதான் சிறையிலுள்ள குற்றவாளிகளை பேட்டி எடுத்தாக பி.பி.சி சொல்கிறது. அதன் பிண்ணனியில் பல லட்சங்கள் சிறைத்துறைக்கும்.. குற்றவாளியின் வங்கியிருப்புக்கும் குறிப்பிட்ட அளவு பணம் பி.பி. சி ஊடக நிறுவனம் சார்பாக செலுத்தபபட்டு இருப்பதாக நம்பதகுந்த வட்டாரங்கள் சொல்வதாக ஊடகங்களில் செய்தி வருகிறதே..
இதைப் பற்றி உள்துறை அமைச்சகம் ஏதும் பதில் அளிக்காமல் கடந்த காங்கிரஸ் தலையிலான அரசே பொறுப்பற்ற முறையில் அனுமதி வழங்கியது என்று வழக்கமான கேவலமான அரசியலை இந்த சம்பவத்திலும் நடத்துவது உண்மையில் மாபெரும் அசிங்கம்தான் , அவமானம்தான். இதுதானா இந்திய அரசியல் லட்சணம். ?
வெளிநாட்டுக்காரன் இந்திய அரசியல்வாதிகளிடையே இருக்கும் இதுப்போன்ற குளறுப்படிகளை பயன்படுத்திக்கொண்டு எளிதாக ஒர் ஆவணப்படத்தை தயாரித்து செல்கிறான். அதை இந்திய அரசாங்கத்தின் கடுமையான எச்சரிக்கையும் மீறி ஒளிபரப்புகிறான்.. உலகமே உச் கொட்டி ”அய்யோ பாவம் இந்திய பெண்கள் “ என பார்க்கிறது. உலகமே எச்சில்களை தன் வாயின் நுனியில் வைத்து காறிஉமிழ காத்திருக்கிறது. வெட்கமாக இல்லையா இந்திய அரசாங்கமே .. ?

----------------------------------

”” unfortunately I don't accept any Indian male students for internships . We hear lot about rape problem in India which I cannot support. I've many female students in my group. so I think this attitude is something cannot support.

-Annette Beck-Sickinger
Leipzig University, Germany ”” ---- இது இந்த ஆவணப்படத்தின் தாக்கத்தில் ஜெர்மானிய பேரரசிரியர் ஒருவர் தெரிவித்த கருத்து. இந்திய மாணவர்கள் வன்கொடுமையாளர்கள் என்று சொல்லும் அளவிற்கு இந்தியாவின் மீது , இந்திய மாணவர்களின் மீது அபாண்ட சேற்றை பூசியிருக்கிறது பி.பி.சி ஊடகம்.

இந்தியா......! இது நம் தேசம். நம் குடும்பம். பல பிரிவினைகள் நமக்குள் இருந்தாலும். தெற்கு, வடக்கு எனும் மாச்சரியங்கள் இருந்தாலும் இந்தியா என்பது கூட்டு குடும்பம். நம் குடும்பத்திலுள்ள ஒரு பிரச்சினையில் மூன்றாவது நபர் உள் நுழைய அவசியம் என்ன ? அத்தகைய மூன்றாவது விஷமியை எப்படி அனுமதித்தது இந்திய அரசாங்கம் ? இப்போது மானம் போகிறது, வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் மானம் காற்றில் பறக்கிறது. என் வாய்கிழிய பேசும் மத்திய மந்திரிகள். ஆவணப்படத்தை தடைச்செய்ய இயலாத வக்கற்ற இந்திய அரசாங்கம்.. இந்த ஆவணப்படத்தினால் எழுந்த அவமானத்திற்கும். பெண்களுக்கு பாதுகாப்பு வழஙகவும் இனி என்ன செய்து நிரந்தர தீர்வு காணப்போகிறது. ?


.கட்டுரை அலசும் ... ..!!


( தொடரும் )

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (10-Mar-15, 3:14 am)
பார்வை : 426

சிறந்த கட்டுரைகள்

மேலே