தமிழில் பிழையின்றி எழுதிட 03 - திரு அகன்

கவிதை படைக்கும் படைப்பாளிகள் எதுகை மோனையை கைக்கொள்ளும் போது ''ண மற்றும்' ன 'ஆகியவற்றுள் பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளது

எடுத்துக்காட்டாக
“பனிமலர் பாவை பன்மிகு
அனிகலன் அணிந்து வந்தாளே”

மேலே சொன்ன இரு வரிகளில் இரண்டாவது வரியில் 'ணி' போட்டு அணி என்று இருத்தல் வேண்டும் .......மாறாய் 'னி' போட்டு அனி என்று எழுதப்பட்டு அர்த்தம் அனர்த்தம் ஆகிற்று...
.(அணி =அழகு,நகை அனி= நெற்பொறி)

பல படைப்பாளிகளுக்கு செவிவழியாக சொற்கள் பொருள் புரிந்து மனதில் நிரம்பி வழிகின்றது. ஆனால் விரல்வழி படைப்பாக வரும்போது தான் மேற்கண்டவாறு பிழைகள் ஏற்படுகின்றன அல்லவா!

இதை தவிர்ப்பதற்காக கீழுள்ள பட்டியல் கவிதையில் எதுகை மோனை வைத்து எழுதும் படைப்பாளிகளுக்குப் பெரிதும் பயன்படும் வகையில் அர்த்தத்துடன் அளிக்கப்பட்டுள்ளது...பயன் படுத்துங்கள்....

அணல்= தாடி, கழுத்து
அனல் =நெருப்பு

அணி =அழகு
அனி= நெற்பொறி

அணு =நுண்மை
அனு =தாடை, அற்பம்

அணுக்கம் =அண்டை, அண்மை
அனுக்கம் =வருத்தம், அச்சம்

அணை= படுக்கை, அணைத்துக் கொள்ளுதல்
அனை =அன்னை, மீன்

அணைய =சேர, அடைய
அனைய =அத்தகைய

அண்மை =அருகில்
அன்மை= தீமை, அல்ல

அங்கண் =அவ்விடம்
அங்கன் =மகன்

அண்ணம் =மேல்வாய்
அன்னம் =சோறு, அன்னப்பறவை

அண்ணன்= தமையன்
அன்னன் =அத்தகையவன்

அவண் =அவ்வாறு
அவன் =சேய்மைச்சுட்டு, ஆண்மகன்

ஆணகம்= சுரை
ஆனகம் =துந்துபி

ஆணம்= பற்றுக்கோடு
ஆனம் =தெப்பம், கள்

ஆணி =எழுத்தாணி, இரும்பாணி
ஆனி= தமிழ் மாதங்களுள் ஒன்று

ஆணேறு =ஆண்மகன்
ஆனேறு =காளை, எருது

ஆண்= ஆடவன்
ஆன்= பசு

ஆணை =கட்டளை, ஆட்சி
ஆனை =யானை

இணை= துணை, இரட்டை
இனை =இன்ன, வருத்தம்

இணைத்து சேர்த்து
இனைத்து= இத்தன்மையது

இவண் =இவ்வாறு
இவன் =ஆடவன் (அன்மைச்சுட்டு)

ஈணவள்= ஈன்றவள்
ஈனவள் =இழிந்தவள்

உண் =உண்பாயாக
உன் =உன்னுடைய

உண்ணல் =உண்ணுதல்
உன்னல்= நினைத்தல்

உண்ணி= உண்பவன், ஒருவகைப் பூச்சி
உன்னி= நினைத்து, குதிரை

ஊண்= உணவு
ஊன்= மாமிசம்

எண்ண= நினைக்க
என்ன =போல, வினாச்சொல்

எண்ணல்= எண்ணுதல்
என்னல் =என்று சொல்லுதல்

எண்கு =கரடி
என்கு =என்று சொல்லுதல்

ஏண் வலிமை
ஏன் =வலிமை, ஒரு வினைச்சொல்

ஏணை =தொட்டில்
ஏனை= மற்றது

ஐவணம்= ஐந்து வண்ணம்
ஐவனம் =மலை நெல்

ஓணம் =ஒரு பண்டிகை
ஓனம் =எழுத்துச்சாரியை

மேற்கூறிய சொற்களில் கீழ் உள்ள சொற்கள் அதிக பயன்பாட்டில் இல்லை என்பதால் எதுகை மோனை
வைத்து எழுதும் போது சற்று கவனம் வேண்டும்.

அணல் ,அனி ,அனு,அனுக்கம்,அனை,அன்மை
அங்கண் ,அங்கன்,அன்னன்,அவண்,ஆணகம்
ஆனகம்,ஆணம்,ஆனம்,இனை,இனைத்து
எண்கு ,ஏண்,ஐவனம்,ஓனம்

-------- படைப்பு அளித்தவர்: திரு அகன் /view-ennam/18594
====================================================
பின் குறிப்பு: இது திரு agan அவர்கள் படைப்பு. கருத்து கூற விரும்புபவர்கள் அவர் படைப்பு /kavithai / 236566 -ல் கருத்திடவும்.

(இங்கு கருத்திட இயலாது )

எழுதியவர் : திரு அகன் (9-Mar-15, 8:23 pm)
பார்வை : 224

மேலே