மலரின் அழுகை கவிதை
மலரின் அழுகை…!!
*
கண்ணிமைகளின் நுனியில் - அப்
பெண்ணின் கண்ணீர்த் துளிகள்
திரண்டு ஈரம் படிந்திருக்கின்றது
மறைவாய் போய் துடைத்து
வெளிக் காட்டாமல் இயல்பாய்
அழுகையை உள்ளுக்குள்
அமுக்கி அடக்கிக் கொண்டு
யாரிடமும் எதையும் சொல்லாமல்
இப்படியும் அப்படியும் உலவி
மறைத்து வருகின்றாள் பல நாளாய்
அவளின் நடவடிக்கையைச்
சந்தேகித்து கவனித்து வருகின்ற
தாயோ தங்கையோ கேட்பதற்கு
அஞ்சி மௌனமாய் வாடிய முகமாய்
அவரவர் வேலைகளைக் கவனிப்பர்
அவளின் உள்மனதில் புழுங்கும்
அந்த இம்சையின் வேதனையின்
முகாரி ராகம் நரம்பின் வழியே
புடைத்து எழும்பிடும்போது
அவளுள் ஆத்திரமான ஆவேசம்
வெளிப்படுத்த எண்ணுகையில்
அதனை வெளிப்படுத்தாமல்
தவிர்த்து விம்மி விம்மி பொருமி
முந்தானையால் மறைத்து மறைத்து…
கல்லென கனத்து விட்ட மனதில்
எதற்கான அழுகையென்று
எவருக்கும் இன்னும் அணுவளவும்
தெரியாமல் ரகசியமாய் நெஞ்சில்
புதைத்து வெம்பிக் கொண்டிருக்கிறாள்.
அவளின் கண்ணீர்த் துளியில் தான்
மையங் கொண்டிருக்கிறதோ
அவளின் காதல் துயரக் கதை…!!
*