பூந்திருவே யாயினும் தன்வரைத் தாழ்த்தல் அரிது - சிறுபஞ்ச மூலம் 44
நேரிசை வெண்பா
பேணடக்கம் பேணாப் பெருந்தகைமை பீடுடைமை
நாணொடுக்கம் என்றைந்து நன்றாகப் - பூணொடுக்கம்
பொன்வரைக்கோங் கேர்முலைப் பூந்திருவே யாயினும்
தன்வரைத் தாழ்த்தல் அரிது! 44
- சிறுபஞ்ச மூலம்
பொருளுரை:
உறவினரைப் பேணுதலும், அடக்கமுடைமையும், பிறரை விரும்பாத பெருந்தன்மையும், பெருமையுடைமையும், நாணத்தால் உண்டாகும் ஒடுக்கமும் என்று சொல்லப்பட்ட ஐந்தனையும் பொருந்தாது பூணடங்கின பொன்மலை போன்ற கோங்கரும்பின் அழகையுடைய முலைகளையுடைய தாமரை மலரில் வாழ்கின்ற திருமகளே யானாலும், (தன்கொழுநனைத்) தன்னளவின் தாழ்த்துதல் (நன்மையாதல்) இல்லை.
கருத்துரை:
திருமகளைப் போன்ற செல்வியே யெனினும் ஒரு பெண் சுற்றந்தழுவுதல் அடக்கம் முதலியன உடையளாய்க் கணவன் அளவில் அடங்கியிருத்தலே நன்றாம்.
‘தன்வரைத் தாழ்த்தல்’ என்றது தன்னளவில் கணவனை அடக்கி வைத்துக் கொள்ளுதல், தகைமை - அழகு. அடக்கம் - மெய் மொழி யடக்கத்துடன் உளத்தடக்கமுமாம். அரிது, இன்மை குறித்து நின்றது.