காலத்தின் கவிச்சி
கபடமற்று
அரவணைத்தலுடன்
கூடிய
ப்ரியம் நிரப்பித்தான்
இழுத்துச்சென்றோம்
ஆனால் -
கவனமற்ற
வார்த்தைகளின் நகர்தலால்
வலிகளின் புணர்தலில்
வாழ்வின்
வெவ்வேறு கரைகளில்
அமர வேண்டியதாகிப்
போன
இணங்க முடியாததொரு
கணத்தில் தான்
உடைந்து போனது !
நம்பிக்கையின் விசித்திரங்கள்
நிரப்பப்பட்டிருக்கும்
பிரார்த்தனைக் கூடங்களில்
விழியோரத்தில்
துளிர்க்கும்
ஒரு துளிக் கண்ணீர்
தெளித்து -
மன்றாடல்களின்
மன்றத்தில் வைத்து
ஒரே ஒரு முறை
யோசித்துச் சகித்திருந்தால்
அனைத்தையும்
பணயம் வைத்து
மன்னித்து விடலாம் தான் .....
ஆனால் -
சீர்குலைந்த உறவுகளாலான
உறைந்த படிமங்களின் மீது
நகராமல்
நங்கூரமிட்டிருக்கிற
காலத்தின் கவிச்சியை
எக் கண்ணீர் கொண்டு
கழுவித் துடைக்க ?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
