யுகங்கள் தாண்டும் சிறகுகள் -4 =0= குமரேசன் கிருஷ்ணன் =0=

( யுகங்கள் தாண்டும் சிறகுகளின் பயணத்தில் என்னையும் இணைத்துக் கொள்ள நல்வாய்ப்பு நல்கிய நண்பர் கவித்தா சபாபதி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் )
காலங்களை கடந்து பயணிப்பவை எவையென கேள்வியெழும் போது , எழுத்துக்கள் , ஓவியங்கள் , நற்கலைகள் என்றே மனம் விரிகிறது , ஆனால் மனிதராகிய நாம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் , மனிதம் என்ற சொல்லே மரித்துவிடுமோ என்ற அச்சமே எழுகிறது சிலநேரம் மனதுள் , நம் தாத்தாவின் , தாத்தாவை எத்தனை பேருக்குத் தெரியும் , அவர்களின் பெயர்கூட அறியப்படாத நம்மால் , நான் இன்ன சாதி , இன்ன மதம் என்று எப்படி நமது சிந்தனையில் உழல முடிகிறது . இன்னும் நான்கு தலைமுறை தாண்டி நாம் பயணிப்போமா, என்பதும் கேள்விக்குறியே ..? நம் வாழ்வில் நிலையானதை தொலைத்து விட்டு நிலையில்லா ஒன்றை தேடியேன் திரிகிறோம்.
நம் முப்பாட்டன் திருவள்ளுவர் , திருமூலர் , பட்டினத்தார் , விவேகானந்தர் , காந்தி மகாத்மா போன்றோர்கள் எப்படி யுகங்களை தாண்டி பயணித்தனர் , நாம் அவ்வாறு பயணிப்போமா ..? வெற்றிடமாய் விழுகின்றன பதில்கள் , நம்மையறிய நாம் கொஞ்சம் பின்னோக்கி பயணிப்போம் .
" பிறந்தன இறக்கும் , இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும் , மறைந்தன தோன்றும்
பெருத்தன சிறுக்கும் ,சிறுத்தன பெருக்கும்
உணர்ந்தன மறக்கும் , மறந்தன உணரும் "
என்ற என் முப்பாட்டன் பட்டினத்தாரின் வாக்கின்படி இன்று நாம் மனிதர்கள் , நமது பயணத்தின் முடிவு மரணமே , தவணைமுறையில் பயணிக்கும் அதன் முடிவே இறை சூட்சுமம் . பிறப்பும் , இறப்பும் மனிதனுக்கு அப்பாற்பட்டது . அங்குதான் இறைத் தத்துவம் புதைந்து கிடக்கிறது. யுகங்களை தாண்டிய சிறகுகளாய் , தம்மை பட்டை தீட்டிய விவேகானந்தர் , பாரதி , கண்ணதாசன் , பட்டுக்கோட்டை , வாலி என நீளும் எழுத்தாளர் பட்டியலில் , நம்முடன் வாழும் சக காலத்து எழுத்தாளர்களுடன் இணைந்து இன்று நாம் செய்ய வேண்டியதென்ன , எதை நோக்கி நம் சிறகுகள் விரியப்போகிறது .
" தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தான் இருந்தானே"
என்பான் நம் திருமூல சித்தன் , என்றொருவன் தன் உள்முகத் தேடலை தொடங்குகிறானோ , அன்றவன் ஆன்மாவின் ராகத்தினை கேட்கத் துவங்குகிறான் . ஆன்மாவே இறை சூட்சுமமென உணர்கிறான் .
அதிகாலையில் எழும் பறவைகளே விரைவில் இரைதேடி வீடுவந்து சேருமென்பர் . எவ்வளவு சீக்கிரம் உள்முகத் தேடலைத் தொடங்குகிறானோ அவ்வளவு சீக்கிரம் தன்னை உணர்வதுடன் , இவ்வுலகின் ரகசியங்களை உணரத் தொடங்குகிறான் . '' நான் '' என்ற அகம்பாவத்தை அழித்தபின் அவனை அவன் அறிகிறான் . அவன் ஆன்மாவில் எழும் அற்புத ராகங்கள் கவிகளாக , எழுத்துக்களாக ,கதைகளாக , ஓவியமாக காலத்தால் அழியாது உலகெங்கும் கொண்டாடப்படுகிறது . யுகங்களை தாண்டியும் தன் சிறகினை விரிக்கிறது .
'' உன்னை உணர்
உண்மை தேடு
சுயமாய் யோசி
சுதந்திரனாய் இரு ''
என என்னுள் சிறு தேடல் கொண்டிருப்பேன் என் நெஞ்சுக்குள் நெருப்பை வை கவிக்குள் .
''நடந்தே
கழியணும் வழி
கொடுத்தே
தீரணும் கடன்
வாழ்ந்தே
தீரணும் வாழ்க்கை ''
என்ற வரிகளை வாசிக்கும் போதெல்லாம் என்னை நான் பட்டை தீட்டிக் கொள்கிறேன் , எழுதியது யாரென்று அறியாத போதும் , கல்வெட்டுக்களாய் மனதில் செதுக்கப்பட்டு விட்டன இவ்வரிகள் . இவை யுகங்களை தாண்டும் சிறகுகள்.
இத்தளத்தில் நான் ரசித்த இரு கவிஞர்களைப் பற்றியும் , அவர்களின் எழுத்துக்கள் யுகங்களை தாண்டும் அற்புதம் பொதிந்தவை என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையிலும் அவர்களின் எழுத்துக்களின் ஒரு ரசிகனாய் அவர்களைப் பற்றி கொஞ்சம் பேசுவோம் , அவர்களின் கவித்தோட்டத்தில் வாடாத வாசமிகுந்த கவிகளை கொஞ்சம் நுகர்வோம் .
இவர் எழுதுகோல் எடுத்து எழுத ஆரம்பித்தால் காகிதங்கள் எல்லாம் வார்த்தைகள் மேல் கட்டாயம் காதல் கொள்ளும் , அம்மாவைப் பற்றி எழுதினால் அகில உலகமும் அன்பினால் திளைத்து மீளும்.
'' அம்மாக்களைப்பற்றி
எழுதினால் மட்டும்
கண்ணை மூடிக்கொண்டு
கவிதைகள்
அழகாகிவிடுகின்றன '' ..........................................என்பார் .
சமீபத்தில் இவர் எழுதிய அம்மா கவிதை வாட்ஸ் அப் மூலம் அகில உலகத்தையும் கலக்கிக் கொண்டிருக்கிறது . அதில் சில வரிகள்
'' எமக்கு
காய்ச்சல் வந்தால்
மருந்து தேவையில்லை
அடிக்கடி வந்து
தொட்டுப் பார்க்கும்
அம்மாவின் கையே
போதும்''
அகில உலக
அம்மாக்களின்
தேசிய முழக்கம்
'' எம்புள்ள
பசி தாங்காது ''
இவர் காதலை மொழிய ஆரம்பித்தால் தேவதைகள் வரம் கேட்பர் இவர் கவியின் வரிகளாக
நீயெடுத்த
செல்பி கண்டு
தலை குனிகிறான்
சொர்க்கத்திலிருந்தபடி
லியனார்டோ டாவின்சி
ஒரு அதிகாலையில்
ஆசிர்வதிக்கப்பட்ட
பனித்துளிகள்
நீ முகம் பார்க்கும்
கண்ணாடியாகும்
வரம் பெற்றிருக்கலாம் ......................................... என நீளும் இவரின் காதல் ரசனைகள்
ஏரியைப்பற்றி
கவியெழுத
உட்கார்ந்தேன்
கற்பனை
வறண்டுபோனது
கண்ணீர் விட்டழுதது
சரியாக
மூடப்படாத
தண்ணீர் குழாய்... ,
அப்படியே சரியாக
மரக்கிளை
முறிந்த சத்தம்
காகிதத்தைக்
கசக்கும்போது ....................எனச் சிறு சிறு நிகழ்வு கூட அற்புத கவியாகும் இவர் கைவண்ணத்தில் .
சில சுவர்களுக்கு
காதுகளுண்டு
சில காதுகளுக்கு
சுவர்களுண்டு ...
யாரோ
கதவைத் தட்டினார்கள்
திறந்து பார்த்தேன்
காற்று ....
என்
முயற்சிகளுக்கு அடிக்கும்
சாவு மணியோசையில்
தியானம் பழகவேண்டும்
நான் .................... ...... என விரியும் இவரின் பார்வைகள்
யுகேஜி
படிக்கும்
தன் அண்ணனின்
நோட்டுப்புத்தகத்தில்
கிறுக்கும்
ஒரு குழந்தையின்
வாயிலாக
தனது அன்றைய
வீட்டுபாடத்தை
முடிக்கிறான் கடவுள் ............... என கடவுளையும் கவிக்குள் அழைப்பார் வெகு ரசனையாய்.
என்னை முழுவதாய் தாக்கிய இக்கவிக்கு பின் இவரை யாரென்று உரைக்கிறேன்
மதுவெனும்
சாவியால்
சங்கிலியின்
பூட்டை திறந்துகொண்டு
ஓடுகின்றன
தறிகெட்ட மிருகங்கள்
வேடிக்கை
என்னவென்றால்
சாவிகொடுத்தவர்களே
அம்மிருகங்களைப் பிடிக்க
தனிப்படை
அமைக்கிறார்கள் ..
ஒரு
மோசமான
கனவிலிருந்து
விழித்தெழுந்து
விடுவோம்
என்று
நம்பிக்கொண்டிருக்கலாம்
அந்தச் சிறுமியின் ஆன்மா
இன்னும்.....
இவரின் இக்கவி வரிகள் என்னை ஒரு உலுக்கு உலுக்கியது , இவரைப் பற்றி எழுதிக்கொண்டே இருக்கலாம் , ''குருச்சந்திரன் என்ற கிருஷ்ண தேவ் '' என்ற இக்கவிஞர் யுகம் தாண்டும் எழுத்துக்கு சொந்தக்கார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. வாழ்த்துக்கள் குருச்சந்திரன் , தமிழன்னை தங்களை தன்மடியில் என்றும் செல்ல மகனாய் தாலாட்டிக் கொண்டே இருப்பாள் தங்கள் கவி படிக்கும் ஒவ்வொரு நொடியிலும் . வாழ்க வளமுடன் .
கட்டுரை நீள்கிறது , ஆனாலும் இன்னொரு இளங்கவிஞன் பற்றி நான் கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டும் , எல்லா கவிஞர்களின் குருவாக திகழும் பாரதி பிறந்த மண்ணின் மைந்தனிவன் , சிவப்பு மிகவும் பிடிக்குமென்பதால் தன் பெயரோடு '' மனோ ரெட் '' என்று இணைத்துக்கொண்ட இளைய கவி , இவரின் கவி பார்வைகள் சமூகத்தின் தாக்கத்தையே பல்வேறு கோணங்களில் அலசும் . நானும் உங்களோடு ஒரு ரசிகனாய் இவரின் கவிக்குள் வாசிக்க வருகிறேன் .
மனிதர்களைப் பற்றி இவ்வாறு கூறுவார் ,
நீங்கள் யாரென்று
எனக்குத் தெரியாது
நீங்கள் அணிந்து திரியும்
மனித முகமூடியுடன்தான்
எனக்கு பழக்கம் ...
மனிதன் குரங்கிலிருந்து
வரவில்லை
குரங்கு இனத்திலிருந்து
விரட்டப்பட்டிருக்கிறான்
மனம் நிர்வாணமெனில்
ஆசைகள் களைந்து
ஆன்மாவாக அலையலாம்
மானம் நிர்வாணமெனில்
ஆடைகள் கிழித்து
நடைபிணமாகலாம் .......................................என கிழிப்பார் மனிதனின் நிஜமுகத்தை சிலநேரம் .
இயற்கையை பாடும் போது இவரோடு மழையில் நாமும் கொஞ்சம் நனையலாம்
இரவு பெய்த மழை
மழை பெய்த இரவு
நனைத்துவிட்டு போனது
நனைந்த இடம் மட்டுமல்ல
நனையாத இடமும்தான்
மழை எப்படி இருக்கும்
பழைய காதலிபோல
முகச்சாயல் கொஞ்சம்
மாறியிருக்குமோ
பொறுத்துப் பார்க்கலாம்
மழை பெய்யும் வரை
இது மட்டுமின்றி குழந்தை வரம் , பிச்சைக்காரி , பசி , வன்புணர்வு என சமூகத்தின் பல சாடல்கள் இவரின் கவிக்குள் எங்கும் காணலாம் , ரசனைமிக்கவை இவரின் ஒவ்வொரு வரிகளும் , ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல சில இங்கே ,
நீங்கள் உங்களுக்காக
இறைவனிடம்
பிச்சையெடுத்த
அந்த நிமிடத்தில்தான்
கர்ப்பிணிப் பெண்ணொருத்தி
கருவை கலைக்க
கடவுளை அழைத்திருப்பாள் ..
இறைவன் நல்லவன்
எத்தனை வருடங்கள்
கழித்தாலும்
பிச்சைகாரர்களின்
கையிலிருக்கும் குழந்தையை
கைக்குழந்தையாகவே
வைத்திருக்கிறான்
ஈரக்குலை துடிக்கிறது
நாவறண்டு போகிறது
இருந்தாலும் இங்கே
கடவுள் குளிக்க மட்டும்
பால் மிச்சம் இருக்கிறது
நாக்குவரை
நகக்கீறல்கள் சுமப்பதாள்
தண்டிக்கப்பட வேண்டியது
அவள் அல்ல
சாகச் சாகச் வன்புணர்ந்த அரக்கர்களும்
சாட்சியான அந்த இறைவனும்தான்
என நீளும் சிவப்பு மனிதனின் சிந்தனைகள் , கடைசியாய் 2050 விவசாயம் எப்படியிருக்கும் , அதற்கும் இருக்கிறது இவரின் பார்வையில் கவிவரிகள், இதோ நாளைய பொழுதை நம் கண்முன் விரிக்கும் அவலத்தின் உண்மை சொரூபம்
விவசாயத்திற்கு நிலம்வேண்டுமே
எந்த கட்டிடத்தை இடிப்பான்
நீர் தேவைப்படுமே
எந்த அறிவியலை கேட்பான்
உழவு தெரிந்த உழவனை
எந்த கிரகத்திலிருந்து
அழைப்பான் ..
இவ்வாறு இளவயதில் பல கோணங்களில் , பல்வேறு சமுதாய சாடல்களை எழுதும் தம்பி மனோ சிவப்பு மனிதன்தான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை . வாழ்த்துக்கள் தம்பி ''மனோ ரெட்'' உன் கவியின் ரசிகனாக நானும் இருப்பேன் என்றும் .
இத்தளத்தில் தோழர் குருச்சந்திரன் , தம்பி மனோ போன்ற கவிஞர்களின் கவிதைகள் யுகங்கள் தாண்டி பயணிக்கும் என்பதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு , வாழ்வில் இன்னும் மிக உயர்ந்த உச்சங்களை அவர்கள் அடைய இறைவனை வேண்டுகிறேன் .
இரண்டு கவிஞர் பற்றி எழுத வேண்டும் என்பதாலே பலரை பற்றி என்னால் பேச முடியவில்லை , எழுத்து தளத்திற்குள் நான் வந்தது முதல் என்னை செதுக்கிய சிற்பிகள் அனைவருக்கும் என சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
'' எழுதியவன் மரித்துப்போவான்
எழுத்துக்கள் மரிப்பதில்லை ''
........................................ ................... ............ என்று என் புத்தகப் பூக்கள் கவியில் நான் எழுதியது போல
யுகங்கள் தாண்டி சிறகுகள் விரிக்கட்டும் நம் கவிஞர்களின் கவிகள் என்றும் , அதுவரை என்றோ படித்த இவ்வரிகள் என்னை மேலும் செதுக்கட்டும் .
''காற்றே....
உன்னிடம்
வரும்போது
எனக்கு இடம்கொடு
நீரே ......
உன்னுடன் என்னைக்
கரைத்துவிடு
நெருப்பே....
அதுவரை எனக்குள்
இருந்து எரி...!''
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
----------குமரேசன் கிருஷ்ணன் ----------------