நான் கற்ற பாடங்கள் - உதயா

அப்பா குடித்துவிட்டு தினமும்
அம்மாவை திட்டும்போதும்
அடிக்கும் போதும் கற்றுக்கொண்டேன்
இனி குடிக்கவே கூடாதென்று
அடிகளையும் வலிகளையும்
சிறு நேரத்திலே மறந்துவிட்டு
மாமா இராத்திரியில சாப்புடாம
படுத்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்
என அவள் சொன்ன வார்த்தையில்
அன்பிற்கும் அகராதியினை
எழுதிவிட்டது என் மனம்
பக்கத்து வீட்டு பாட்டி
காரணமே இல்லாம
அவங்க மறுமகள திட்டும்போது
உறவின் இணைப்பிற்காக
அன்பாலே அவள்
அனைத்தினையும் அத்தைக்கும்
புரிய வைத்த முறையில்
அந்த பாட்டியிடம் கற்றுக்கொண்டேன்
கொடுமையின் வலியினை
அந்த மருமகளிடம் கற்றுக்கொண்டேன்
பொறுமையின் பெருமையினை
ஊருக்கு ஒதுக்குபுறமாய்
உதறிவிடப்பட்ட கிழவன்
ஒருவர் புலம்பிக்கொண்டிருந்த
வார்த்தையில் இருந்து
நான் பெற்றுக் கொண்டேன்
வாழ்வெனும் பூட்டை
திறக்கும் சாவியினை
வாழ்வெனும் அகராதியாய்
பலர் அருகில் இருக்க
வாழ்வை தேடி அலைகிறான்
தொலைவிலே ..........