இன்னும் கொஞ்ச நேரம்

காலையில்
உன் புன்முறுவல்
புறக்கணிக்கப்படுகிறது
சில கவிஞர்களை தவிர்த்து..
ஞாயிறன்று
எழ மறுக்கும் எங்கள்
சோம்பேறித்தனம்
உன்னையும் ஆட்கொள்ளாதது
அதிசயம்தான்
எழு ஞாயிறே !
யாரை
துவம்சம் செய்ய
உன் உக்கிர ஊதா கதிர்கள் ?
சொந்த வீட்டில்
கன்னக் கோலிட்டு
ஓசோன் ஓட்டைக்கு கீழ்
காத்திருக்கிறோம்
தற்கொலை படைகளாய் !
உச்சி பிளந்து
எங்களுக்கு சூடான
சொரணை ஏற்றப் பார்க்காதே !
தற்கால குளிர் கூட்டுக்குள்
தஞ்சம் புகுந்து
தப்பித்து கொள்வோம் !
சாயும் காலம்
ஆகிவிட்டால்
எங்கள் நகரத்து
இளைஞனைப் போல
விட்டத்தை விரிவாக்கி
எங்கே ஓடுகிறாய்
செந்நிற பரிதியே !
கொஞ்சம் நில் !
நான் இன்னும்
பேச வேண்டும் உன்னோடு !
நாளைய விடியல் எனக்கு
நிச்சயமில்லாதபோது......