கனவே கலைந்து போ பாகம் 3 துப்பறியும் திகில் தொடர்
முன் கதைச் சுருக்கம்
பிரசாத்தும் நந்தினியும் நண்பர்கள். நந்தினி தனது அபார்ட்மெண்ட் இருக்கிற இடம் இதற்கு முன் சுடுகாடாக இருந்தது என்றாள்.
..............................................................................................................................................................................................
பிரசாத்தும் நந்தினியும் பேச்சைத் தொடர்ந்தபடி இருந்தனர்.
“சுடுகாட்டு இடத்தை வளைச்சிப் போட்டு வீடு கட்டிட்டான். ஒரு சில பேர் வாங்கவும் வாங்கிட்டாங்க. அப்புறமா விஷயம் தெரிஞ்சது. வாங்குனவன் வந்த விலைக்கு லாபம்னு வித்திட்டு ஓடிட்டான். இதுல வீட்டை வாங்கிக் குடியிருந்த ஒருத்தன் குடும்பத்துல துர்மரணம் நடந்தது. இன்னொருத்தன் குடும்பமே கூண்டோட செத்துப் போச்சு. ஆவிங்க நடமாடுற இடம்னு முத்திரை விழுந்திடுச்சி. ஆவியைப் பார்த்ததாயும் சில பேர் சொல்றாங்க. உங்களுக்கும் தெரியும்னு நினைக்கிறேன், பத்திரிக்கைகளிலே ஆவி நடமாடும் இடம்னு கவர் ஸ்டோரி வந்ததே, இந்த இடம்தான்...! வீடுங்க போணியாகல. விலையை கம்மி பண்ணாங்க. அப்படியும் தேறலே. இப்படி சிறப்புக் குலுக்கல், அது இதுன்னு சொல்லி தலைல கட்டுனாதான் வீடு கை மாறும். ஒரு இருபதாயிரம் பணம் கட்டி நாங்க முப்பது பேர் ஆளுக்கொரு விளம்பரப் படம் எடுத்து, போட்டியில கலந்துகிட்டோம். குலுக்கல்ல எனக்கு பரிசு கிடைச்சது.
இருபதாயிரம் ரூபாய்க்கு மூணு லட்சம் மதிப்புள்ள வீடு எனக்கு வாய்ச்சது. எனக்குப் பேய் பிசாசோட தங்குறதுல ஆட்சேபணை இல்ல ! முப்பது பேர் கிட்ட இருபதாயிரம் வாங்கினதும், வீட்டை போணி பண்ணினதும் பில்டருக்கு லாபம். முப்பது பேர் தயாரிச்ச விளம்பரப் படங்கள் எல்லாம் பிரபல இயக்குனர் சந்திர சேகர் பார்வைக்குப் போகும்.. அவர் பார்வை படாதான்னு எத்தனை பேர் தவம் கிடக்குறாங்க, அந்த வகையில பரிசு கிடைக்காத மத்தவங்களுக்கும் ஒரு பலனிருக்கு.... இப்படித்தான் இந்த வீடு எனக்குக் கிடைச்சது!--- ”
பிரசாத் பயந்து போய் சுற்றிலும் பார்த்தான். சும்மா கிடைக்கிறதென்று அலைகிற ஆவியை வாங்குவானேன்?
ஆனாலும் வீடு அழகுதான். இந்த வீடு மூன்று லட்சம் தானா? குளியலறை கட்டுமானமே மூன்று லட்சம் தேறுமே?
விஞ்ஞான யுகத்தில் பேயாவது, பிசாசாவது?
நந்தினிக்குத் துணிச்சல்தான்; துணிச்சல் என்பதை விடத் தேவை என்றால் பொருத்தமாக இருக்கும்....! தனித்து வாழும் பெண்ணுக்கு யார் கொடுக்கிறார்கள் வாடகைக்கு வீடு?
அவள் சாப்பிட்டு கை கழுவிக் கொண்டாள். “ ம்...ம்.. பிரசாத், முருகேசன் சார் என்னை லஞ்ச்சுக்கு கூப்பிட்டிருக்கார். அவரோட மனைவி என்னோட விசிறி. மதிய சாப்பாடு முடிச்சு அங்கேயே ஓய்வெடுத்துட்டு நைட் டியூட்டி போயிடுவேன். காலைல அங்கேயே குளிச்சி ஒரு விளம்பரப் பட ஷூட்டிங் முடிச்சு, நைட் டியூட்டி பார்த்துட்டு அடுத்த நாள் காலைல இங்கே வருவேன்.. இப்ப கிளம்பட்டுமா? ”
“என்னங்க இது? கிரகப்பிரவேசம் நடந்த நாள்லயே புது வீட்டை நாப்பத்தெட்டு மணி நேரம் பூட்டி வைப்பீங்களா? ”
“வேற என்ன பண்றதாம்? ”
“உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா வீட்டுச் சாவியை என் கிட்டக் கொடுங்க. நான் ராத்திரி தங்கிட்டு நாளை காலைல அஞ்சு மணிக்கு உங்க ஆபிஸ் வந்து சாவியைக் கொடுத்துட்டுப் போயிடறேன்.... ”
நந்தினி தயங்கினாள், “இல்ல, பிரசாத், உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்? ”
பிரசாத் நாக்கைக் கடித்துக் கொண்டான். என்ன ஒரு ஆர்வக் கோளாறு அவனுக்கு? ஒரு பெண்ணின் புது வீட்டில் ராத்திரி முழுக்க அவன் தங்கினால் அக்கம் பக்கம் என்ன நினைக்கும்? நண்பர்கள் என்ன நினைப்பார்கள்? ஒருத்தருடைய வீட்டில் அனாமத்தாக அப்படி தங்கத்தான் முடியுமா? வீட்டுக்குள் விலையுயர்ந்த பொருள்களை பாதுகாப்பாக வைத்திருப்பார்கள்; ரகசியங்கள் இருக்கலாம்... மூன்றாம் மனிதனை நம்பி விட முடியுமா?
“ஓ, ஸாரி நந்தினி, ஏதோ ஆர்வக்கோளாறுல கேட்டுட்டேன்.... ”
அதற்குள் அவளுக்கு அலைபேசியில் அழைப்பு வந்தது. பேசினாள். அலைபேசியை மறுபுறமாகத் திருப்பி பிடித்தபடி, “பிரசாத், எனக்கு ஆட்சேபணை இல்லை, ராத்திரி இங்க தங்கறீங்களா? ” என்று கேட்டாள்.
பிரசாத் சம்மதித்ததும் சில நிமிடங்கள் பேசி விட்டு பிரசாத்தை பார்த்தாள்.
“ஒண்ணுமில்ல, என் தோழிகள் நாலு பேர் வீட்டைப் பார்க்க சாயந்தரம் ஆறு மணிக்கு வராங்க. அவங்க வரும்போது நான் இருக்கணுங்கிற அவசியமில்லையாம். அதான்...இது அவங்க பேரு ரஞ்சிதா, தீபா, மனோகரி, சுசீலா.. நாலு பேருமே அழகா இருப்பாங்க; நல்லாப் பேசுவாங்க... ”
பிரசாத் சிரித்தான், “நான் பார்த்துக்கறேங்க.. ”
“ஓகே, அப்ப உங்க மொபைல் நம்பரை சுசீலாவுக்கு எஸ்ஸெமஸ் பண்ணிடறேன். இது ஹோட்டல் அட்சயாவோட ஃபோன் நம்பர். அங்க குணபாண்டி, ரங்கான்னு ரெண்டு பேர் இருப்பாங்க. இனிப்பு காரம் காப்பி ஆர்டர் பண்ணா வீட்டுக்கே கொண்டு வந்து கொடுத்துடுவாங்க. சுசீலா ஒரு ஃபாண்ட்டா பைத்தியம்.. ரெண்டு ஃபாண்ட்டா வாங்கி அவ தலையில ஊத்திடுங்க.. நீங்க கூட அப்படியே டின்னர் சாப்பிட்டுக்கங்க... வயிராற சாப்பிடுங்க.. பில் சேர்த்து வச்சி நான் குடுத்துக்கறேன்..”
பேசிக் கொண்டே அவள் பொருள்களை பாக் செய்தாள். அவள் தன் அந்தரங்கப் பொருள்களை எடுத்து வைக்க வசதியாக, பிரசாத் வெளியே நின்று கொண்டான்.
“வந்து.. நந்தினி, நான் உங்களுக்காக வாங்கி வந்த கிப்ட்டை பிரிச்சி பார்த்திடுங்களேன்”
“ஓ ஷ்யூர்.. ”
பிரித்துப் பார்த்தாள்.
சுவரில் ஓட்டை போட உதவும் எலக்ட்ரிகல் ஜம்பரும், ஆணிகளும், மரத்துண்டும்...
“வாவ்...!! ” துள்ளிக் குதித்தாள். “என்ன ஒரு எக்ஸலெண்ட் டைம்லி கிப்ட்! ”
“உங்க மற்ற பரிசுப் பொருள்களை பிரிச்சி அங்கங்கே அடுக்கிடவா? ”
“என்ன வேணுமாணா செய்யுங்க பிரசாத்... உங்களுக்கு எதுனா தேவைப்பட்டாலும் எடுத்துக்கோங்க.. அப்புறம்... ”
அவனை .கையைப் பற்றி இழுக்காத குறையாக பூஜையறைக்குள் தள்ளியவள் அங்கிருந்த ஒரு புகைப்படத்தைக் காட்டினாள். பார்த்தாலே தெரிந்தது, நந்தினியின் தாயார் படம்.
“இதை மாத்திரம் பூஜையறையில கிழக்குப் பார்த்து மாட்டி வச்சுடுங்க... அப்புறம்.. தண்ணி லேசா மஞ்சளா இருக்கும்... அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க... ”
அவள் சொல்லிக் கொண்டே போக “நான் பார்த்துக்கறேங்க” என்று சொல்லி சிரித்தான் பிரசாத்.
ஒரு வழியாக அவள் வெளியேறினாள்.
பிரசாத்துக்கு மனமெங்கும் தென்றல் வீசியது. பாழாய்ப் போன போதைப் பழக்கம் இல்லாமலிருந்தால் அவன் அப்பாவின் செல்வாக்குக்கு இந்நேரம் நல்ல வேலையில் அமர்ந்து கை நிறைய சம்பாதித்துக் கொண்டிருப்பான்... நந்தினியின் கண்ணைப் பார்த்து என்னைப் பிடிச்சிருக்கா? கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்டிருப்பான்...அவள் ஆம் என்றாலும் இல்லை என்றாலும் கடத்திக் கொண்டாவது போய் கல்யாணம் பண்ணியிருப்பான்....
அப்போதும் இதே வேலையைத்தான் செய்து கொண்டிருப்பானோ- வேறொரு நிலையில்? அவன் சிரித்துக் கொண்டான். மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது.
பரிசுப் பொருள்களின் உறையை கவனமாய்ப் பிரித்து சுருட்டினான். அட்டைப் பெட்டிகளை அடுக்கினான். சுவரில் குறித்து வைத்துக் கொண்டு ஆணியடித்து மாட்டினான். அறைகளை சுத்தம் செய்தான். வயிறாற சாப்பிட்டு கோழித் தூக்கமும் போட்டான்.
நந்தினியின் தோழிகளிடம் சிரிக்க சிரிக்கப் பேசி அனுப்பி வைத்தான்.
பாத்ரூமில் ஆளுயற கண்ணாடி இருந்தது. எட்டடி உயர சுவர் முழுக்க ஏதேனும் ரகசிய காமெரா இருக்கிறதா என்று தேடினான். நந்தினி நடிகையாயிற்றே? எவனாவது ஏதாவது வைத்திருந்தால்... நல்ல வேளை, அப்படி எல்லாம் இல்லை.
பாத்ரூமில் பத்தடி உயர வெளிப்புற சுவரில் சிமெண்ட்டால் ஆன புடைப்புச் சிற்பங்கள் இருந்தன. பூப்பூத்த ஏறுகொடியின் சிற்பம்... படி போன்ற அமைப்பில் இலைகள்.. இரண்டு பக்கமும் துருப் பிடிக்காத அலுமினியக் கம்பிகள்...
பூஜையறையில் குத்து விளக்குகள் அணைந்திருந்தன. பெரிய மண் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மூடியிட்ட மண் விளக்கு! பிரசாத்துக்கு அது கண்ணை உறுத்தியது! சமாதிக்குப் பக்கத்தில் வைப்பார்களே..!
நந்தினியின் பக்கத்து வீடு பூட்டியிருந்தது. இந்த வீட்டு மனிதர்கள்தான் லாரி விபத்தில் பூண்டோடு மாண்டவர்கள். முன்னிரவு வீட்டில் டைனிங் டேபிளில் வட்டமாக அமர்ந்து விருந்து சாப்பாடு சாப்பிட்டவர்கள் காரில் வெளியே சர்ச்சுக்கு போகிற வழியில் லாரி மோதி இறந்தார்கள். அவன் இப்போது வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பத்திரிக்கையில் பணி புரியும் வேல் முருகன்தான் அந்தச் செய்தியையும் சேகரித்தான்...!
அப்படியே போய் இடது பக்கம் திரும்பினால் அங்கிருந்த பிளாட்டில் ஒரு சேட்டுக் குடும்பம் வசித்து வந்தது. எட்டுப் பேர் கொண்ட பெரிய குடும்பம்.. எப்போது பார்த்தாலும் ஆஞ்சநேய ஸ்தோத்திரம் போட்டு விடுகிறார்கள். ஆவி பயமோ? இவர்கள்தான், இவர்கள் மட்டும்தான் நந்தினியின் அண்டை வீட்டுக்காரர்கள்.
இரவு பத்து மணி வரை எல்லாம் நன்றாய் இருந்தது! அதன் பிறகு விதி தன் முதல் காயை நகர்த்தியது!
தொடரும்