அழுக்குக் கரம் கொண்ட அப்பாவிற்க்கு

என்னங்க நேரம் அதிகாலை அஞ்சு மணியாச்சு குளிச்சு முடிச்சு ஆறு மணி பஸ்சப் புடிச்சாதான் நீங்க மதியச் சாப்பாட்டுக்கு மகன் வீட்டுக்குப் போக முடியும் என்று கூக்குரலில் கூச்சலிட்டாள் குங்குமப் பொட்டுக்காரி குருவம்மா...

பதறி எழுந்து பாய் சுருட்டி
பல் துலக்கி மேல் அழுக்கு விலக்கிக்
குளித்து படிந்த அழுக்குப் பருத்தியாடை உடுத்தி பஸ் ஏறி
கையசைத்தான் கருப்பையா தன்
காதல் பொண்டாட்டிக்கு...

உடலில் கிழிஞ்ச துணியாக இருந்தாலும் கிராமத்தில் கிழியாத நல் மனம் கொண்டவன் கருப்பையா...

செம்பட்டி செம்மண் காட்டில்
செங்குருதி சிந்தி செம்மையாய்ப்
படிக்க வைத்தான் தன் மகன்
செல்லப்பாண்டியை..

கோயம்புத்தூரிலே கோட்டு சூட்டு போட்டுப் பாக்குற வேலை கெடச்சது பாண்டிக்கு...

அண்ணன் மக அன்னப்பூரணியக்
கட்டி வச்சா அழுங்காம குழுங்காம
இருக்கலாமேனு அடம்புடிச்சு கல்யாணத்தையும் முடிச்சு வச்சா குருவம்மா அத கொஞ்ச நாள்லயே
தனிக் குடித்தனமாப் பிரிச்சு வச்சா
அன்னப்பூரணி...

எண்ணம் மேல மண்ணு விழுந்தத எண்ணி கண்ணுல தண்ணி விட்டா
குருவம்மா...இப்படி பழைய கதையெல்லாம் அசை போட்டுக் கொண்டு கோயம்புத்தூர் பஸ் ஸ்டாண்டு வந்து சேந்தாரு கருப்பையா..

மாலை போட்டுக் கூட்டிப் போக மகனும் வரல...
மதிய வெயிலுப் படாம குடை புடிக்க மருமகளும் வரல...

அன்னையத் தொலைச்ச ஆட்டுக் குட்டிக்கெல்லாம் ஆதரவா வரும்
ஆட்டோக்காரன்தான் இந்த வயசான
ஆம்பளைக்கும் அன்றைக்கு ஆண்டவன்...

வீட்டு வாசலிலே ஓடி வந்த பேரக்குழந்தையின் தலை மேல் ஓர் இடி..தந்தவள் வேராருமில்லை தரமில்லா தன் மகனுக்கு தாரமாய் வந்தவள்தான்...

அக்கம் பக்கம் ஆடிய குழந்தைகளையாவது கொஞ்ச எண்ணி படையெடுத்தான் பக்கத்து வீட்டுப் பட்டுக்குட்டிக்குப் பக்கத்திலே...

தன் பேரக்குழந்தையாய் நினைத்து கட்டி அணைத்து முத்தமிட்டான் அந்த முதுகு வளைந்தவன்...

அந்த ஆனந்த நிமிடங்கள் முடிந்த அடுத்த நொடியே அலறல் ஓசை கேட்டது பட்டுக்குட்டியின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியைக் காணவில்லையென்று...

அக்கம் பக்கம் கூடி அக்கிழவனை
அடித்து அடித்துக் கேட்டது அந்த
உருகும் தங்கம் எங்கே..???
என்று உருகாத உள்ளம் கொண்டு...

தடுக்க மனமின்றி தடுப்பது போல்
நடிக்கின்றனர் மகனும்,மருமகளும்...

"படைத்தவன்தானே பாட்டாளிகளுக்கு பங்காளி "அவன் இதைப் பார்க்க மனமின்றி கூட்டத்தில் ஒருவனைப் பார்க்க வைத்தான் அந்தப் பட்டுக்குட்டிப் பாப்பாவின் சட்டைப் பொத்தானில் பொன் நிறம் கொண்ட
சங்கிலியை..

மன்னிப்புக் கேட்டு மறைந்தன கூட்டம்
'கதிரவன் முன் காயும் மழைத்துளிகள்'
போல்...

அடிபட்ட இடத்தில் ஆறுதலாய் மருந்திட ஆளில்லை "அழுக்குக் கரம் கொண்டு அரசனை உருவாக்கிய அந்த அப்பாவி(ற்)க்கு"....

ஊர் திரும்பி ஊதுபர்த்தி ஏற்றி குல சாமி கருப்பனிடம் வேண்டினான் அந்தக் கருப்பையா..
என் மகன் குடும்பத்த நீ தான் தலைமாடு காக்கனுமென்று...

"நமது அப்பாவினை ஒருபோதும் அப்பாவி ஆக்கி விடாதீர்கள்"..

எனது அப்பாவிற்க்குச் சமர்ப்பணம்.


செ.மணி

எழுதியவர் : செ.மணிகண்டன் (13-Mar-15, 4:11 pm)
பார்வை : 377

மேலே