கவிஞர் சினேகன் வார்த்தைகள் வரிகளாக

{...... கவிஞர் சினேகன் அவர்கள் சில வருடங்கள் முன்பு ஒரு தனியார்
தொலைகாட்சிக்கு ( நம் இன்றைய சமூகம் சார்ந்து பேசியது ) அளித்த
பேட்டியில் பாதிக்கபட்டு எழுதிய வரிகளில் சில என்பதை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன் ......}




முன்னொரு காலத்தில் எல்லாம்
முகவரியை தான் தொலைத்தார்களாம்
அவைகளை தேடவும் செய்தார்களாம்


இன்று நாமோ
முகங்களையே தொலைத்து விட்டு
தேடாமல் இருக்கிறோம்


ஆம் நவீன யுகத்தில் பிரசவித்த
அடுக்குமாடி குடியிருப்புகளில்
அக்கம் பக்கத்தினர் பெயர் கூட ஏன்?


முகம் கூட தெரியாமல்
நான்கு பக்க கல்லறை பிணமென
வாழக் கற்றுக் கொண்டு விட்டோம்



அறிவியலின் வளர்வில் கிடைக்கப்பெற்ற
தொலைக்காட்சிகளிலும் கணினிகளிலும்
தன் முகங்களையும் உணர்வுகளையும்
பூட்டி வைத்துக் கொண்டு அலாதி பிரியம் கொள்கிறோம்



தாத்தா பாட்டி அத்தை மாமா
எண்ணிலடங்கா செந்நீர் உறவுகளை
ஒரு சேர தூக்கு மேடை அனுப்பி
மரணிக்க வைத்து பிணவறை கடத்த செய்த

நாமோ
நம் பாரம்பரிய பண்டிகையான
பொங்கலையும் தீபாவளியையும்
வீட்டிலே கொண்டாடி விட்டு
ஊடகத்தின் முன் சந்தோஷத்தையும், மகிழ்வுகளையும்
பகிர்ந்து கொள்கிறோம்.....



அது சரி பண்டிகையாவது கொண்டாடுகிறோமே
அது வரையிலாவது நம் பண்டைய நாகரிகம் காக்கப்படுகிறதே
நம் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டிய தருணம்
இது தான் (போலி)ருக்கிறது.....



உணவு பயிர்கள் விளையும்
விளை நிலங்களையும் விலை கொடுத்து வாங்கி
புதிய கட்டிடம் அயல்நாட்டு பாணியில்
அதிலும் அயல்நாட்டு பாணிதான்
நம்முடைய கட்டிடக்கலையைக்
கூட மறதியில் தொலைத்துவிட்டோம்
வரலாற்றையே மறந்து விட்டோம்
வரலாற்றுச் சம்பவங்கள் எந்த மூலை



ஆடைகளை திறந்திருந்த கற்கால
ஆதி மனிதன் கூட இன்றைய தேதியில் இல்லை
ஆனாலும் அவன் மூர்க்க குணங்களை
மூட்டை கட்டிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
ஆடைகளை வசீகரித்த இக்கால
அறிவியல் மனிதனாக


புற்களின் மீது உறங்கும்
பனித்துளிகள் கூட தான் இறக்கின்ற வரை
உலகை ரசிக்க வைக்கின்றன
நாமோ! பனித்துளிகளை ரசிப்பதுமில்லை!
பனித்துளிகளாய் வாழ முற்படுவதுமில்லை!



எந்தவொரு நிகழ்வுகளிலும்
உணர்வுகளை உலர்த்திக் கொண்டு
உறங்கி விடுகிறோம்!
உணர்வுகளை வெளிப்படுத்த
ஆயிரம் பேர் வெளியில்
இருக்கிறார்கள் என்று


நம் முன்னோர்கள் புகைப்படம் கூட
இன்று நம்மிடமில்லை அவர்களின்
திறமையும் அழகையும்
நேசிப்பதற்கு ஆனால்


நமது அறைகளில்
யாருக்கும் பயனற்ற
சினிமா நட்சத்திரங்களின்
படங்களை சேகரித்து வைத்துளோம்
அவர்களின் திறமையும் அழகையும்
நேசித்து பிரியம் கொள்கிறோம்



இது பரவாயில்லை
சமூக வலைத்தளங்களில்
நண்பர்கள் என்று முன் பின் தெரியா
அயலாரின் புகைப்படங்களை
வடிவமைத்து பத்திரப்படுத்துகிறோம்
அவர்களின் விருப்பு வெருப்புக்களை
சோதித்து பட்டியலிடுகிறோம்



ஏன் இந்த விருப்பு வெருப்புக்களை
உற‌வின‌ர்க‌ளிட‌ம் அறிவதில்லை
ஏன் இந்த நேசத்தை
நம் சுற்றத்தாரிடம் வெளிக் கொணருவதில்லை?

இதற்கு யார் காரணம்
அறிவியலா!
இல்லை இதில் அறிவுற்றுக் கிடக்கும்
ஆறு அறிவு படைத்த இயந்திர மனிதன்



இவன்
சிந்திப்பதுமில்லை!
சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குவதுமில்லை!
இந்த இயந்திர மனிதன்
யோசிக்காமல் இருப்பதால்
நம்மை நாமே மறக்க வேண்டிய நேரம்
வெகு அருகில் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை




_________________________________________________________
பாரம்பரியத்தை தொலைத்த தமிழர்களில் நானும் ஒருவன்
பாரதி செல்வராஜ். செ
_________________________________________________________

--------->>>>>இந்த வரிகள் கவிஞர் சிநேகனுக்கு சமர்ப்பணம் ---------->>>>>

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (14-Mar-15, 8:33 am)
பார்வை : 5248

மேலே