பெருமையுடன் வாழ்வீர் வையகத்தில்

​அலங்கார அன்னத்தின் சோகம்ஏனோ
சிங்கார உருவத்தின் குறைஎன்னவோ
தனித்து வருந்தும் காரணம்என்னவோ
சிந்திடும் கண்ணீருடன் சிந்திப்பதனோ !

காத்திருந்தும் வரவில்லை என்பதாலோ
காயம்பட்ட இதயமும் வலிப்பதாலோ
விரும்பியவன் உன்னை விரும்பலையோ
ஊடலால் விளைந்த உட்கட்சிகுழப்பமோ !

காதலனுக்கு நடந்தேறிய திருமணத்தாலா
ஒருதலை காதலென்பதை அறிந்ததாலா
காதலனை வேறுபெண்ணுடன் கண்டதாலா
காதலும் அறுந்திட்ட பட்டமானதாலோ !

காதலுக்கு எதிர்ப்புக்கள் தோன்றியதாலோ
பெற்றவர்களே மணத்திற்கு மறுத்ததாலோ
காதலனின் உள்நோக்கத்தை அறிந்ததாலோ
எதிர்காலத்தை எண்ணி வருந்துவதாலோ !

கன்னிப் பெண்களின் சோகமென்றாலே
எண்ணிட வைக்கிறது இப்படித்தானே !
ஆய்ந்து உணர்ந்திடுங்கள் கன்னியரே
அறிந்திடுங்கள் காலத்தின் மாற்றத்தை !

உண்மையை உரைப்பீர் பெற்றவரிடம்
பெண்மையை காத்திடுவீர் உயிராகவும் !
பெருமையுடன் வாழ்வீர் வையகத்தில்
பெருமகிழ்ச்சி கொள்வீர் வாழும்வரை !

அலைபாய விடாதீர் உங்கள்மனதை
இல்லறம் தொடங்குவீர் நல்லறமாக !
சம்மதிக்க முயல்வீர் இருவீட்டாரும்
ஊரும் உலகும் போற்றிட வாழ்வீர் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (14-Mar-15, 9:27 am)
பார்வை : 214

மேலே