யுகங்கள் தாண்டும் சிறகுகள் -5 கவித்தாசபாபதி

"அவன் ஒரு வித்தியாசமான இளைஞன் : லட்சியங்களை கண்களில் சுமந்து கொண்டு வாழ்வை அழகு படுத்த வந்தவன்: கவிதையெனும் சித்திரக்கூடத்தில் தூரிகையாக மட்டுமல்ல வண்ணங்களாகவும் தன்னைப் பிழிந்தெடுத்துக் கொண்டு தவம் செய்கிறவன்.

சாதி மத பேதமற்ற சமூகக் காடுகள் புகுந்து போகிற நாளையுலக நந்தவனம் தனது முதல் வசந்தத்தில் சிவப்பு ரோஜாக்களால் இவனுடைய பூபாளத்திற்கு தலையசைக்கும்.

இவன் குரலெடுத்துக் கூவும்போது சரியாக எங்கள் வானம் விடியும் " என்றெல்லாம் ***புதுக்கவிதையின் தேவனால்*** ஆசீர்வதிக்கப்பட்டவன் அவன்.

"விபத்துக்கும்
தப்பித்தலுக்கும்
இடையேயான தூரத்தில்
வாழக்கை

இக்கணத்தை இனிமை படுத்தலே
அதன் நோக்கம்
இதை உணர்தலே என் பலம்
இதை உணர்தலே என் அமைதி
இதுவே என் அழகு "

என்று ஆசைப் பெருவாழ்வை அரை நொடிக்குள் அடக்க தெரிந்த அவன் எப்போதும் மரணத்தைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பான.

ஒவ்வொரு நாளின் துவக்கத்திலும் மரணத்தை ஒரு கணம் நினைத்து அந்த நாளுக்குள் இறங்கினால் குழப்பங்கள் , கோபங்கள் , பொறாமையின் பேய் விரல்கள் நம்மை வழிமறிக்காது என்ற ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டிருப்பான்.

நான்
மௌனத்தின் கனவு
உறக்க ஒத்திகைகளின்
அரங்கேற்றம்,
சொர்க்கத்தின் நிழல்
உயிரின் புன்னகை

என்று மரணத்தின் குரலாக ஒலிக்கும் அவன் வரிகளில் மரணம் கூட அழகு பெற்றுவிடுகிறது.

வரலாறு வெற்றிப்பெற்ற கலவரத்தை புரட்சி என்கிறது.. ஒடுக்கப்பட்ட புரட்சியை கலவரம் என்கிறது. தீவிரவாதியை போராளி என்கிறது. போராளியை தீவிரவாதி என்கிறது. .. அந்தவகையில் அவனும் ஒரு தீவிரவாதியே .

"ஒரு தீவிரவாதியின் காதல் டைரி " ஒரு நல்ல கவிதை. மரணம் எல்லோருக்கும் நிகழ்கிறது.... அவனுக்கு..?

"என் மலரில்
சூல் கொண்டிருப்பது
தேனல்ல ..
தீ !" என்னும் அவன்,

"ஒரு
சிறிய குப்பிக்குள்
என் மரணத்தை
நிரப்பி வைத்திருக்கிறேன் " என்று மயிர் சிலிர்க்க வைக்கிறான்..உயிர் சிலிர்க்க வைக்கிறான்.

"தமிழின் பெருமைகளைப் பற்றி பேசும் நூல் அறிவியல் பூர்வமாகவும் நவீனமாகவும் மரபின் அழகு குலையாமல் நம்மிடையே சிங்காரம் செய்கின்ற பணியிலும் ஈடுபடவேண்டும் . அதற்கு இந்த வரிகள் சரியான சாட்சியங்கள் ." என்று சிறகு முளைக்கும் காலங்களில் அவன் எழுதிய இந்தக் கவிதை வரிகளை ***கவிதேவன்*** ரசித்து போற்றியது..... அது ஒரு காலம் ..!

சயனைடு குப்பிகளில் நிறைந்திருக்கும் நூற்றாண்டு கால லட்சிய தாகம் தணியாமல் எரிந்துபோன வரலாற்று சூழ்ச்சியில் அவன் இன மக்களின் படுகொலை பூமியில் அவன் சொற்கள் முக்தி பெறாமல் அலைகின்றன இப்போதும்......! சொல்லிவைத்த சொற்கள் என்றும் சாவதில்லை …..என்ன செய்ய?

"நான் மெல்ல
இறந்து போனேன்
நேற்றைய மெல்லிய
நிலா இரவில் .....

என்று தன் கடைசி யாத்திரையை தானே துவக்கி வைக்கும் அவன்,

"அதோ என் கல்லறையில்
தன் கணக்கில்
வரவைக் குறித்துக்கொண்டு
சுகமாக பீடி பற்றவைக்கிறான்
வெட்டியான் "

என்று தன் மரண ஊர்வத்தை முடித்துவைத்து நேர்முக வர்ணனை தரும் அவனை யார்தான் புரிந்துகொள்வார்கள் ?

ஆண்குழந்தை இல்லையே என்று தவமாய் தவமிருந்து ஏழைத் தாயொருத்தி அவனைப் பெற்றெடுத்தாள்.. அதனால் தான் அவன் மகா யாத்திரையை தாயிடமிருந்தே தொடங்குகிறான்.

பெண் தவம் புரிய
பிறவி கிடைத்தது
மண் தவம் புரிய
பிறவி முடிந்தது
கண்தவம் வளர்த்த
காட்சிகள் மறைய
கண்ணீர் உறவுகளின்
சாட்சிகள் கரைய
மகா யாத்திரையின்
மயானம் வந்தது..

மரணம் உயிருள்ளது. அது எப்போதும் நம்முடனே, நம் உணர்வில், உடையில், உணவில் , மூச்சில் கூடவே இருப்பது...........! மரணம் ஒரு இடப்பெயர்ச்சி. அது நம்மைவிட்டு பிரிந்து மயானத்துக்குச் செல்கிறது என்று..... கவிதை போதிமரத்தின் கீழ் கண்டறிந்த புத்தன் அவன்.

"உடற்சிறை மீண்ட
உயிர்புறா
உல்லாசமாய் உலாவும்
வனம்"

"மயானம்….
சொர்க்கத்தின் தொட்டில்
ஆசை, நிராசைகளை
சாம்பலாக்கும் யாகபூமி
வாழ்க்கை தொடரிசையின்
மவுன இடைவெளி
கல்லறைக் காவியங்களின்
பதிப்பகம்
நாட்டிய கடவுளின்
நடன அரங்கம்
நடைப் பிணங்களுக்கு மட்டுமே
புதைக்குழி"

"மயானம்
துயரக்கடல்களை
தாண்டியபின் வரும்
மணி்த்தீவு"

என்று மயான கீதம் பாடும் ஆண்டி அவன்.

வாடும் பயிர்கள் நீர்கொண்டு உயிர்க்கவேண்டும். பசி தன் பசியாறவேண்டும்.

"வயிறுகளின் பள்ளங்களிலேயே
முனகிச் செத்துவிடாது
பசி.

புகைந்து......
புகைந்து......
அது ஒரு நாள்
புரட்சியை ஊதும் "

என்று பசியின் மரணத்தைப் பற்றி பேச வந்தவன்'

"ஏழை என்றாலே
இருமித்தான் சாகவேண்டுமா
ஏன்
உருமிச் சாகக்கூடாதா ?

என்று ஒரே வரியில் புரட்சியை புரட்டிபோட்டதும் சில சமூக ஆர்வலர்கள் / போராளிகள் அவன் வரிகளை முத்தமிட்டு எடுத்துப்போய் மாநகர (கோவை, ஊட்டி ) சாலையோர மதில் சுவர்களில் கோட்டை எழுத்தில் பொதித்து வைத்தார்கள் 80 களின் இறுதியில். மேடைகளில் முழங்கினார்கள் ஒரு சிவந்த விடியலுக்காய். ..!

அவன் மீண்டும் மீண்டும் மரணித்துக்கொண்டே இருந்தான். தொலைந்து போவதிலும், மரணித்துப்போவதிலும் உள்ள சுகம் வேறெதிலும் இல்லை என்பதை உணர்ந்தவன். ஒரு வானம்பாடியின் சாயுங்கால ஏக்கம், ஒரு பயணம் சில ஏற்பாடுகள் என யாத்திரைகளுக்காகவே ஏங்கி தவிப்பவன்.

"நான் மெல்ல
இறந்து போனேன்
மவுனமே சாட்சியாய்...

என் இசை
உறங்கிவிட்டது
என் வயலினில் நாணேற்றிய
நரம்புகளின் அதிர்வுகள்
நின்றுவிட்டன

என் வானம்
இருண்டுபோனது
எனினும் இனியங்கு
நட்சத்திரங்கள் வரப்போவதில்லை

என் கடைசி இரவை
கனவுகள்கூட புறக்கணித்தன

சிவப்புநதி உறைந்துவிட்டது
அதில்
அலையலையாய்
அலையலையாய்
ஆடிவந்த
ஆசை வாழ்க்கை அடங்கிவிட்டது

கண்ணீர்த்துளிகளின்றி
கண்ணொளி அணைந்தது

யி
ரொ
ளி
மட்டும்........................!


பரம ரகசியத்துக்குள் ஒரு ரகசியமான அந்த ரகசியத்தைத் தொட்டுவிட்டவன் அவன். அவன் புதிதாக எதையும் சொல்லி வைக்கவில்லை. மூதாதையர் கற்றுத் தந்ததை கொஞ்சம் நினைவுபடுத்தினான் .அவ்வளவே. ..இருந்தாலும் அவன் நினைவுகளின் வெளிப்பாடு அழகாய் இருந்தன. ஏனெனில் அவை மிகவும் எளிமையானவை.

இவற்றை எல்லாம் யாதோ ஒரு வேற்றுமொழி கவிஞன் ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் உலகளாவிய பெருங்கவிஞன் என்று நீங்கள் உரைத்திருப்பீர்கள். ஒரு திரைப்பாடலாசிரியன் கூறியிருந்தால் தூக்கி வைத்து புகழ்ந்திருக்கக்கூடும். எனில், நீங்கள் அவனை ஒன்றுமே சொல்லாமல் சும்மாவே விட்டுவிட்டீர்கள்.

அவன் கல்லறையிலாவது ஏதேனும் எழுதி வைப்பீர்களா ....

"கிறுக்கன்" என்றாவது ?

(தொடரும்)






(பின் குறிப்பு :
இக்கட்டுரையில் *புதுக்கவிதையின் தேவன்*, *கவி தேவன்* என்று இரண்டு இடங்களில் எழுதியிருப்பது
கவியரசு . நா. காமராசனைக் குறிக்கும்...)

எழுதியவர் : கவித்தாசபாபதி (14-Mar-15, 12:02 pm)
பார்வை : 236

சிறந்த கட்டுரைகள்

மேலே