அவனும் நானும் ==0= குமரேசன் கிருஷ்ணன் =0==
''தன்னுயிர்'' தந்தயெம்
தந்தையால் அரசுப்பணியில்
வாரிசடிப்படையில்
வந்தமர்ந்தோம்
நாங்கள்..
வலிநிறைந்த...
வாழ்வின் தொடக்கத்தில்
வசந்தமாய் வந்தானவன் ..
முதல் பார்வையிலே
முன்ஜென்ம தொடர்பாய்
அகநட்புகொண்ட
அபூர்வமானவன் ...
அலைபேசிகள்
அப்போதில்லை
மணி ஏழானதும்
ஒர்புள்ளியில் கூடி
ஒன்றாய் பயணிப்போம்
நடந்து செல்கையில்
நகர்ந்து செல்லும்
மிதிவண்டிகளை
மிக ஏக்கமுடன் ரசிப்போம்
மாதம் நூறென சேமித்து
மிதிவண்டி வாங்கி
உலாவந்தோம்
ஊரெங்கும் சிறகுபெற்று ...
இரு கைகளை விட்டு விட்டு
இராட்சசனாய் மிதிப்பான்
மிதிவண்டியை ...கூடவே
வம்பிழுக்கும் எவனையும் ...
இருசக்கர மோட்டாருக்கு தாவி
நான்கு சக்கர வாகனம் நோக்கி
நகர்ந்தது கனவு ...
அவன் அழகானவன்
அவன் பார்வைபட்டபின்
பலவிழிகள் அவனைநோக்கி
புதுமொழிகள் பயிலும்
நிழலாய் சில தொடரும் ...
அவன் அசைவுகள்...
அத்தனையிலும் நானிருப்பேன் ..
நெல்லுக்கு பாயும் நீர்
புல்லுக்கும் பாய்வதுபோல்...
அடைமழை அவ்வப்போது
என்மேலும் பொழியும்...
நமட்டுச்சிரிப்புடன்
நகர்வானவன் எதுவும்
நடவாததுபோல் ...
மட்டைபிடித்து விளையாடிய
மறவாத நாட்கள் ...
கிணற்றில் நீச்சல் பழகிய
நீங்காத பொழுதுகள்...
ஆலமரத்தில் அடையவரும்
பறவையின் கீதங்களென...
என் எல்லாவற்றிலும்
அவனிருந்தான்...
அவளமர்ந்த பெஞ்சுகள்
அவள் நடந்த தெருக்கள்
அவள் உதிர்த்த பூக்கள்
அவள் மொழிந்த சொற்களென
ஒவ்வொன்றையும்
ஒளித்தலின்றி மொழிவான்
அவன் காதல் வயப்பட்டபின்
அவனின் ரசனைகள்
அதிசய மொழிகளுரைத்தது
நாட்கள் நகர்ந்தது
பணி நிமித்தமாய்
பயணித்தோம் பாதை மாறி
புதிய திசைகளில்....
என்னைச் சுற்றி
புதிய நண்பர்கள் வட்டம்
அவனைச் சுற்றியும்
அவ்வாறே ...!
அவ்வப்போது
அலைபேசியில்
அகப்படுவான்
அளவிலாது பேசுவான்
சிலநேரங்களில்
சிரித்து மழுப்புவான்
சிலவற்றை ...
அன்றொரு இரவு
அலைபேசி அலறியது
அன்பு நண்பனவன்
அளவில்லா போதையில்
வீதியில் அனாதையாய்
வீழ்ந்து கிட.க்கிறானென்று...
உள்மனம் சில்லு சில்லாய்
உடைந்து நொறுங்கியது
உயிர்பிரியும் வலிசுமந்து ....
----------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்