வாழ்த்துக்கள் சொல்லி விடைபெறுவோம்

யாரென்று தெரியாத
நீயும் நானும் இங்கே-ஒரு
வெற்றுப்புன்னகையோடு
இச்சிறுயிடத்தை பகிர்ந்துக்கொள்கிறோம்.

ஒவ்வொரு குலுங்கலும்
நமக்கிடையேயான மௌனத்தை
கலைத்தவாறு தொடரும் பயணம்
மன்னிக்கவும் என நானும்
பரவாயில்லை என நீயும்.

நகரத்து வெயில்
உடல்கொண்ட வெம்மை
வழிகின்ற வியர்வை
நிலைக்கா பார்வை
இச் என்ற சலிப்பு
கூட்டத்தின் நமைச்சல்
இ்த்தனையும்
உனக்கும் எனக்கும்
சமமாகவே.

பகிரூர்தியிலிருந்து இறங்கி
பத்து ரூபாய் நீட்டயில்
ஓட்டுநர் முன் இன்னொரு கரம்
என் கையுரசி நீள்கிறது
அதுவும் உன்னுடையதே.

இப்பொழுதும் ஒரே திசைநாேக்கி
இருவரும் நகர்கிறோம்

அர்த்தமுள்ள புன்னகையோடு
இப்போது நீ வணக்கம் சொல்கிறாய்
தேவைப்படும் கேள்வியாக நான்
பெயர் கேட்டு காத்திருக்கிறேன்.

அனந்தன் என்கிறாய் நீ
அகமது நான் என்கிறேன்.

இதோ நாம் எழுதப்போகும்
இப்பொதுப்பணித் தேர்வு
'சி' என முடியும் ஏதோவொரு பிரிவில்
நம்மை பிரித்துவிடும்.

இப்போதைக்கு
வாழ்த்துக்கள் சொல்லி
விடைபெறுவோம்.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (18-Mar-15, 1:15 am)
பார்வை : 262

மேலே