முனுசாமிக் கிழவன்

நிலத்திலும் நீரிலும்
பயணம் செய்து
அலுத்துப் புளித்துவிட்டதால்
இப்பொழுது
வான்வெளிகளிலும்
வாகன நெரிசல்களாம்

பாவம் பறவைகள் என்று சொல்லி
அனுதாபம் காட்டக்கூட இனி
பறவைகள் இருக்கப்போவதில்லை

ஓசோன் மண்டலம்
ஓட்டையாகிவிட்டதென்று சொன்னார்கள் - ஆனாலும்
நாங்கள் அடங்கிவிடுவோமா என்ன?

நாளுக்கு நாள் நாங்கள் ஏவிய
ஏவுகனைகள்
ஓசோனின் இதயத்தை
பொத்தல் பொத்தல்களாக்கி விட்டதோடல்லாமல்

லட்சக்கணக்கான விமானங்களைவிட்டு
ஓசோனின் உடலை
நாற் நாறாய் கிழித்தும் வீசிவிட்டோம்

நீர் சுருங்கி
நிலம் சுருங்கி
உயிர் சுருங்கி
ஊரும் உறவும் சுருங்கி - சிறு
கணணி உலகமாகிப் போனது

பிறிதொரு நாளில்
நிரந்தரமாய்
சூல்கொண்டது வெப்பசலனம்

தீயாய் உரசும் காற்றுக்கு பயந்து
ஓடி ஓடி ஒழிய வேண்டிய வாழ்க்கை

கருந் தீ போர்த்திய
கருநெடு இரவோ
கட்டியணைத்து
கங்குகளை துப்புகிறது

எங்கயாவது சில இடங்களில் மட்டும்
சில மரங்கள் உயிரோடு இருந்தன

பல மரங்கள் மனிதனின்
மூச்சுக் காற்று பட்டே
பட்டுப் போய் விட்டன

உச்சி நேரம்
நெருப்புக் காற்று;
மூச்சுத் திணறியது
முனுசாமி கிழவனுக்கு

எண்பது வயதிலும்
கைத்தடி ஊன்றி
எட்டி எட்டி நடந்தார்
எப்பொழுதும் இளைப்பாறும் அரச மரம் தேடி

ஊருக்கு நடுவினிலே
உயர்ந்து நிற்கும் மரம்
பார்த்தாலும் கண் குளிரும்
பரவசமாய் உடல் சிலீரும் - இன்றோ
அவர் பார்வைக்கு அது கிட்டவில்லை

எங்கே போயிருக்கும் அந்த மரம்?
ஒருவேளை
இரவோடு இரவாக
இடம்பெயர்ந்துவிட்டதோ?

மனதில் எண்ணிக்கொண்டே
அந்த இடத்தை நெருங்கியவர்
ஐயோ என்று பதறினார்

வானளவு உயர்ந்த மரம்
வருவோரை காக்கும் மரம்
பறவைக்கும் வீடுதந்து
பழங்களையும் அதற் கீந்து
பரந்திருந்த பச்சை மரம்
பிணமாகி கிடந்த தங்கே...

ஐயோ அநியாயம்
அந்தோ... பரிதாபம்

முனுசாமிக்கு கிழவனுக்கு கை காலெல்லாம்
தட தடவென்று நடுங்கியது
மனது பட படவென்று நொறுங்கியது

அய்யா என்ன காரியம் பண்ணிட்டிங்க;
என்றவாறே மரத்தை வெட்டிக்கொண்டு
இருந்தவர்களின் அருகில் சென்றார்.

ஆசைக்கு ஒரு மரம்தான்
அய்யா இங்கே இருந்ததுங்க
அதையும் விடவில்லையே - அடப்பாவி
சண்டாளா... என்றேதான்
நரைக்கிழவன் நாவுலர புலம்புகிறான்...

மரம் நெடுங்கிடையாய் கிடந்தது
உடலையும் கிளையையும்
கரங்களையும் துண்டு துண்டாக
வகுந்துகொண்டு இருந்தார்கள்

அவர் மனைவி அருக்காணி
அறுபதுல போனபோது
அஞ்சாத விழியோரம்
அரும்பவில்லை கண்ணீரும்;
இன்றவர் கண் குளமாகியதே

அரச/னாய் இவ்வூரை ஆட்சிப் புரிந்த
அரச மரத்தை அழித்து அநீதிழைத்த
அரக்கனே பஞ்சத்தை ஊட்டியேநீ - பாரொழியும்
பேரழிவிற்கு ஊதினாய் சங்கு

என்று முனுசாமி கிழவர் சொல்ல

அய்யா பெரியவரே அகவையில் மூத்தவரே
அரச மரமென்ன ஓங்கப்பன்வீட்டு சொத்துங்களா?
அர்த்தம் புரியாம அம்புட்டு பேசுறிங்க
ஆட்சித் தலைவருதான் அறுக்க சொன்னாரு

என்று மரத்தை வெட்டிக்கொண்டு
இருந்த ஒருவன் கூற...

ஆட்சித் தலைவருதான் அறுக்கச் சொன்னாரா?
ஏன் சொன்னாரு?
எதுக்காக சொன்னாரு?! என கிழவன் கேட்க.

அன்பாக சொல்லுகிறேன் அய்யா கேட்டுகங்க
அரசமரத்தை வெட்டி அப்பால வீசிபுட்டு - அதுஇருந்த
இவ் விடத்தில் கௌதம புத்தருக்கு
சிலையொன்று எழுப்பிடவே போகிறது அரசாங்கம்.!

என்று அவன் கூறிடவே

முனுசாமி கிழவனைப்போல்;- மரத்தடிக்கு
மூச்சு வாங்க வந்தவர்கள்
ஒருவர் முகத்தை இன்னொருவர்
உத்து உத்து பார்த்தார்கள்
உதட்டைப் பிதுக்கிக் கொண்டார்கள்...!


-----------------நிலாசூரியன்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர். (18-Mar-15, 2:29 pm)
பார்வை : 87

மேலே