ஒரு நாள் கடவுள்
ஒரு நாள் மட்டும்
கடவுளாய் மாறி
எதையும் செய்திட
கிடைத்தது ஓர் வரம் !!!
நோய் எனும் பேய் காட்டி
சின்னஞ்சிறு உயிர்களை
கொய்யும் கொடூர
கோட்பாட்டை மாற்றி
அப்பா, மகன் , பேரன் எனும்
வரிசையிலேயே
அமரர் ஊர்தியில்
அழைக்கணும் எனும்
அவசர சட்டம் அமலாக்குவேன். ..
பசியெனும்
பயங்கரவாதியை
பிரேதமாக்கி
பிரபஞ்சம் தாண்டி
புதைத்திடுவேன்....
மகப்பேறு வலி
உண்டாக்கும் கிலி -இனி
எவ்வுயிர்க்கும் இல்லை என
உத்திரவாதம் கொடுத்திடுவேன்....
முதுகின் பொதி இறக்கி
மூளையில் பொறி வளர்த்திட
கல்வியில்
மாற்றம் புகுத்திடுவேன்
ஆசிரியரும்
அன்றாடம் கற்றிடவே....
கண்ணீர் , காணிக்கை
விரதம், சிரமம் யாவும்
விரயம் மனிதனே - உன்
வினையை மட்டும் ஆற்று
உடனிருப்பார் கடவுள் எனும்
உண்மையை உரைப்பேன்
மனித குலத்துக்கு....
சாதி, மதம்,, மொழி
இனம், நிறம் எனும்
சாணக்கியத்தனங்களின்
சாக்கடைக்குள் விழுந்து
சாகும் அப்பாவிகளின் புத்தியில்
பகுத்தறிவு சுடர் ஏற்றி வைப்பேன்....
மகத்தானது உலகில்
மனித நேயமே...
மற்ற எந்த ஜெபமும்
பிந்தி வருமே....
உதவி செய்யுங்கள் முடிந்தவரை
தவிக்கும் இதயங்கள்
இருக்கும் வரை...
உதவி செய்யுங்கள் ....
இந்த கடவுளின் ஒரே பிரார்த்தனை
உங்களிடம்
இதுவே...இதுவே...