என் தாயே என் குருவே

என் தாயே என் குருவே!

என்தாயே என் குருவே!--என்னை
இப்படியும் ஏன் வளர்த்தாய்?
இன்னும் நான் அப்படியே-புவியில்
இருப்பதுவும் சோதனையோ!

வாழ்த்துப் பாடி வளர்த்தாயோ--அதனால்
வசை மொழிகள் தெரியலையோ!
காழ்ப்புணர்ச்சி வளர்க்கலையோ--உறவில்
கள்ளம் பேசப் புரியலையே!

கூடி வாழச் சொன்ன தாயே--கொடும்
கோபம் ஆளச் சொல்லலையோ!
ஓடியுதவ விட்ட நீயே--என்னை
தேடி ஓடச் செய்யலலையே!

பாசந் துலக்கிப் போனதாயே--சந்தர்ப்ப
வேசம் விளங்க பழக்கலையோ!
அன்பைக் காட்டிப் போனதாயே---சொந்த
ஆசை ஊட்டத் தோணலையோ!

மெய் பழக்கிப் பறந்த தாயே--உலகப்
பொய் பழக்க மறந்தாயோ!
கை நீட்டக் கடிந்தாயோ---பணப்
பை தேடப் படிக்கலையே!

மதிக்கக் கற்றுத் தந்தாயோ--வேட்டி
மடித்துக் கட்டத் துணிவில்லையே!
துதிக்கச் சொல்லித் தந்தாயோ--சிறு
துரும்பைக் கூடக் கிள்ளலையே!

கனிந்த சொல்லே உதிர்த்தாயோ--ஒரு
காய் கடித்தும் சுவைக்கலையே!
பணியக் கற்றுத் தந்தாயோ--மாறி
இணங்கி வாழ அறியலையே!!

நன்மை போற்றிக் காத்தாயோ--சிறு
தீமை ஏதும் அறியலையே!
அறிவு எல்லாம் கொடுத்தாயோ--நேர்மை
நெறி விலக விளங்கலையே!

பிரியம் நெஞ்சில் நிறைத்தாயோ--நேசப்
பிரிவைத் தாங்கக் கூடலையே!
கனவிலேனும் வருவாயோ--தாயே
காட்டி துயில் தருவாயோ!

எந்தையுடன் நீ கூடி---இறையில்
இணைந்தாயோ!கலந்தாயோ!
உந்தன் மடி பயில மீண்டும்--அம்மா
எந்தன் விடை அருள்வாயோ!

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (20-Mar-15, 12:15 pm)
சேர்த்தது : கொ.பெ.பி.அய்யா.
பார்வை : 342

மேலே