கடன் அன்பை முறிக்கும் தாயின் நிலையின்று

கடன் அன்பை முறிக்கும்  தாயின் நிலையின்று

அன்பு நண்பர்களுக்கு,

பாசத்தை மறந்து, பெற்றத் தாயையும் மறந்து பேரின்ப வாழ்க்கைக்காக செல்வத்தையும் பொருளையும் தேடி அலைந்து திரியும் மனசாட்சி இல்லாத மனிதர்களுக்கு என் வரிகளின் சாடல்.. கடன் அன்பை முறிக்கும் என்பது போல் தாயின் நிலை இன்று தீர்க்க முடியாத் துயரத்தில் இருக்கிறது...!

எத்தனை பிறவி எடுத்தாலும் நம்மால் கருவறையில் சுமந்த கடன் திருப்பித்தர இயலுமா ? தரமான தாய்ப்பாலை கணக்குபோட இயலுமா.. ? வெயில் மழை சுமந்து நம்மை ஆளாக்கிய தாயன்பை பட்டியலிட முடியுமா... தன் உடல் பொருள் ஆவியோடு உழைத்த அத்தனையும் கொடுத்து கடைசிவரை நாம் நலமாக வாழவேண்டும் என்று அன்பை மட்டும் எதிர்பார்த்து நிற்கும் அன்னைக்கு நாம் செய்வது என்ன? அன்பு எனும் ஒரு வார்த்தைக்காக இத்தனை கடன்களை சுமந்து நிற்கும் தாய்க்கு நாம் இன்று சமூகத்தில் பார்க்கும் அவலங்கள் எத்தனை...? விருப்பு வெறுப்பு எதுவென்றாலும் அவள் வாழ்க்கையை அன்னையின் சரித்திரத்தை கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம்..! மனமாறி அன்பு எனும் அன்னையை துதிப்போம்...! அவள் மனம் நோகாமல் நடந்துகொள்ள முற்படுவோம்...! சிந்திப்போம்...!

கடன் அன்பை முறிக்கும்..!

உயிர்கொடுத்து உருகொடுத்து
உள்ளதெல்லாம் கொடுத்தாள்
கள்ளமில்லா பிள்ளைமனம்
கருத்தோடு வளருமென்று

கல்விச்சாலை சுமைகளோடு
கணம்கூட வோய்வின்றி
இடுப்பிலேயே தூக்கிவைத்து
இரவெல்லாம் கண்விழித்தாள்

முழுதான தாயின்சேலையது
முக்கால்வாசி ஆகிவிடும்
சேயினவன் சேட்டையிலே
சேதாரமாய் கொடுத்தபின்பு..!

கனவுகளை யவள்சுமந்தாள்
கவலையது தீருமென்று
களைப்புத்தீர பிள்ளையவன்
கைகாலை பிடித்தபடி..!

காணிநிலம் அடகுவைத்து
கால்வயிறு கஞ்சிகுடித்து
கல்லூரி சேர்த்திடுவாள்
கடன்மட்டும் சொந்தமென..!

கடந்துவிடும் காலமெலாம்
கையில்வந்து கூடுமென
மனையைகூட இழந்துவிட்டு
மரத்தடியில் தவமிருப்பாள்..!

பட்டங்களை படித்தவனோ
பட்டிகாட்டை மறந்துவிட்டு
பெற்றதாய்க்கு இட்டபெயரோ
பேசாதே “கிழவி”யென்று..!

கிட்டவந்து எட்டிப்பார்க்க
கேவலமாய் எண்ணிவிட்டு
பிச்சைபோட்டு பறந்திடுவான்
பாசக்கடன் தீர்ந்ததென்று..!

நாடியெல்லாம் தளர்ந்தபடி
நாளும்மனம் நொந்தபடி
சுருங்கிப்போன தசைகளிலே
சுழலக் கண்ணீர்வந்தபடி..,

பற்றுவைத்த தாயெல்லாம்
பாசமற்றப் பிள்ளையாலே
கடைசிவரை துடித்தழுவாள்
கடன்காரி வாழ்க்கையென்று..!

எழுதியவர் : ராக்கிங் ஜாக் (20-Mar-15, 10:04 am)
பார்வை : 707

மேலே