வாழ்க்கை ஒரு முடிவில்லாத சீரியல்
வாழ்க்கை ஒரு முடிவில்லாத சீரியல்
நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கேரள நாட்டில் பாலக்காட்டில் உள்ள கல்பாத்தி கிராமத்தில். அங்குள்ளவர்கள் யாவரும் அங்குள்ள நதியில் நீராடி கோவிலுக்கு சென்று காலையிலும் மாலையிலும் வழிபாடு செய்து குழந்தைகளையும் அதே வழியில் வளர்த்ததால் என் குழந்தை பருவம் தெய்வ பக்தியால் நிறைந்து இருந்தது. என் அப்பா வருடம் தோறும் என்னை சபரிமலைக்கு அழைத்து செல்வார். அப்பா அங்குள்ள கிராம அதிகாரி ஆகவே அவருக்கு எங்கள் கிராமத்திலும் சுற்று புறம் உள்ள கிராமங்களிலும் மதிப்பு அதிகம்.
நான் பள்ளியில் சேர்த்து படிக்க செல்லுகையில் அங்குள்ள ஆசிரியர்களும் என்னை அன்போடு நடத்தினர். அங்குள்ள பள்ளியில் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர நேரம் வந்த பொழுது கோவையில் விவசாயக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது.அதில் சேர்த்து சில மாதங்களில் என் தந்தைக்கு கோவை நகருக்கு மாற்றலாகியது. அவர் அங்குள்ள அரசாங்க அலுவலகத்தில் அதியாரியாக வந்தார். அம்மாவும் அவரும் அங்கு வந்ததும் அரசாங்கம் அவர்களுக்கு ஒரு வீட்டை . கொடுத்தது. அப்பாவும் அங்கே குடியேறியதும் எனக்கு தகவல் கொடுக்க நான் கல்லூரி விடுதியில் இருந்து வெளியேறி அவர்களுடன் தங்கி கல்லூரிக்கு தினமும் பேருந்தில் சென்று வந்தேன். அப்பா எனக்கு சில மாதங்களில் கல்லூரிக்குச் சென்று வர ஒரு இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொடுத்தார். கல்லூரிக்கு செல்லும் பொழுது நான் அவரை அலுவலகத்தில் விட்டு செல்வேன்.அன்று கல்லூரியை முடித்து விட்டு மிகவும் சோர்வுடன் வீடு திரும்பினேன்.. அப்பொழுது மாலை 6 மணி ஆகியிருந்தது. என் அம்மா டிவியில் ஏதோ சீரியலை மிகுந்த கவனத்தோடு பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அம்மாவை நானும் அப்பாவும் நீ ஒரு சீரியல் பைத்தியம் என்று விளையாட்டாக சிரித்துக்கொண்டே கூறி கலாட்டா செய்வது வழக்கம்.அந்த அளவிற்கு சலிக்காமல் எல்லா சீரிலையும் பார்ப்பாள்.
அம்மாவிடம் நான் உள்ளே வந்தவுடன் காப்பி கேட்டேன். சீரியலை மும்முரமாக பார்த்துக்கொண்டு இருந்ததால், நான் சொல்வதை அவள் கவனிக்கவில்லை. பின்னர் நான் சிறிது கோபமாக காப்பி கொடு என்று அவளிடம் நெருங்கி வந்து கத்தினேன். அம்மா சமயலறைக்குச் சென்றார்கள். அதன் பின் டம்பளர் மட்டும் பறந்து வெளியே வந்தது. டம்பளரை எடுத்துக்கொண்டு நானே காப்பி போட்டு குடித்துவிட்டேன். சிறிது நேரம் கழித்து அப்பா வீட்டிற்கு வந்தார். அம்மா சீரியலில் மூழ்கி இருந்தார்கள். "சாப்பிட ஏதாவது செய்து தரா முடியுமா " என்று அப்பா அம்மாவிடம் கேட்டார். காப்பி கேட்ட எனக்கே டம்பளர் பறந்தது என்றால் அப்பாவிற்கு என்ன ஆகும் என்று ஆவலாக காத்துக்கொண்டு இருந்தேன். அப்பா மீண்டும் கோபத்துடன் குரலை உயர்த்தி கத்தினார், அம்மா சமையல் அறைக்கு சென்றார்.என்ன பறந்து வரப்போகிறது என்று பார்த்துக்கொண்டு இருந்தேன். அம்மா, அப்பாவிற்கு தட்டில் எதையோ எடுத்து வந்து போட்டார்கள். அதைப் வைத்த பின் மீண்டும் டிவிக்கு அவள் வர, எனக்கு மிகப் பெரிய ஆச்சர்யம் சின்ன அதிர்ச்சியும். அவை சில நிமிடங்களில் மறைந்தது. அப்பாவால் இரண்டு வாய்க்கு மேல் அதைச் சாப்பிட முடியவில்லை. அப்பாவின் கண்களில் கண்ணீர் வர அப்பா தட்டைத் தள்ளி விட்டு பாத்ரூம் நோக்கி சென்றார். அம்மா அதையும் கவனிக்க வில்லை. நான் என் பாடங்களைப் படிக்க சென்றேன்.
இரவு சாப்பிட வருமாறு அம்மா அழைத்தார்கள். சாப்பிடுவதற்கு உப்புமா செய்து வைத்து இருந்தார்கள். எனக்குப் பிடிக்காத உணவு ஒன்று உள்ளது என்றால் அது உப்புமா தான். இதற்கு சட்னியும் செய்து வைத்திருந்தார்கள்.
அம்மா செய்வதை சாப்பிட்டுத் தான் ஆகவேண்டும் வேறேவழியே இல்லை சாப்பிட வெளியில் செல்ல முடியாது கையில் காசும் கிடையாது அப்பாவிடம் கேட்க வெட்கமாக இருந்தது.ஏதும் சொல்லாமல் சாப்பிட்டு விட்டு ஒன்றுமே கூறாமல் தூங்க சென்று விட்டேன்.
நான் நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தேன். அப்பொழுது திடீரென்று ஒரு குரல் "டேய் எழுந்திருடா மணி 9 ஆகுது, கல்லூரிக்குப் போக வேண்டாமா " என்று அம்மா கத்தி எழுப்பிட நான் மணியைப் பார்த்தேன் அது ஏழு எனக் காட்டிட . எனக்கு கோபம் வந்தது அனால் அதை வெளிக் காட்டாமல் குளித்துவிட்டு கல்லூரிக்குக் கிளம்ப தயார் ஆனேன். காலை உணவைச் சாப்பிட உட்கார்ந்தேன். என் அம்மா சுட சுட ஆவி பறக்க எனக்கு பிடித்த இட்லியை எடுத்துவந்தார்கள். இட்லிக்கு மூன்று வகை சட்னி வைத்திருந்தார்கள். மூன்று வகை சட்னியா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம் ஆனால் அது தவறு "ஒன்று நேற்று இரவு வைத்தது, இரண்டாவது நேற்று காலை வைத்தது, இன்னொன்று அதற்கு முந்தைய நாள் இரவு வைத்தது"
என் அம்மா "இன்று போய் நாளை வா" எனச் சமைக்கும் வல்லமை பெற்றவள். நாளைக்கும் சேர்த்து இன்றே சமைக்கும் திறன் அவளுக்கு கைவந்த கலை என்பது எனக்கு தெரியும் . அந்த சட்னிகளைப் பார்த்ததும் இட்லி சாப்பிடும் எண்ணமே போய்விட்டது. எனக்கு பசி அதிகமாக இருந்ததால் இட்லியைத் திண்றாக வேண்டும் என்கிற சூழ்நிலை. அதைச் சாப்பிட்டு விட்டு கல்லூரிக்கு சென்றேன்,
கல்லூரியில் அன்று புதிய வகை பயிர்களையும் அவைகள் வளர வேண்டிய நிலத்தின் தன்மையும் குறித்து பாடமானதால் மிகவும் சுவாரசியமாக இருக்க நேரம் போனது தெரியவில்லை. கேள்விகளும் பதில்களும் தொடர வகுப்பு முடிந்த பின்னும் சிறிது நேரம் சென்றது பின்னர் எல்லோரும் வகுப்பில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டோம். அன்று அப்பாவை அலுவலகத்தில் இருந்து கூட்டிக்கொண்டு செல்ல வேண்டி இருந்ததால் அங்கு இரு சக்கர வாகனத்தில் சென்றேன் அப்பா வெளியே வந்ததும் என்னிடம் நாம் பக்கத்தில் உள்ள அன்னபூர்ணா ஹோட்டலுக்கு செல்லலாமா என வினவ நான் உடனே ஏதும் சொல்லாமல் அந்த ஹோட்டலுக்கு முன் வண்டியை நிறுத்தினேன்.அப்பாவும் நானும் உள்ளே சென்றோம்
எனக்கு பிடித்த இட்லியும் அவருக்கு பிடித்த நெய் தோசையும் கூடவே காப்பியும் கொண்டு வரச் சொன்னோம். அப்பாவும்,நானும் அவை வந்ததும் முக மலர்ச்சியுடன் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு புறப்பட்டோம். புறப்படும் பொழுது வானொலி பெட்டியில் "மனைவி அமைவ தெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்ற பாடல் வர இருவரும் மனம் விட்டு சிரித்த படி வண்டியில் ஏறினோம்.
என்றும் வீட்டிற்கு வந்தவுடன் அதே நிகழ்வுகள் அம்மா சீரியலில் முழுகி இருக்க நான் உள்ளே வந்ததும் சமையல் அறைக்கு சென்று டம்பளரை வீச நான் அதை எடுத்து கொண்டு காப்பியைக் கலந்து குடித்தேன். எனக்கு இதைத் தடுக்க முடியவில்லை. அப்பாவும் வீட்டிற்கு வந்தால் மீண்டும் சண்டை வரும். அம்மாவின் சீரியல் மோகம் எங்கள் வாழ்க்கையை நித்திய சீரியல் ஆக்கிவிட்டது.