வாழ்பவர் யார்

வாழ்பவர் யார்
பாவலர் கருமலைத்தமிழாழன்

எதுவொன்றும் புரியாத போதே நம்மின்
எழில்வாழ்க்கை தொடங்குகிற திங்கே ! நன்றாய்
எதுவொன்றும் புரிகின்ற போதோ நம்மின்
எழில்வாழ்க்கை முடிந்துவிடும் ! அதற்குள் ளாக
எதுவொன்றும் வருமென்றே கைகள் கட்டி
எதிர்பார்த்து வாழ்வதல்ல நல்ல வாழ்க்கை
எதுவொன்று வந்தபோதும் தளர்ந்தி டாமல்
எதிர்கொண்டு வாழ்வதுவே சிறந்த வாழ்க்கை !

விழிப்பதற்கே தூக்கமென்னும் உண்மை தன்னை
விழிகளிலே பதியவைத்து விழிப்பு கொண்டால்
வழிமறைக்கும் தடைகளெல்லாம் தூள்தூ ளாகி
வாழ்க்கைநன்றாய் வாழ்வதற்கே வழிகி டைக்கும்
குழிவீழ்த்தும் தோல்விமீண்டும் எழுவ தற்கே
கூன்நிமிர்த்தும் எனஉணர்ந்தே செயல்கள் செய்தால்
இழிவுதரும் தோல்வியிங்கே வெற்றி யாகி
இயல்பான வாழ்வோங்கி இனிமை கூடும் !

அழைக்காமல் வருகின்ற விருந்தை யாரும்
அன்போடு வரவேற்று மதிக்க மாட்டார்
உழைக்காமல் வருகின்ற உயர்வை யாரும்
உளம்உவந்து பாராட்டி மதிக்க மாட்டார்
பிழைப்பதற்கே எத்தனையோ பிழைப்பி ருந்தும்
பிழையின்றி வாழ்வதுவே வாழ்க்கை என்பர்
அழைப்பபிங்கே தரும்வகையில் பொருள்பொ திந்த
அறவழியில் வாழ்பவரே வாழ்வோர் என்பர் !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (20-Mar-15, 12:58 pm)
பார்வை : 72

மேலே