போதை நாடு

போதை நாடு
பாவலர் கருமலைத்தமிழாழன்

காந்திநாடு என்றழைத்த பெருமை யோடு
காந்திவழி நேருநாடு என்றே போற்ற
சாந்திநாடு எனவணங்கி சிறப்பு செய்ய
சமாதான நாடென்றே புகழ்ந்து பேச
ஏந்திகையில் ஆன்மீகம் பிறந்த நாடு
எண்ணற்ற ஞானியர்கள் வாழ்ந்து ; ஞால
மாந்தர்க்கே வழிகாட்டி நின்ற நாடாய்
மாண்புடனே திகழ்ந்திருந்த நல்ல நாடு !

வீற்றிருந்தே ஆட்சிசெய்த தலைவ ரெல்லாம்
வீடுசுற்றம் எண்ணாமல் நாட்டு மக்கள்
ஏற்றமொன்றே குறிக்கோளாய் உழைத்துத் தொண்டால்
எழில்சேர்த்த நாடென்றே உயர்ந்த நாடு !
வேற்றுமையில் ஒற்றுமையைக் கண்ட நாடு
வேறுவேறு மதமிருந்தும் மொழியி ருந்தும்
ஏற்றதாழ்வு இல்லாமல் இருந்த நாடு
எனஉலகோர் வியப்புடனே தொழுத நாடு !

மதபோதை சாதிபோதை மொழிகள் போதை
மனமெல்லாம் தன்னலத்துப் போதை யேறப்
பதவிபோதை அதிகாரப் போட்டிப் போதை
பணப்போதை அதைச்சேர்க்க ஊழல் போதை
விதவிதமாய் இலவசத்தால் வந்த போதை
விபரீத வன்முறைகள் போதை ; வாழ்வை
நிதமிங்கே அழிக்கின்ற மதுவின் போதை
நிறைந்திருக்கும் போதைநாடாய் ஆன தின்று !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (20-Mar-15, 1:08 pm)
Tanglish : pothai naadu
பார்வை : 288

மேலே