வீழ்த்த எழுவோம்

வீழ்த்த எழுவோம்
பாவலர் கருமலைத்தமிழாழன்

ஆட்சிசெய்யும் ஓரரசு மக்கள் தம்மை
அரவணைக்கும் நல்லரசா என்று காண
சாட்சியாக அவர்செய்த நலதிட் டங்கள்
சான்றாகிப் பயன்தந்து நிற்க வேண்டும் !
மாட்சிதரும் திட்டங்கள் என்றே இன்று
மாண்பான அமைச்சர்கள் மேடை தன்னில்
காட்சியாகக் காட்டிவெற்று முழக்க மிட்டுக்
கண்துடைக்கும் நாடகத்தை நடத்து கின்றார் !

அதுசெய்வோம் இதுசெய்வோம் என்றே நீட்டி
அனல்பறக்க முழக்கமிட்டே உறுதி தந்து
மதுபுட்டி பணத்தாலே விலைக்கு வாங்கி
மறுப்போரை வன்முறையால் அச்சு றுத்திப்
புதுமுறைகள் பலவற்றைக் கடைபி டித்துப்
புறவழியில் ஆட்சிதனை வசப்ப டுத்தி
எதுவொன்றும் செய்யாத அரசாய் இன்றோ
ஏங்கிமக்கள் பார்த்திருக்க நடத்து கின்றார் !

குறிப்பிட்ட காலத்துள் சுகாதா ரத்தை
குடிநீரை அனைவருக்கும் தருவோ மென்ற
நெறியான இலக்குதனை நிர்ண யித்து
நிறைவேற்ற முன்வராமல் பொங்க லுக்குக்
குறிப்பிட்ட கோடிகளில் மதுவை விற்கக்
குறியீட்டை நிர்ணயித்து வாழ்வ ழிக்கும்
நெறிபிறழ்ந்த ஆட்சியையும் துணையாய் நிற்கும்
நெஞ்சற்ற கயவரையும் வீழ்த்த எழுவோம் !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (20-Mar-15, 1:10 pm)
பார்வை : 177

மேலே