உள்ளத்தின் துயரம்
யாரும் சந்தேகப் படாத வகையில்
ஒரு பூனைக்குட்டியைப்போல்
மெல்ல அடியெடுத்து
ஓசையின்றி நுழைந்து
உயிரில் பாய்போட்டு
உட்கார்ந்து கொள்கிறது
வாழ்க்கையின் துயரம்.
நிரந்தரமற்ற போதும்
நிலையானதுபோல்
நிலைகொள்ளும்
பிறவியின் பேரூந்தில் ஏறி
பயணச்சீட்டு வாங்காமல்
இதய ஆசனத்தில்
அமர்ந்து கொண்டு
எந்தத் தரிப்பிலும்
இறங்கிப் போகாத
நிரந்தர பயணியாய்
நீடிக்கிறது இந்த துயரம்.
காட்டுமிராண்டிகளின்
கடிகாரத்தில் மணிபார்த்துக்
கூவக் கற்றுக்கொள்ளா
வீட்டுச் சேவலின் அப்பாவித்தனத்தை
வேட்டையாடப் பழகிக்கொண்ட
விலங்குகளின் வரவேற்புக் கூடத்தில்
விருந்தாளியாய் உட்கார்ந்து கொள்கிறது
விடுதலை கிடைக்காத துயரம்.
மரணத்திற்கான விஷம் விற்கும்
வியாபாரியிடமிருக்கும் நாணயம்
வாழ்வதற்கான
உயிர் கொடுத்தவர்களிடம்
உணரப்படாதபோது
இதயச் சுவர்களில்
ஒரு சகாப்தத்திகான சாபக்கேட்டை
சலனமில்லாமல் வரைந்துவிட்டுப் போகிறது
சந்தர்ப்பவாதிகளால் வரும் துயரம்
நம்பிக்கைத் தூண்களை
நம்பகமாய் அரிக்கும்
நயவஞ்சகக் கறையான்களின்
துரோக நாடகங்கள்
சுபமில்லை என்னும்
வாசகங்களோடு திரைமூடும்போது
பச்சோந்தி வருணங்களில்
வெளியே தலைகாட்டும்
துயரத்தின் முகங்களில் பெரும்பாலும்
ஒப்பனைகள் களைக்கப்பட்டே
கிடக்கின்றது.
இமைகளின் கீழிறங்கி
வழிந்தோடும் கண்ணீர்
நதியாய் இல்லாமலும்
இதழ்களின் வழியே
வெளியேறிச் செல்லும்
மொழிகளின் மூர்க்கமாய்
இல்லாமலும்
பாரங்களை சுமக்கும்
பரிதாபங்களின் பரிபாஷையில்
வார்த்தைகளற்று ஊமைகளுக்கு
உறவாகிப்போகிறது
உள்ளத்தின் துயரம்.
*மெய்யன் நடராஜ்.