அதிசயக்கூலி

கறுப்புச்சாயம்
தெளித்த‌
இராத்திரி பூச்சை
சிதைத்து நகர்ந்த‌
மின்கல விளக்குகள்!

கூதல் காற்றில்
வெடவெடுத்து!
தளும்பும்
நீர்க்கானத்தில்
மெல்லாடலை
அரங்கேற்றியிருந்தன...

ஈயக்குண்டுகள்
நங்கூரமிட்டிருக்கும்
தேசத்திலிருந்து
புறப்படும்
அவர்கள் வாழ்வின்
சொப்பன ராகம்!!
அலையோசையில்
மறைந்திருக்கலாம்!!

ஏலேலோ
ஐலசாவில்
மீன்கிளைகளோடு
சூரியனும்
இழுக்கப்பட்டிருக்கிறது!

எந்த தொழிலிலும்
கண்டிராத
அதிசயம்
நடக்கிறது!

மீனவன்
கைப்பற்றிய‌
மீனுக்கான
ஏலத்தில்!!
நுகர்வோன்
முதலாளியாய்...

அதோ
மற்றுமோர்
கட்டுமரத்தில்
போராடும்
மீனவனுக்கும்
இது தெரியும்!!

தேர்தலின் போது
பார்த்த அரசியல்
வாதியின் முகத்தை
எல்லோரும்
மறந்துவிட்டார்கள்!

உட்கன்னத்தில்
உங்களுக்கும்
மீன் முள்
குத்தியிருக்க கூடும்!
பிடுங்கிவிட்டு
சுவைத்திருபீர்கள்!!

உச்சிவெய்யில்
ஒன்றில்
வலைகளோடு
காய்கிறது
மீனவர்கள்
வாழ்க்கை!

நமெக்கென்ன‌
குழம்பு சுவையாய்
இருந்தால்
போதும்தானே!!

இந்த கவிதையும்
ஓர் உணவு
வேளையின்
ஏப்பத்தோடு
உங்களை விட்டு
பறந்து போகலாம்....

நாளைக்கு
நண்டா! கணவாயா!
வினவிக்கொள்ளுங்கள்
உங்கள்
உறவுகளிடம்...
இது ஒன்றும்
புதிதல்லவே!!

எழுதியவர் : புலவூரான் ரிஷி (22-Mar-15, 11:12 pm)
பார்வை : 53

மேலே