விடியலின் தேடல்

கதிரவன் தன் கதிர்க்கீற்றலை மேகத்தினுள் புணர்ந்து, பூமிக்கு புனிதம் புகைத்துக் கொண்டிருந்த காலை வேளை அது.
கோடங்கி தன் அலுவகத்திற்கு செல்வதற்காக பேருந்தை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தான்.மனிதர்களின் இன்பம்,துன்பம்,எதிர்ப்பு,கோபம்...என எல்லா உணர்வுகளிலும்,கடந்த 40-50 வருடங்களாக, தான் பங்குகொண்ட கர்வத்தோடு அங்கும், இங்குமாய் சரியாய் சவரம் செய்யப்படாத சாலைகளில் ஓடிக்கொண்டிருந்தன.
கோடங்கி..அவனான வாழ்க்கைப் பயணத்தில்,தனியே பயணம் செய்யும் ஒண்டிக்கட்டை.அதில் இரவுப் பயணங்களில் மட்டும் சிலர் துணைக் கொண்டு தனிமையும்,அதன் வேட்க்கையையும் துரத்திக் கொள்ளும் சாமர்த்தியவாதிதான்.நிலம் பதிவாளர் அலுவலகத்தில் குமாஸ்தா வேலை.
சில அந்தரங்கம் மறைக்கப்பட்டதில்,அவன் ஒரு நியாயவாதி,சாந்தமானவன்,நம்பிக்கையானவன்…இப்படியாய் சமூகம்,பலப் பெயர்களை சட்டைகளாய் அணிவித்து,, உண்மை மனித நிர்வாண வர்ண்ங்களை மறைத்துத்தான் கொண்டிருக்கிறது போலும்!
அன்று பள்ளி விடுமுறை நாள் என்பதால்,பேருந்தில் கூட்டம் சற்றே குறைவாயிருந்தது.சன்னல் சீட்டுகளைப் பிடித்ததிலும்,அழகிய கல்லூரி பெண் அருகில் அமர்ந்ததிலும்,பெண்கள் புட்டத்தை இடிப்பதற்க்கு ஏதுவாக பேருந்து கம்பிகள் கிடைத்ததிலும்,சரியாய் பேக்கெட்டில் சொருகப்படாத பர்சுகளாலும்.....இப்படி ஒவ்வொருவருக்கும் சந்தொஷத்தை ஏற்ப்படுத்திக் கொடுத்ததில் பெருமிதமாய் பூதம்,பூதமாய் புகையை கக்கிக் கொண்டு வேகம் பிடித்திருந்தது..பேருந்து.
கோடங்கி,தன் கண்களால் சன்னலின் வழியே சற்று சாரையோட்டினான்.டீக்கடைகளில் பல வணிகரீதியான பத்திரிக்கைகள் சில நடிகைகளின் முலைகளை முன்னிலைப்படுத்தி செய்தி வாசித்துக் கொண்டிருந்தன.அதை தவிர்த்து அவனது கவனத்தை அனைத்து சாயமும் பூசப்பட்ட,அந்த லோபலௌசஸ் சிங்காரியிடம் திருப்பினான்.நாற்பதுகளை தொட்டுவிட்டாளும்,அவனது பார்வை விலைமகளையும் சற்றே வெட்கப்பட வைக்கக்கூடியவை தான்.சற்றும் எதிர்பார்க்காத வண்ணம்,டிரைவர் அடித்த அந்த ப்ரேக் பேருந்தில் பயணம் செய்த அனைவரையும் சற்று நிலை குலைய வைத்திருந்தது.
அங்கே அழுக்குகளால் உடை அணிந்து,உடல் மொழியில் எந்த ஆரவாரமுமின்றி,பெண்மையின் அடையாளமாய்(அப்படியா என்ன?)கருதும் குழந்தையை இடுப்பில் சொரிகியவளாய் பேருந்தில் ஏறினால்...அந்த அழகிய பெண்!
அந்த நொடியைத் தவிர...அதன்பின், ஒருவர் பார்வையும் அவள் மீது படிந்ததாய்த் தெரியவில்லை.

சிறிது இம்மி பிசகினாலும்,காலனுக்கு வரவேற்பு அளித்துவிடும் படியாய் வேகம் பிடித்திருந்தது..பேருந்து.
அடுத்த ஸ்டாப்பில் அந்த பெண் தன் கைக்குழந்தையுடன் இறங்கியிருந்தாள்.கோடங்கிக்கோ,பல நாள் வாங்க மறுக்கப்பட்ட செல்லாத, ஒரு கிழிந்த பத்து ரூபாய் நோட்டை செலுத்திவிட்ட மகிழ்ச்சியில் இருந்தான்.
அந்த நேரம்,சிங்காரி தன் பையிலிருந்த செல்போனை யாரோ திருடிவிட்டதாக கூச்சலிடத் தொடங்கினாள்...அங்கே இருந்த ஆண்களும்,பெண்களும் தனது யூகத்தை பல கதைகளாய் புனைந்து,ஸ்டாப்பில் இறங்கிய அந்த பெண்னை நாயகி ஆக்கியிருந்தனர்.
கோடங்கிக்கோ,மனதில் ஆத்திரமாய் வந்தது.நிறம்,உடை,நிறம்
..இப்படி பலவற்றைக் கொண்டு மனித மதிப்பீடுகளை சொல்லிக் கொடுத்த இந்த தந்தைவழி சமூகம்...இன்று பலரால் வெற்றி பெற்றதே அதன் காரணமாக இருக்கலாம்.ஆனால் அதை எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாதவனாய்,சன்னலின் வழியே மீண்டும் தன் கண்களைப் பதிக்கலானான்.
அலுவலகத்தை வந்தடைந்த நேரம்,அவனை மேனேஜர் உத்தமபுத்திரன் கூப்பிட்டு வரும்படியாக கருப்பையா சொன்னான். திறந்திருந்த கதவை ஒரு முறைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான்.க்ரொம்பி கோட்டினுள் புதைந்திருந்த அவன் முன்னே ஒரு வணக்கத்தை வாதையாய் வைத்தான் கோடங்கி.அதற்குள் கோடங்கி தன்னை எதற்கு இவன் அழைத்திருக்ககூடும்? என்று மனதில் சில வசனங்களை ஒத்திகைப் பார்த்துக்கொண்டான். உத்தமன் பேசத் தொடங்கிய நேரம் தான்,கோடங்கி நிஜவுலகைத் தொட்டிருக்கக்கூடும்.
உத்தமன் அவன் கையில் ஒரு கட்டு பணத்தை கொடுத்து...அதனுடன் சில கோப்புகளையும் சேர்த்தி..விடுப்பில் இருக்கும் விசித்ராவிடம் போய் கொடுத்து வரும்படியாக சொன்னான்.சரியென்று தலையை ஆடு மாதிரி ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு,அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான் கோடங்கி.
விசித்ரா..ம்...முப்பது வயதைத் தொட்டுவிட்ட ரெஜிஸ்ட்ரேட் பெண்.அவள் ஆபீஸ் வரும் போதெல்லாம் எப்படியும் அங்கேவுள்ள மொத்த கண்களும் அவளை மேய்ந்திருக்கும்.அதை அவளும் பெருமையாய் எடுத்துக் கொள்ளும் தாராளமானவள் தான்.
கோடங்கி உத்தமன் கொடுத்த அந்த கோப்பினை எடுத்துப் பார்த்தான்.சாதாரண மனிதர்களுக்கு புரியு படியாக இல்லாத அந்த கோப்பின் தாள்களை திருப்பியவாறு,எதையோ தனக்குள் நினைவுப் படுத்திக் கொண்டிருந்தான்.அது புதிதாய் கட்டவிருக்கும் 100 அடி ரோட்டின் ஏதோ அபார்ட்மெண்ட் கட்டிடங்களின் டென்டெர் கோப்புகள்.
அவனறிந்தே அங்கு ஒருகுளம் முன்பு எப்போதோ இருந்ததாய் நினைவுக்குவர...அதில் எப்படி இவர்களால் அபார்ட்மெண்ட் கட்டமுடியும்?எந்த காலத்திலும் பொருளால் செய்ய முடியாத ஒன்று உண்டா என்ன?இதெல்லாம் அவனுக்கு ஒருபுறம் தேவையற்ற சிந்தனையாய் மனம் சொல்லிக் கொண்டிருந்தது..சரி தான்..இங்கு சில தவறுகளின் மூலங்கள்,பல சரிகளின் ஆதாரமாய் தேற்றிக்கொண்டான்.
வானத்தையும்,நிலத்தையும் சேர்த்திவைத்ததில் மழைநீர் ஆங்காங்கே தேங்கிக்கிடந்தது. ஒரு ஆட்டோவை பிடித்து விசித்ராவின் வீடு வந்து சேர்ந்தபோது,மேகங்கள் தங்கள் நிறங்களை இரவின் இருளுக்கு தாரைவார்த்துக் கொண்டிருந்தது.அங்கு பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு,''வீடுகள் அனைத்தும் கண்காணிப்பிற்கு உட்பட்டவை'' என ஃப்லெஃஸ் போர்டுகள் சொல்லிக் கொண்டிருந்தன.காலிங்பெல்லை பல ஸ்விட்சுகளின் இடையில் கண்டுபிடித்து அலுத்துவதற்குள் விசித்ரவே வெளியில் வந்துவிட்டாள்.நைட்டியில் எப்பொழுதும் தெரிவதைவிட மேலும் அழகாய் தெரிவதை,கோடங்கி ரசிக்கத் தொடங்கிய நேரம்...உத்தமன் கொடுத்த கோப்பையும்,பணத்தையும் கொடுக்குமாறு கை நீட்டினாள்.அதை கோடங்கியிடம் வாங்கிக் கொண்டு அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு,வீட்டின் உள்ளே சென்றாள்.
வெளியில் வரும்போது கையில் ஒத்த 100 ரூபாய் தாளை மட்டும் கொண்டுவந்து அவன் கையில் திணித்தாள்.கோடங்கி அந்த இடத்தை காலிசெய்யும் முன்னரே தாளிட்டுவிட்டாள்...அவள் தரிசனத்தையும்...கதவுகள் மிகவும் விசித்ரமானவை தான்.
படுக்கையை சுற்றிலும் கோடங்கியின் தனிமையும்,நேற்றைய இனப்பெருக்க களிப்பும் அவனை படுக்கையை விட்டு எழ மிகவும் சிறமப்படவைத்தாலும்,எப்படியோ தன் கண்களால் அவன் அன்றைய உலகை விடியலாக்கினான்.வீட்டின் வெளியே போடப்பட்டிருந்த பால்பாக்கெட்டையும்,செய்தித்தாளயும் எடுத்துக்கொண்டு வந்தான்.
தனக்கான கொள்கைகளையும்,கோட்பாடுகளையும் வரையறுத்து வைத்துக் கொண்ட அரசியல் கட்சிகளின் போராட்டங்களும்,அதன் செய்திகளும்,சினிமா விமர்சனங்களும்,ஓடிப்போன நடிகையின் வருகையை பற்றியுமாய் மேய்ந்துக் கொண்டிருந்த அவனை...அந்த் ஒருபக்க செய்தி அவனான எண்ணவுலகை ஒரு நிமிடம் களவாடியிருக்கக்கூடும்.
அந்த செய்தியனானது,போரூர் அருகே புதிதாய் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டிடம் நேற்றைய மழையில் இடிந்துவிழுந்ததாகவும்,அதில் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அறியப்படவில்லை என்றும்..அதன் காரணங்களை பல காரிகட்சேர் படங்கள் போட்டு காட்டப்பட்டிருந்தது.

இங்கு சில சரிகளின் சூத்திரங்கள்,பல தவறுகளின் ஆதாரம்!!பதறியவன்,பெருங்குற்றம் செய்துவிட்டதாகவும்...அவனான சமூக சட்டைகள் என்றோ ஒரு நாள்
கழற்றப்படப் போவதாகவும் எண்ணி பயந்துப்போனேன்.தன் கற்பனைகளையும்,கற்பிதங்களையும் அவன் செயல்களுடன் புனையத்தொடங்கினான்.இந்த எண்ணவோட்டங்கள்,அன்றிரவின் கனவு சுழியினுள் சிக்குண்டு....

கருவறை இருட்டில்,விழி விரித்தே நெடும் வெளிப்பார்த்து வழி நடந்திருக்கக்கூடும்.கால் தடுத்தே கண்டிருப்பான் அவனை! வெற்றுடல் வைத்தே விசிர்பிடித்து, நிர்வாணியாய் நகைத்துக்கொண்டிருந்தாள்!
காலவோட்டங்கள் வரைந்த வரிகள்
பூசியவளாய் கிழவி தன்
ஓசையில்லா ஒப்பாரிப் பாடிக்கொண்டிருந்தாள்!
இருவரும் இடும் கோசனையோ,
காதில் விழுந்ததாய் அவன் உணரவில்லை!
ஏதோவொரு கல்லறை மனிதன்,
அசைவில்லா ஓருடலை புணர்கிறான்!
வெளி எல்லாம் நிர்வாணமாய்,
சடலங்கள் சிதறிக்கிடந்தன!
மனிதவர்ணம் அங்கே
அபத்தமாய் தெரிந்தன!
அபயமாய் போயின!
நடைப்புள்ளி ஒவ்வொன்றாய்
புதைக்குழியாய் மாறியே,
புதையுண்டு வருகின்றன!
அதில் தன் கால் சிக்குண்டவனாய்...தெரிகிறான்...
கோடங்கி!!
இப்படியாய் அவனை கனவுகள் ஆட்கொண்டதில் உறக்கமின்றி..இரவுகளை கழிக்கலானான்.
கோடங்கி அலுவலகம் சென்றே மாதம் ஒன்றாயிருந்தது.மனிதர்களின் பார்வைகள் அச்சமூட்டுவதாய் எண்ணிகிறான்.இப்போதெல்லாம் இருட்டினில் மட்டுமே அவன் வெளியில் நடமாடுகிறான்...நூறடி ரோட்டில் கட்டத் தொடங்கியிருக்கும் அந்த கட்டிடத்தை எவரும் பார்க்காத வண்ணமாய் இரவுகளில் மட்டும் சென்று பார்க்கிறான்.அவன் எண்ணங்களில் தினம் தினம் அந்த கட்டிடம் இடிந்துவிழுகிறது.
தினமும் இரவில் வந்து பார்த்தே மறுநாளிற்கான இயங்கியலை உறுதி செய்து கொள்கிறான்.அவனை சுற்றியிருக்கும் அத்தனை கட்டிடங்களும் அவன் மீது இடிந்துவிழுவதாய் பயக்கிறான்.என்ன?கோடங்கி அழுகிறானா?பாவம்..அவன் அழுகையைக் கூட இந்த கட்டிடங்களைத் தவிர எதுவு அறியப்பேவதில்லை..மறையட்டும் அனைத்து மனிதகாப்பிடங்களும்...என்றே சொல்லிk கோபப்படுகிறான்.அவனான உலகம் முற்றிலுமாய் இந்த கட்டிடங்கள் களவாடிவிட்டதாய்...இரவு கிறுக்கனாய் உலவத்தொடங்கிவிட்டான்.
உத்தமன்,விசித்ராவுடனான அன்றைய படுக்கையை முடித்துவிட்டு மறு நாளிற்கான தேடலைத் தொடங்கிவிட்டான்.அங்கே கட்டிடங்கள் கோடங்கிக்கான கண்ணீரை மழையினிடையே மறைத்துக் கொண்டிருந்தன...
எப்போதும் போல,விடியலுக்காக உலகம் உறங்கிக் கொண்டிருந்தது...

எழுதியவர் : பாரி இளஞ்செழியன் (23-Mar-15, 1:15 pm)
சேர்த்தது : pari elanchezhiyan V
Tanglish : vidiyalin thedal
பார்வை : 392

மேலே