கனவே கலைந்து போ பாகம்- 7 துப்பறியும் திகில் தொடர்

முன் கதைச் சுருக்கம்
அமானுஷ்ய அனுபவங்கள் பிரசாத்தின் நண்பன் வேல்முருகனுக்கும் ஏற்படுகின்றன.

...............................................................................................................................................................................................

மறு நாள்....

பகல் பதினோரு மணி இருக்கும்.

நந்தினி வீட்டிலில்லை. ப்ரியம் அபார்மெண்ட்டில் சேட்டுக் குடும்பம் காலி செய்து கொண்டிருந்தது. ரொம்ப ஒதுக்குப்புறமாக இருக்கிறதாம்; பிசினஸை கவனிக்க முடியவில்லையாம்.

பிரசாத் அவர்கள் வீட்டு சமையல்காரம்மாவின் கையில் நூறு ரூபாயை அழுத்தினான். “ஏன் வீடு காலி பண்றாங்க? ” என்று கேட்டான்.

யாரிடமாவது சொல்லா விட்டால் மண்டை வெடித்து விடும் நிலையில்தான் அவள் இருந்தாள்.

“சேட்டோட பொண்ணு ரூப்மதி ஏதோ ஆவியைப் பார்த்து பயந்து போயிருக்கா, தம்பி! அதான்... ”

இது...இது என்ன இன்னொரு அதிர்ச்சி ???????

“எப்ப? ” பரபரப்புடன் கேட்டான் பிரசாத்.

“நேத்திக்குத்தான்... வெள்ளையா புகையா... கை கால் தனித்தனியா இல்லாம மொழுங்குன்னு... ”

“ஏ...ஏதாவது சொல்லிச்சாமா? ? ”

“அப்படியே மிதந்து போச்சாம்.. அதுக்கே அந்தப் பொண்ணுக்கு காய்ச்சல் கண்டுடுச்சு; இன்னும் பேச வேற செய்யணுமா? ”



சக்கரை அன்றுதான் காமிராப் பதிவுகளை பிரசாத்திடம் கொண்டு வந்து கொடுத்தான்.

கையில் வாங்கும் போதே இதயம் படபடத்தது.

பதிவுகளை ஓட விட்டு இருவரும் பார்த்தனர்.

இதோ...இதோ... இப்போது தெரிந்து விடும்...

ஒன்று ஐம்பத்தி ஒன்பது...இரண்டு, இரண்டு ஒன்று, இரண்டு இரண்டு, இரண்டு மூன்று, இரண்டு நான்கு... ....இரண்டு ஐந்து!

நந்தினி ரிசப்ஷனில் அமர்ந்திருந்தாள்...!

அப்பாடா! ஸாரி நந்தினி. இது உங்கள் மேல் சந்தேகப்பட்டல்ல; என் மேல்................

என்னது இது? பிரசாத் ஒரே சமயம் சந்தோஷத்திலும் சங்கடத்திலும் தவித்தான்! மறுகணம் நெற்றி சுருங்கியது ! !

சக்கரை ஜூம் பண்ணியபோது கண்ணில் பட்டது நந்தினியின் கழுத்தில் தெரிந்த கருக்கழியாத புது மஞ்சள் கயிறு!

“யாருடா இவங்க? எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு? ” சக்கரை கேட்டான்.

“கங்கா பவானி டிவி சீரியல் நடிகை. நந்தினி! ”

“கல்யாணமானவங்களா? ”

பிரசாத் பதில் சொல்லவில்லை.

“இந்த மஞ்சள் கயிறு தெரியாம இருக்கத்தான் இத எடிட் பண்ணியிருக்காங்க; நடிகையில்லையா? மார்க்கெட் போய்டுங்கிற பயம் போல... ”

“ம்..ம்.. ”

“சரி, நீ ஏன் ஜிஞ்சர் மங்க்கி மாதிரி முகத்தை வச்சிட்டிருக்கே, ஃபீலிங்கா? ”

“............”

“டேய் பிரசாத், ஒரு பொண்ணுக்கு யார் வேணா காதலனா இருக்கலாம்; கல்யாணமும் பண்ணிக்கலாம்; நண்பனா இருக்க எல்லோராலேயும் முடியாது! காதல் மாதிரியே நட்பும் உசத்திதாண்டா! இன்னும் சொல்லப் போனா காதலை விட நட்பு உசந்தது! காதலுக்கு அடித்தளமா ஹார்மோன் இருக்குடா; நட்புக்கு அடித்தளமா நட்பு மட்டும் தாண்டா இருக்கு! அவங்க நல்லா இருக்கட்டும்னு உன் வாயால சொல்லேண்டா...! ” சக்கரை வலியுறுத்த,

“நல்லா இருக்கட்டும்” என்றான் பிரசாத் இற்றுறுகிய முகத்தோடு!

ஒரு மாதம் ஓடி விட்டது. இதில் பிரசாத் நந்தினியை சந்திப்பது ஆறாம் முறை. ஆட்டோவில் வந்திருந்தாள். தன்னை அறியாமல் துப்பட்டாவை ஊடுருவி கழுத்தை உற்றுப் பார்க்கத் தோன்றிய உணர்ச்சியை கட்டுப்படுத்திக் கொண்டான். தப்பாக நினைத்துக் கொள்ளலாம். சொல்வதானால் அவளாகவே சொல்லட்டும்.....

நந்தினி ஆட்டோவுக்கு நான்காக மடிக்கப்பட்டிருந்த ஐந்நூறு ரூபாயை எடுத்து நீட்டியபோது, சில்லறை இல்லை என்றான் ஆட்டோ டிரைவர். அப்போதுதான் அங்கு வந்தான் பிரசாத். ஆட்டோவுக்கு காசும் நந்தினிக்கு ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்களையும் கொடுத்து விட்டு ஐந்நூறு ரூபாயை வாங்கினான். ஒரு முக்கியமான நபரின் கைபேசி எண்ணை நூறு ரூபாய் நோட்டில் குறித்து வைத்திருந்தான். அது நந்தினியிடம் போய் விட்டது!

“ என்னங்க, மடிப்பு போதுமா? ” என்றான் தாளை நீவி விட்டவனாய்!

“அது என் கிட்ட உள்ள கெட்ட பழக்கம்! ” சிரித்தாள் நந்தினி. கைப்பையை காட்டினாள். சின்னச் சின்ன சதுரங்களாக ரூபாய் நோட்டுக்கள்.

செலிப்ரெடி கிளப்புக்கு போகிறாளாம். பத்தாயிரம் ரூபாய் மெம்பர்ஷிப்பாம். இப்படித்தான் ஆடை அணிய வேண்டும், இன்னின்ன பொருள்களைத்தான் கொண்டு செல்ல வேண்டும் என்று ஏக கெடுபிடி பண்ணுவார்களாம். கேள்வி கேட்டு மூன்று வாய்ப்புகளில் பதில் சொன்னால்தான் செலிப்ரெடி பிரதிநிதியாக முடியுமாம். பிரதிநிதிகள் பங்கு பெறும் நிகழ்ச்சி அடிக்கடி நடக்குமாம். கலந்து கொண்டால் பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும்; அவர்கள் சிபாரிசில் வாய்ப்பு கிடைக்கும் என்றாள். அவளுக்கு தொழிலதிபர் முருகேசனின் தொடர்பு கிடைத்தது அப்படித்தானாம். அப்படித்தான் சின்னத்திரை நடிகையானாளாம்..... !

நந்தினி அடிக்கடி போதி மரமாகிறாள்!

நந்தினியின் பழக்க வழக்கம் பிரசாத்துக்கு அத்துப்படியானது. உடை விஷயத்தில் நந்தினி ஒரு வித முறை வைத்திருந்தாள். ஞாயிற்றுக் கிழமைகளில் ஆரஞ்சு நிற ஆடைகளை அணிவாள்; திங்களன்று வெண்மை, செவ்வாயில் சிவப்பு, புதனென்றால் பச்சை என்று ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு நிறத்தில் உடுத்துவாள். சில சமயம் ப்ளைன் சேலை.. அன்று அவளுடைய ஆரஞ்சு சேலை ஆணி பட்டு கிழிந்து விட்டது; கிழிந்த சேலையை தைத்துக் கொண்டு அனாதை இல்லம் வந்தாள். பிரிக்க முடியாதது நடிகையும் சென்டிமெண்ட்டும் என்று திருவிளையாடலில் சும்மாவா சொன்னார்கள்?

விதி இரண்டாம் முறை அன்று விளையாடியது.

ஜெபமணி இல்லத்தின் போட்டோ ஆல்பத்தை பார்த்துக் கொண்டிருந்தான் பிரசாத். குறிப்பிட்ட குழந்தைகளை காட்டி அவர்கள் பேரை கேட்டுக் கொண்டிருந்தான். அந்தக் குழந்தைகள் எல்லாருமே தத்து கொடுக்கப்பட்டிருந்தனர். ஜாஸ்மின் கூட மும்பையில் தத்து கொடுக்கப்பட்டிருந்தாள். அப்படியே இல்லம் முழுவதும் சுற்றினான். சமையலறை ஸ்டோர் ரூமில் நிறைய எலிப் பாஷாணம் இருந்தது. அப்படி என்ன எலித் தொல்லை இங்கே?

இதற்கிடையில் நண்பனின் ஊரில் இடைத்தேர்தல் நடந்தது. தேர்தல் வேலைகளை பார்த்ததில் பிரசாத்துக்கு கொஞ்சம் பணம் கிடைத்தது. அதை வைத்து செலிப்ரெடி கிளப் மெம்பரானான். அவனிடம் மூன்று கேள்விகள் கேட்கப்பட்டன. கேள்விகள் பெரிதாக ஒன்றுமில்லை; செக்யூரிட்டி அவனிடம் ஒன் என்றார். பிரசாத் த்ரீ என்றான். த்ரீ என்றதுக்கு ஃபைவ் என்றான். ஃபைவ் என்றவுடன் செவன் என்றான். செக்யூரிட்டி ரிஜெக்ட்டட் என்று சொல்லி வெளியே தள்ளி விட்டார்!

இரண்டாம் முறையும் எண்கள் விளையாட்டில் தோற்று வெளியேறினான்.

மூன்றாம் முறை! கடைசி வாய்ப்பு!

செக்யூரிட்டி லெவன் என்றார். பிரசாத் சிக்ஸ் என்றான்.

“ சிக்ஸ்? ”

“ த்ரீ ”

“ நைன்? ”

“ ஃபோர்! ”

அனுமதி கிடைத்து விட்டது!

எண்களை ஆங்கிலத்தில் உச்சரிக்கிற போது அவற்றிலுள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையை சொன்னால் போதும்!

உள்ளே மிக அழகிய பூங்கா; ஸ்டால்; கோல்ப் கிளப்; நீச்சல் குளம்! நான்கைந்து பேர் உட்கார்ந்து நெருக்கமாக உரையாடும் வகையில் டேபிள், நாற்காலிகள்! டேபிளுக்கடியில் எதுவும் கை மாறலாம்! வெளியே தெரியாது!

பிரசாத் தன்னை அந்தஸ்த்துள்ள பெரிய பணக்காரனாக பாவித்து ஒரு சேரில் அமர்ந்தான். கற்பனை செய்தான், “ம்..ம்.. என் பங்களாவில் இன்டீரியர் டெகரேஷன் பண்ணனும்; கேன் யு ஹெல்ப் மீ? ”
ஸ்டைலாக மனதுள் பேசி நிமிர்ந்த போது...

எ.....எதிரில் நந்தினி!

பார்த்துக் கொண்டிருந்த போதே யாரோ வந்து நந்தினியின் மேல் அமர்ந்தார்கள். பிரசாத் எழுந்து விட்டான். கற்பனைத் தோற்றம்! எதிரில் நந்தினியைப் போல கற்பனைத் தோற்றம்!

சட்டென்று எங்கிருந்தோ வெங்காய வாடை; அழுகிய வெங்காய வாடை!

பிரசாத் மிடுக்காக எழுந்தான். ஒவ்வொரு டேபிளாகத் தேடினான். கவனமாகத் தேடினான். எதைத் தேடுகிறான்?

அவனுக்கே தெரியவில்லை!

கிடைத்து விட்டது ! சின்னத் துண்டுச் சீட்டு ! தேட வேண்டுமென்ற நோக்கமிருந்து தேடினால் ஒழிய கிடைப்பதற்கு வாய்ப்பில்லாத துண்டு சீட்டு !

இந்த சீட்டின் மேல் உள்ள தாளில் எதையோ எழுதியிருக்கிறார்கள். அதன் அழுத்தம் இந்தத் தாளில் தெரிகிறது.

என்ன எழுதப்பட்டிருக்கிறது?

திரும்பவும் சக்கரையின் உதவி கேட்டான்.

ஒரு மீன் படமும் மீனின் வயிற்றில் ஐந்து பெயர்களும் !


தொடரும்

எழுதியவர் : அருணை ஜெயசீலி (23-Mar-15, 2:45 pm)
பார்வை : 286

மேலே