வளைவுகளில் முந்தாதீர் -கார்த்திகா
பதினேழு அல்லது
பதினெட்டு மதிப்பிடலாம்
காற்றும் நெருங்கத்
தயங்கும் பிணவறைச்
சந்தின் முகப்பில்,
கோரையின் கிழிசல்களில்
அவள் தைக்கப்பட்டிருந்தாள்..
நான் கண்ணுற்றபோது ,
ஆறு மாதமாய்
தெரியாமல் வளர்த்துவிட்ட
சிசுவிற்கு யார் காரணமென்று
ஊருக்கு வேடிக்கை
காட்டிக் கொண்டிருந்தான்
அவனைக் கணவனென்று
அவள் நினைத்திருந்தாள்..
பாசத்தோடு பற்றியிருந்த
பெற்றவர்களின் கைகளை
விலங்கென விலக்கி
வெளி வந்தபோது
கொண்டவன் கோவில்
வாசலில் மட்டும்
பிச்சை கேட்க
வைக்கவில்லையாம்!
பாதியில் படிப்பைத்
துறந்தவளுக்கு முதிர்ச்சியில்லாத,
காதலென்று நினைத்தது
கருவறையைக் கழுவினால் மட்டும்
நிலைக்குமென்று அறிந்திருக்க
வாய்ப்பில்லைதான்....
இந்த நொடி ,
உலகினை மாற்றியமைக்க
முயற்சிக்கும் கரங்களும்
வெற்றியைத் துரத்தும்
நம்பிக்கைகளும்
துளிர்விடும் அந்நேரம்
சிந்தையில் விஷமேறி
சிறிது சிறிதாய்
உணர்வுகளின் கொலையில்
சிக்கியிருந்தாள் பேதையவள்..
"சரி விஷயத்துக்கு வாங்க ..
குழந்தை வேணும்னா
இந்த மருந்து மாத்திரை கொடுக்கணும்"
செவிலியின் பேச்சுக்கிடையில்
வாழ்ந்த வாழ்வினை
விற்றுக் கொண்டிருந்தான் அவன்...
விதையில்லா திராட்சைகள்
அவளுக்கு விருப்பமென்று
தந்தை சொல்லக் கேட்டதாய்
கொஞ்சம் நினைவில் தப்பியது ..
வறண்ட நாவிற்கு
எச்சில் மட்டும்
பசை ஆனது...
கண்மூடி சயனித்திருந்த
சிசுவும் திறந்திருந்த காதில்
வாங்கிக் கொண்டதோ
பாவத்தின் பட்டியலை?
நோய் எதிர்க்கும்
சக்தியற்று மெல்லமாய்
குருதி வழிதலில்
வெளி வந்திருந்தது
கால்கள் முளைத்திருந்த
அந்த சின்ன உடல்...
கத்தியும் கூப்பாடிட்டும்
அவள் குரல் சென்று சேரவில்லை
புலன்கள் வெறுத்திருந்த
வெற்று சதையை...
பாலிதீன் பை ஒன்றில்
சில்லிட்ட சிற்றுடலை
மார்போடு அணைத்து
உயிர் மூட்டிக் கொண்டிருக்கிறாள் ....
பன்னிரெண்டாம் எண் பேருந்துக்கான
காத்திருப்பின் இடைவெளியிலும்
அரசாங்கத்தை வாழ வைக்கச்
சென்றிருந்தான் அன்பிலா அவன்!!