ஆம் நாங்கள் வேஷம் தான் போடுகின்றோம்-கயல்விழி

கட்டிலில் கணவனின்
கட்டுக்கடங்காத ஆசையால்
கன்னியுடல் கிழிந்து புண்ணாகும் போதும்
இன்முகம் காட்டி சிரிகின்றோமே..
ஆம் நாம் வேஷம் தான் போடுகின்றோம்.

பெற்றோர் உறவின்றி
தனித்திருக்க
உணவிற்கும் உடைக்குமென
துடித்திருக்க
அத்தைக்கும் மாமனுக்கும்
பொங்கிப் போட்டு பூரித்துப் போகின்றோமே
ஆம் நாம் வேஷம் தான் போடுகின்றோம்.

அதிகாலையில்
அடுக்களையில் அவதிப்பட்டு
அந்திசாயும் வரை அலுவலகத்தில்
அல்லல் பட்டு
அம்மா என அணைக்கும் குழந்தைக்கு
முத்தத்தோடு அன்பையும் பொழிகின்றோமே
ஆம் நாம் வேஷம் போடுகின்றோம் .

புதுமை பெண் என்பீர்கள்
புரட்சிப் பெண் என்பீர்கள்
உண்மையில் எங்கள் முகத்திரையை
கிழித்துப் பாருங்கள்
குரல்வளை அறுக்கப் பட்ட குயில்கள் நாங்கள் .
கூண்டுக்குள் அடைக்கப் பட்ட கிளிகள் நாங்கள் .

எழுதியவர் : கயல்விழி (24-Mar-15, 2:46 pm)
பார்வை : 411

மேலே