யுகங்கள் தாண்டும் சிறகுகள் - 9 கவித்தாசபாபதி

அகநானூற்றுப் பாடல்களின் அமுதம் சுவைக்க இயன்றவர் இந்நாளில் தமிழறிஞர்களை தவிர்த்து மிகச்சிலரே. பரபரக்கும் இயந்திர வாழ்வில், வாசிப்பில் எளிதில் புரிந்துவிட இயலாத சங்க இலக்கியங்களின் சுவை காண முடியாமல் ஏங்கித் தவிக்கும் தவிப்பில்.., தாகம் தணிக்க காதல் கவிதைகளை / அகத்துறை பாடல்களை இனிய குறள்களில் தந்து முதல் ஆசானாக விளங்குபவர் தெய்வப்புலவர் திருவள்ளுவர்தான். அறம், பொருட் பால்களில் ஒட்டுமொத்த உலக நீதியை உள்ளடக்கித் தந்த வள்ளுவர் காமத்துப்பாலில் இன்ப ரசமாக சொட்டிய யுகம் கடந்த புதுக்கவிஞன் .

"பாலொடு தேன்கலந் தற்றே பனிமொழி
வாயெயி றூறிய நீர் "

என்ற வள்ளுவனின் காதல் ரசம்தான் வரம் கேட்கும் தேவதைகள் " கவிதையில் மனைவிக்காக எனை பாடவைத்தது இவ்வாறு,

"இதழ்களி லாலென்னை இழுத்தொரு மிருகமாய்
மதுரக்கள் ளூற்றி சாய்ப்பாய் - அதிர்ந்துநான்
விழுகையில் அன்னையாய் வாரித் தழுவுமோர்
அழகு தேவமகள் நீ "

உலக மகாகவி ஷெல்லியின் “VIBE AWAY MY TEARS WITH YOUR ROSY LIPS “ என்ற வரி காதல் தேசத்தின் ராஜாங்க கவிதையாக முடிசூடிக்கொண்டது.

இசைதவம் நோற்று இதயக் கோயிலின் குரு பீடத்தில் பக்தி காணிக்கையாய் வைத்த இளையராஜாவின் ,

"ராகங்கள் ஒரு கோடி,
எதுவும் புதிதில்லை
பாடல்கள் கோடி கோடி
எதுவும் புதிதில்லை
எனது ஜீவன் நீதான்
என்றும் புதிது"

என்ற பொன் மலரை காதல் தேவதை பிரியமாக சூடிக்கொண்டது.


காதல் புணர்ச்சியை எத்தனையோ கவிதைகள் புதிது புதிதாக புனைந்து கொடுக்க முயற்சித்திருந்தாலும் காதல் ஓர் இயற்றிட முடியாத கவிதை … ..உன்னதமான உணர்வு. . .இந்த உணர்வை எப்படி உரைப்பது ...? கண்ணதாசனே தடுமாறிப்போய்,

'காட்டுப் புறாக்கள்
கூட்டுக்குள் பாடும்
காதலை யார் சொல்லக் கூடும்? "

என்று தன் இயலாமையை ஒப்புக்கொண்டுவிட்டார் .. ! ஆனால் அந்த வரிகள் காதலைவிட சுகமானதாக அமைந்துவிட்டது. .. அதுதான் கவிதையின் மகத்துவமோ?

தமிழின் மூச்சில் கலந்திருக்கும் பாரதியின் கண்ணாம்மா கவிதைகளின் , பாவேந்தர், சுரதா மற்றும் அவர் வழி வந்தோர் கவிதைகளின் காதல் மகரந்தம் காற்றுள்ளவரை சுகந்து கொண்டே இருந்தாலும் காற்றையும் காது கொடுத்து கேட்க வைத்த தெய்வதன்மைக் கொண்ட காதல் பாடல்களை தந்தவர் கண்ணதாசன்.

"ஒரு தெய்வம் இல்லாமல் கோயிலுமில்லை
ஒரு கோயில்லாமல் தீபமும் இல்லை
நீ எந்தன் கோயில்
நானங்கு தீபம்
தெய்வத்தின் முன்னே
நீயும் நானும் வேறல்ல " என்ற காதல் வரிகளில் கடவுளும் மயங்கியிருக்கும்..

காஷ்மீரில் கண்ணதாசன் ஒரு போதை இரவின் அரை மயக்கத்தில் கனவு போல் தன்னோடு இருந்துவிட்டுப் போன ஒரு விலைமகளுக்காக உதிர்த்த வசந்தம் ,

"காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம் ...." காதலின் தேசீயகீதமானது.

இதை எழுதும் இக்கணம் கவிஜி ' யின் "எங்கள் ஊர் ராஜகுமாரி" தளர்ந்த புன்னகையில் என்னைக் கேட்பதுபோல் இருந்தது "நான் மட்டும் என்னவாம்?"

‘*****
******
பின் ஒரு காலத்தில்
என்னை வரச் சொன்ன
அவள் கிழவி ஆக
இருந்தாள்.....

என் மடியில்
படுத்துக் கொண்டே
தூங்கிப் போனாள்.....

பேச்சுகளற்ற எங்களினிடையே
கதவு
திறந்து கிடந்தது....

அவளுக்காக நான்
சேர்த்திய காசு
இன்னும் என்
பழைய உண்டியலில்
புதைந்து கிடக்கிறது....

காலத்தைக் கடந்த அவள்
இன்னும்
ராஜகுமாரியாகவே இருக்கிறாள்... "

எந்தவித புனைவோ, வார்த்தை ஜாலமோ, நவீனத்துவம் என்ற பெயரில் சிலர் மாயாவிகள் போல கவிதையை கஷ்டப்படுத்தும் பூச்சாண்டி வேலையோ , எதுகை மோனைகளோ, எதுவுமே இல்லாமல் மெல்லிய உணர்வால் மானசீக காதலை/ பரிவை மீட்டி மனதை சுண்டியிழுக்கும் இந்த மந்திரக் கவிதை அந்த ராஜக்குமாரியைப்போலவே காலங்களை வசீகரிக்கும்.

"கண்ணீர்ப் பூக்களைச்" சொறிந்து கல்லூரிப் பறவைகளையெல்லாம் கவி எழுதவைத்த மாபெரிய கவிஞர் மு. மேத்தா சிலநேரங்களில் , சில இடங்களில் ,

'உன்னிடம் வந்த பிறகுதான்
வடிவம் பெறாத
என் வார்த்தைகளும்
வயதுக்கு வந்துவிடுகின்றன "

என்று சாதாரணமாய் எழுதிவைத்த ஒரு சில காதல் வரிகளில் கரைந்து போய்விடாமல் காதல் கவிதையின் ஆழத்தில் முத்துக் குளிக்க முற்பட்டவர்கள் இன்றைய கவிஞர்கள். இவர்கள் இணைய தளத்தில், கணினி களத்தில், இயந்திர யுகத்தில் பரபரப்பாக ஓடாடிக் கொண்டிருந்தாலும் காதலையும்,. சமூகத்தையும், இயற்கையையும், மானுடத்தையும் எவ்வித வரமும் வேண்டாமல் கவிபாடி தவம் நோற்பவர்கள்.

இதோ "சின்ன சின்னதாய்" என்று “புலமி” மீட்டும் மென்னுறக்க கீதம் ஒரு புதிய அகநானூறு. முன்னோடி கவிச்சிற்பிகள் இந்தக் கவிதையை காண நேரிட்டால் கண்களில் ஒத்திக்கொள்வார்கள். அப்படி ஒரு மயக்கம் அதிலே.

எத்தனிக்கும் நினைவுகளின்
நிழல் விழுகின்ற
பக்கங்களில்
பூக்காத எழுத்துக்கள்
பெயர் தெரியாத
மடல்களுடன்
இனியும் எழுதாமல்
மூடி வைத்து
ரசிக்கப்படும் நாட்குறிப்பவன் ....

கானல் நீரொட்டி
நெருங்கும்
வாடிய கோடைக்கு
அதிர்ஷ்ட மழையென
அடிமனம் தோய்ப்பவன் ...

வளைந்தோடும்
கண்ணீர்த் துளிகள்
உடைய
தெளிந்தோடும் நீரோடையில்
புனிதமாய்க் கலக்கும்
கைவிரல் துடைப்பவன்...

விழிகளில்
வீணை மீட்டும்
மென்னுறக்க கீதத்தில்
அவனுள்
நான் மறக்கும்
நெற்றி முத்தமவன்...

பகல் வேண்டா
சூரியனும்
இரவெல்லாம் வேண்டும்
பௌர்ணமியும்
மூன்றாவதாய் கேட்கும்
ஒரு பெண்ணாய்
என்னோடு
காதல் சுற்றுவட்டத்தில்
செல்ல கிரகமவன்...

பூக்கள் வழிப்
புறப்படும்
நறுமணப் படைதிரட்டி
போர் ஏற்றி
வரும் வேளையில்
காதலெனும் கருவியானவன் ....

சிரித்துக் கிடக்கும்
மழலைக் கனவாய்
இதயத்தில்
கிறங்கும் மயக்கமென
தவழும்
எழுஜென்மத் தோன்றலவன் ...
.
நவீன படைப்பாளிகளில், குட்டி ரேவதி, ஈழப்பெண் கவிஞர் அனார் போன்றவர்களுக்கு நிகரான அபூர்வ பெண் கவி "புலமி" யின் காதல் கவிதைகள், அவள் மொழியிலேயே சொல்வதென்றால் "ஏழு ஜென்ம தோன்றல்"

"ஹிக்கின் பாத்தம்ஸ் " களில் பளபளப்பான அட்டைகளுக்குள் , உள் பக்க ஓவியங்களுக்குள் பெரும்பாலும் கண்டபடிக்கு கிறுக்கபட்டிருக்கின்ற கவிதைகளில் பாவம் காதல் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறது. அவை வந்த வேகத்தில் மரித்தும் போய்விடுகின்றன. ஆத்மார்த்தமான , அபூர்வமான “சின்ன சின்னதாய் “ போன்ற கவிதைகள் இணைய தளங்களில் இன்று இளைப்பாறினாலும் இதயங்கள் வழியே கடந்து ஜென்மங்கள் வாழும் இலக்கியங்களாகும்.

"சோர்ந்து போகிறேன் சுவராகத் தாங்கு,நான்
சிலிர்த்தால் தூக்கு சிறகாய் – சேர்ந்துனைச்
சார்ந்து படருமிச் சராசரிக் கொடிக்குநீ
சொர்க்கம் அனுப்பிய தேர்"

என்று என் இல்லற வாழ்வை , இனிய காதலை எளிய வார்த்தைகளில் அப்படியே மொழிபெயர்த்த இந்த வெண்பா ,ஒவ்வொரு அழகிய காதல் குடும்பத்தின் சுகமான கதையாக இருக்கும்.

“நீ
வாசிக்கும்போது மட்டும்
எனது கவிதைகள்
சுவாசிக்கின்றன ! “

இது போன்ற ," கிருஷ்ண தேவின் துள்ளல் வரிகள் பல நெஞ்சத்தைக் கிள்ளும் காதல் கவிதைகள்.

"உனக்கோ பணி நிமித்தம்
எனக்கோ காதல் நிமித்தம்

என்உடையா
வளையல்களும்
கசங்கா சேலைகளும்
நீயில்லா நாட்களிலெல்லாம்
ஆயிரம் கவி சொல்லும்........!!"

என்னும் "வித்யாவின்" ஏக்கம் இங்கு பெரும்பாலான பெண்களின் வாழ்க்கையாக இருக்கிறது .

எழுதியவர் : கவித்தாசபாபதி (26-Mar-15, 2:33 pm)
பார்வை : 471

மேலே