அந்த நாள் ஞாபகம்

தேர்வு நாள்.....
தெளிவற்று இருந்தது சித்தம்.
தெரிந்தது தெரியாதது படித்தது
படியாதது மண்டைக் குடுவையில்
கலங்கிப் போயிருந்தது
மூளைப் பாயாசம்
வண்டி ஓடிக்கொண்டே இருந்தது
"மழை வருது மழை வருது
குடை கொண்டு வா"
மண்டை பிளக்கும் வெயிலும்
இதம் தந்தது
பக்கத்து இருக்கையில்
தன்னிலை மறந்து
தாழ்வகைத் தாவரங்களின்
உருவவியல் பக்கத்தை
பிரித்து வைத்து தன்பாட்டிற்கு
புலம்பிக் கொண்டிருந்தது
வருங்கால பி எச் டி ஒன்று.
இன்று பிசிக்ஸ் எக்ஸாம் தானே...
பேசவே இல்லை பி எச் டி
ஸ்பார்க் அடித்தது
டிரைவர் போட்ட பிரேக்
ம்ம்...
"பிள்ளையார் சுழி போட்டு
நீ நல்லதை தொடங்கிவிடு"
மாகாளி கோயிலின்
சீர்காழி பாடல்..
கோவில் வாசலில்
சுற்றிச் சுற்றிச் சுப்ரபாதம் பாடும்
சுந்தரம்பாள்களுக்கிடையே
உடலைச் சுற்றத் துணியின்றி
அம்மணமாய் நின்ற குழந்தை
அண்ணே தர்மம் தாங்க..
அம்மா சாப்பாட்டுக்குத் தந்த
அந்தப் பத்து ரூபா நோட்டு
இடம் மாறியது.
கணபதி குழந்தையில்
சிரித்தார்.
இறங்கி ஏறியதில்
இருக்கை பறி போயிருந்தது.
கல்லூரி வந்தது இறங்கு முன்
ஒருதடவையாவது ஒரு சி.யு
ஒரு குட் லக்
திரும்பிப் பார்த்தேன்.
தாழ்வகைத் தாவரம்
தலை குனிந்து
கடந்து சென்று கொண்டிருந்தது
இதயம் கனத்தது
"போகுதே போகுதே
என் பைங்கிளி வானிலே"
சே என்ன மனம் இது இது ...
தேர்வு மண்டபம் நெருங்க
பௌதிக வினாத்தாள்
பரீட்சைப் பெறு பேறு...
மருத்துவ பீட அனுமதி..
மாறி மாறி
மன வானப் பட்டறையில்
வெல்டிங் மின்னல்கள்
வெளுத்து வாங்கின..
வினாத்தாள் வந்தது.
கண்ணில் ஒற்றிக்
கைகளால் பிரித்தேன்
காந்தப் புலம்
ஒலியியல் ஒளியியல்
மின்னியல்
எதுவும் இல்லை
மாறாக உருவவியல்
உடலமைப்பியல்
தவறாகப் புரிந்த
பரீட்சை நேர அட்டவணை...
தாறுமாறாகத் தெரிந்தது
வினாத்தாள்.
இருட்டிய கண்களூடாக
தாழ் வகைத் தாவரம்
தூரத்தில்
கேலியாகச் சிரித்துக்
கொண்டிருந்தது...

எழுதியவர் : சிவநாதன் (26-Mar-15, 9:14 pm)
பார்வை : 141

மேலே