கோட்டோவிய மழலைகள் - 23

பூக்களெல்லாம் பேச தொடங்கியது
மழலைகளாய் என் மன தோட்டத்தில்...

உன்னிடத்தில் மட்டுமே நான்
வெற்றிபெறுவதை விட
தோற்பதில் அவ்வளவு மகிழ்ச்சி கொள்கிறேன்....

நிலாவைப் பார்த்து
சோறூட்டும்போதேல்லாம் நிலா உன்னை
ரசித்துக் கொண்டிருக்கும் என்பதை
எப்படி உனக்கு புரிய வைப்பது?

கடற்கரையில் நீ கட்டிய
மணல் வீடுகளெல்லாம்
மாளிகையாகிவிடுகிறது
கடன் வாங்கி நான் கட்டிய
மாளிகையெல்லாம் மணல் வீடுகளாய் தெரிகிறது...

உனது கண்ணாமூச்சி விளையாட்டில்
நீ கண்களை மூடிக்கொண்டு
என்னைத் தேடுகிறாய்
நான் கண்களை திறந்துகொண்டு
என்னையே தேடுகிறேன்...

நீ கலைத்துப் போடும் கலையில்
காணாமல் போகிறது
நான் அடுக்கிவைத்த அலுப்புகளெல்லாம்

நீ கிருக்கல்களென்று
வரைந்துவைத்த ஓவியத்திற்குமுன்
நான் ஓவியமென்று
வரைந்து வைத்ததெல்லாம்
வெறும் கிருக்கல்களாகிவிடுகிறது..

உனது விளையாட்டுசாமான்களில்
சமைக்கும் உணவுகளைப் பார்த்தே
பல சமயங்களில்
பசியை மறந்துவிடுகிறேன்...

உனது பிறந்தநாள் பரிசாக
நான் தரும்
எவ்வளவு விலையுயர்ந்த பொருளும்
விலையற்றதாகிவிடுகிறது
அன்பில் நீ தரும் ஆசை முத்தத்தில்...

நீங்கள்
உளறும் மொழிகள் கூட
உண்மையாகவே இருக்கும்...
நாங்கள்
உண்மையைக் கூட
உளறிக் கொண்டிருகிறோம்...

எவ்வளவு கோபித்துக்கொண்டாலும்
எல்லாமும் மறந்துவிட்டு
அடுத்த நொடியில் அரவணைத்துக்கொள்கிறாய்...
மனிதம் என்பதை
மழலைகளிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டுமோ?

************************ ஜின்னா ************************

எழுதியவர் : ஜின்னா (28-Mar-15, 1:04 am)
பார்வை : 275

மேலே