புரியாத பதினைந்து நிமிடங்கள்

பேசவா வந்தாய்?
சீக்கிரம் தொடங்கு
நேரம் குறைவே.

பெயராக முக்கியம்?
ம்ம் ஆகட்டும் கதவு
சீக்கிரமே தட்டப்படும்.

எதற்கு முழிக்கிறாய்?
முதல் தடவையெனில்
சொல்லித் தருகிறேன்.

இரசிக்கவா வந்தாய்?
பக்கம் வா. மது அருந்து
உன்னை மற என்னைத் தொட.

எனக்கு காதலா?
வீண் பேச்சு வேண்டாம்
வீணாவது உன் நிமிடங்களே.

ஏன் பேனா வேண்டும்?
இன்னும் ஐந்து நிமிடமே
இருக்கிறது முட்டாளே.

டக் டக் டக் டக்.

கதவு திறக்கப்பட
புரியாமல் நின்றாள்
அவள்.

சிறு புன்னகையோடு
வெளியேறுகிறான்
அவன்.

மீண்டுமொரு முறை
அவன் வந்தால்
எல்லா கேள்விகளுக்கும்
விடை சொல்லலாம்
அவள்...
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (28-Mar-15, 3:56 pm)
பார்வை : 101

மேலே