மகாகவி தமிழன்பன் ஐயா அவர்களுக்கு கவிதாஞ்சலி
#மகாகவி தமிழன்பன் ஐயா அவர்களுக்கு கவிதாஞ்சலி..!
நந்நனை எரித்த மிச்ச வெப்பத்தில்
நகைத்தபடி அமர்வதற்கு
ஆசை கொண்டாயோ..?
அமரர் ஆவதற்கு அப்படி என்ன ஆசை உனக்கு..?
அமர்ந்தபடி நீ வாழ்ந்திருந்தால் கூட
எங்களுக்கு இன்னும் ஆயிரம் கவிதைகள் கிடைத்திருக்கும்..!
மாலை சூட்ட வேண்டும் என்றால் சூட்டி இருப்போமே..
நிழற் படத்தில் இருந்து கொண்டா வேண்டுவது..?
வலிகொண்ட
எங்கள் நெஞ்சங்களில் நிழலாடுகின்றாய்
உயிரோட்டமாய்..!
தீவுகளை கரையேற்றி விட்டு
எங்களின் கண்ணீர்க் கடலில் முத்தெடுக்கிறாயோ நீ..?
நீ வடித்த கவிதைகளை படித்து படித்து சிலிர்த்துக் கொள்கிறோம் நாங்கள்..!
தோணிகள் வருகின்றன..
அவற்றுக்குள்ளும்
போட்டி போல..
உம்மைக் கடைசியாய் சுமந்து செல்ல..!
குடைராட்டினக் கவிதைகளில் சுற்றி மகிழ்ந்தோமே..!?
எங்களுக்கான குடை ராட்டினத்தை
இனி உம்போல் எங்களுக்கு யார் செய்து அருளுவார்கள்..?
கண்ணுக்கு வெளியே சில கனாக்கள்…
எமக்கும் அளித்தீர்கள் உமது கனாக்களை..
தாலாட்டும் கனாக்களை வழங்கி விட்டு
நீர் ஏன் உறங்கி விட்டீர்..!
நடை மறந்து விட்டதா இந்த நதி..?
திசை மாறி விட்டதா இந்த ஓடை..?
திசையை எவருக்கும் உணர்த்தாமல் கடத்திச் சென்ற காலனுக்கு யார் தண்டனை அளிப்பார்கள்..?
ஐயோ….
நதியில் மணல் கொள்ளை போகலாம் நதியே கொள்ளை போவதோ..!
எங்கே நடக்கும் இந்த அநியாயம்..?
வார்த்தைகள் கேட்ட வரமா..?
இல்லை.. இல்லை..
கேட்காமலே அவற்றிற்கு
நீயாகக் கொடுத்த வரம்
சாகாவரத்தை அல்லவா பெற்றுவிட்டன
உமது கவிதைகளில்..!
நன்றிக் கடனாய் வார்த்தைகள்
அளித்தவரத்தில்
நீயும் மரணம் இன்றித்தானே வாழ்வாய்..!
“லிமரைக்கூ” வின் பிரம்மனே
உன் சென்னிமலை கிளியோபாத்ராக்களின்
பிரம்மாண்டத்தை
எண்ணி எண்ணி வியக்கின்றோம்..
நீ இறந்து விட்டாய் என்பதெல்லாம் பொய் பித்தலாட்டம்..
மகாகவிக்கு மரணமேது..?
நீ உனது கவிதைகளில் வாழ்ந்து கொண்டிருந்தாய்..
வாழ்ந்து கொண்டிருக்கிறாய் வாழ்வாய்..!
இருப்பினும்…
துக்கச் செய்திகள் துவளச் செய்கின்றன..!
உமக்கு எம் கண்ணீர் அஞ்சலிகள்..😢😢
#சொ.சாந்தி

