அடடா விளைந்திருக்கிறது எங்கள் நிலம்

எங்கள் எலும்புகளை நட்டு
நரம்புகளால் கட்டி
தலைகளை அடுக்கி
குருதியும் சதையும் குழைத்து பூசி
எழுந்து நிற்கிறது
அடுக்கு மாடி குடியிருப்புகள் - எம்
விளைநிலத்தில் .

மண்ணொடு
மரங்கள் முளைத்த கழனியில்
மதாமாதம்
மாடிகள் முளைக்கின்றன
தானூரும் ஊற்று நிலத்தில் - புது
தொழிற்சாலைகள் முளைக்கின்றன
நட்ட வயல்கள் யாவும் இன்று
கட்ட வேலி போட்டு காத்திருக்கின்றன
விற்பனைக்கு...

தூரம் நிற்கும்
ரியல் எஸ்டேட்டுகளை கண்டு
குலை நடுங்க
தென்னை மரங்கள்
"நெருங்காதே" என்று கூற

பச்சை மரங்கள்
பதற்றத்தில் வாட

பறவைகளின் பயிர்கள்
கேள்விக்குறியாக

பசுக்களும்
காளைகளும்
வைக்கோலுக்கு ஏங்க

நண்டுகளும்
நத்தைகளும்-தன்
தலைமுறையை யோசித்தழ

நாரைகளும்
கொக்குகளும்
நாடோடியாய் திரிய

விதைக்க காத்திருக்கும் விதைப்பயிர்கள்
விடியலை தேட

ஏனோ
மனிதர்கள் மட்டும் மகிழ்ச்சியில்
நாளாக நாளாக விலையேற்றம் எண்ணிக்கொண்டே....

நிற்க,
கவனிக்க

அது
விலை நிலமல்ல
விளை நிலம்...

இப்படிக்கு

விளை நிலம் காக்க...
விளை நிலம் காக்க...
என்று தேம்பிக்கொண்டே
நானும்
இதை படித்த நீங்களும்

எழுதியவர் : செல்ல.கார்த்திக் (28-Mar-15, 5:42 pm)
பார்வை : 82

மேலே