ஈழம்

இருளை குடித்து
வெளிச்சம் முளைத்தது..
தினம்தினம் புதிய விடியல்கள்
ஆனால்
எல்லாமே பழைய கதை தான்..
கிழக்கே கதிரவன் மேலேற
வடக்கே பீரங்கிகள் நெருக்கின..
குழந்தைகளெல்லாம்
பள்ளிக்கு சென்றனர்..
பள்ளி வாயிலிருந்த மரமோ
போர் பயிற்சி செய்து கொண்டிருந்தது..
விமானங்களின் சத்தம் கேட்டன
பதுங்கு குழியில் பதுங்குவதே
பள்ளி குழந்தைகளின் முதல் பாடம்
இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களே..
கதவுகளெல்லாம் மூடப்பட்டன
கண்களில் மரணபயம் வழிந்தன
வீதியில் ஆள் நடமாட்டங்களில்லை
மௌனம் மட்டும் அச்சமின்றி திரிந்தது..
குண்டுகள் வீசப்பட்டன
மிகுந்த சத்தங்கள்
எதிரொலித்த வண்ணமிருக்க
மரணத்தோடு புகைமண்டங்களும் சூள்ந்தது..
அழகும் அமைதியுமாய்
நிறைந்த இடமெல்லாம்
ரத்தங்களும் சதைகளுமாய்
நரம்புகளும் எலும்புகளுமாய்
பிணக்காடுகளாய் காட்சியளித்தன..
குண்டு மழை
பொழிந்த விமானம்
அடுத்த கிராமத்திற்கு பயணித்தது
காயம் கொண்டவர்களுக்கு
முதலுதவிக்கு செய்தும்
இறந்தவர்களுக்கு
இறுதி அஞ்சலி செலுத்தியும்
பொழுதுகளை கடத்தினர்
நாளைய பிணங்கள்....
வெளிச்சம் வற்றியது
இருள் சூள்ந்தது
நாளை
மீண்டுமொரு புது விடியல்
ஆனால்,
எல்லாமே பழைய கதை தான்...