தைநாளே தமிழாண்டு
சித்திரையன்று
தை நாளே தமிழாண்டு
பாவலர் கருமலைத்தமிழாழன்
எத்துனைதாம் இங்கே எடுத்துரைத்தும் எந்தமிழன்
சித்திரையே ஆண்டின் பிறப்பென்ற -- நித்திரையில்
ஆழ்ந்துள்ளான்! தட்டி எழுப்பியே நெஞ்சத்தில்
ஆழ்த்துக தை நாளென்றே ஆர்த்து!
செத்த மொழிப்பெயர்கள் செம்மொழிக்கே சூட்டுவதோ
மொத்த அறிவுமே போனதுவோ -- சித்தம்
கலங்கியுள்ள இத்தமிழன் காதிலே ஓதித்
துலங்கச்செய் தை யேதான் என்று !
மாண்ட மொழியிலுள்ள மாண்பில்லா வாய்க்கதைகள்
ஈன்ற குழந்தைகளா இன்தமிழின் -- ஆண்டுகள்
மூடத் தமிழன் முறையாக ஏற்கச்செய்
ஆடகத் தை யேதான் ஆண்டு !
ஆன்ற தமிழறிஞர் ஆய்ந்துரைத்த தை நாளை
சான்றோர்கள் ஏற்ற தமிழாண்டை -- கூன்மதியால்
ஏற்க மறுக்கின்ற நம்தமிழர் சென்னிகுட்டி
ஏற்றிடச் செய்வாய் எழுந்து!
சற்றும் தமிழ்ப்பற்று தானில்லா தற்குறிகள்
நற்கலைஞர் அணையிட்டார் என்பதாலே -- சிற்றறிவால்
சித்திரையே மீண்டுமென்றார்! சீர்தமிழா ஏற்காமல்
முத்திரையாய்த் தை யே முழங்கு !