அண்ணாத்த ஆசியுடன்
மேல்நோக்கு நாள் முதல்
இராசிபலன் வரை
நெருக்கி எழுதப்பட்ட
நாட்காட்டி எழுத்துக்களாய்
உணவகம் நிரம்பக் கூட்டம்.
மொட்டைத் தலையொன்று
வியர்க்க வியர்க்க
வரம்பில்லா சாப்பாட்டுக்கு
மூன்றாவது முறையாக
முட்டைகோஸ் கேட்டு
முறைத்துக்கொள்கிறது.
நிறைவேற்றப்படும்
நதிநீர் இணைப்பாய்
மீசைக்கார தாத்தா
பக்கத்து இலைக்கு
மோரை பாய்ச்சுகிறார்.
அந்த குழந்தையின்
மூக்கோ பாவமய்யா
முழுவதுமதில்
சாம்பார்ச் சாரல்.
நெற்றியில் மச்சம் கொண்ட
நடுவயதுக்காரர் ஒருவர்
நறுக்கென்று கடித்ததில்
நல்லி எலும்புச் சிதறல்
கையில் குத்தியது.
இடது பக்க இருக்கையில்
இடம் பிடிக்கலாம் என்றால்
எனக்காகவே சர்வர் செய்த
சதி போல கொட்டிய தண்ணீர்.
நானும் சேர்ந்து வெந்தாலும்
பரவாயில்லை என்றே அங்கு
சமையலறை பக்கத்தில்
ஓர் இருக்கையில் அமர்ந்தேன்.
சுவரில் ஒட்டப்பட்ட
பெரிய பட்டியலை
விழிக்கு விருந்தாய்
வாசிக்க ஆரம்பித்தேன்.
கடைசியில் இருந்தது
தக்காளிச்சாதம்
முப்பது ரூபாய்.
சர்வரை அழைத்து
தக்காளிச்சாதமென்றேன்.
டோக்கன் வாங்குப்பா
அந்தான்ட போயி என்றார்.
அடைத்துவந்த சினத்தை
பசி வந்து அடக்கிவிட
இருக்கையில் ஒரு கண்ணும்
நடையில் ஒரு கண்ணுமாய்..
சேகுவரா பனியன் அணிந்த
பில்போடும் அண்ணாத்தவிடம்
கடைசியாய் பையிலிருந்த
முப்பது ரூபாய் நீட்டி ஒரு
தக்காளிச்சாதமென்றேன்.
அது பழையப் பட்டியல்
இப்போது முப்பத்தைந்து
என்று மெள்ளச் சிரித்தார்.
பாவமாய் முழித்த என்னிடம்
பரவாயில்லை தம்பி
இந்தா டோக்கன் போ
என்று மீண்டும் சிரித்தார்.
சாப்பிட்டு திரும்பி வந்து
நன்றி சொல்ல தேடினேன்
மாயமாய் மறைந்திருந்தார்.
அண்ணாத்தே எங்கே?
--கனா காண்பவன்