ஒரு நொடி நின்று செல்வோம்
தேடிப்பிடித்து... ஓடிக்களைத்து...
உழைத்துக்கொடுத்த உன்னதத்தை...
உயிரைக்கொடுத்து... உயர்த்திப்பிடித்த...
தேசியத்தை... தெருவில் வீசிப்ப்பார்ப்பதா...?
என் தோழனே...
தோளிருந்து என்ன பயன்...?
பயனற்றபோது...
உளுத்துப் போவதர்க்கல்ல
உயர்ந்த வேதங்கள்...
உயிர்த்து எழுவதற்கு...
வசதிபடைத்த விதைகள்தான்
வயலில் விளையுமென்றால்
விதியற்ற விதைகள்
வீனாகிப்போவதா...?
உதிராத கதிருண்டென்றால்
ஊழல் முகிழ்க்காத
மண்ணுண்டு போலும்...
பரந்த உலகில்
பிறந்த மனிதனே...
ஊழல் செய்தே
ஊதிப்போனாயோ...?
மருத்துவன் முதல்
மயானி வரை
வெள்ளைத் தாளில்தான்
விழுந்துகிடக்கிறான்...
"கணிதம் தொடங்கி
கணினி வரை
எதில் தடம்
பதிக்கவில்லை நாம்...?"
- என்ற வினா முன்
" இல்லை...
இன்னும் இல்லை..."
என்றோர் மெல்லிய ஓசை
கேட்கத்தான் செய்கிறது...
அரசின் கைம்பெண்
தொகை என்றாலும்...
முதியோர் தொகை
என்றாலும்...
முதலில் கையூட்டு வை...
பின்னர் மனு வை...
'கன்சிடர்' செய்கிறேன்...!
லஞ்ச ஒழிப்பு...
கைது... வழக்கு...
இது சமுதாயச் சடங்கு...
உங்கள் வாடிக்கை...
எங்கள் வேடிக்கை...
இது நிஜத்தின் அலசல்...
சமூகத்தின் விரிசல்...
அன்றோ வாடிய
பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடிய மனிதர்கள்...
இன்றோ பயிர்
வாடுவதர்க்கென
வகை வகை
மருந்துகள்...
அன்று அன்னச் சத்திரம்
ஆயிரமாயிரம் கண்டனர்...
இன்றோ ... அன்னம் முதல்
ஆயுள் வளர்க்கும்
தண்ணீர் வரை
அத்தனையிலும் கலப்படம்...
பளிங்குக்கல் என்றாலும்
பள்ளிக்கூடம் என்றாலும்
பணம் கொடுத்தால் போதும்...
வெள்ளையனே வெளியேறு...
வெள்ளையனே வெளியேறு... என்றோம்...
வெளியேறினான்... அந்நியனும் வெளியேறினான்...
அகிம்சையை அடியோடு
பெயர்த்துக்கொண்டு
வெளியேறினான்...
உள்ளிருத்தினான்...
இங்கே உள்ளிருத்தினான்...
துப்பாக்கி குண்டு...
மனித வெடிகுண்டு...
மது, மாது,
அழிவுக்கான விதிகளை
விதைத்துவிட்டு
வெளியேறினான்...
எங்கே போகிறோம் நாம்...?
எது நம் பாதை...?
ஒரு நொடி நின்று செல்வோம்...