சென்றது இனி மீளாது
சென்ற காலம் திரும்பாது
சிறகை விரித்துப் பறக்காது
துன்பம் தன்னை மறந்துவிடு
தொடர்ந்து வாழப் பழகிவிடு
வன்மம் தன்னை ஒழித்துவிடு
வாழ்வின் நெறியில் நடந்துவிடு
அன்பே உயர்வாய் கொண்டுவிடின்
அழகாய் வாழ்வும் ஆகிவிடும் !.
உன்னை நம்பி வாழ்ந்துவிடு
உயர்ந்த எண்ணம் கொண்டுவிடு
உண்மை உள்ளம் கொண்டுவிடு
உலகில் உயர்ந்து நின்றுவிடு
பண்பும் பணிவும் உடன்கொண்டு
பாங்காய் வாழப் பழகிவிடு
என்றும் வாழ்வாய் புகழோடு
இன்பம் தொடரும் மகிழ்வோடு !
அளவாய் சொல்லைச் சொல்லிவிடு
அடுத்தவர் உணர்வைப் புரிந்துவிடு
களவு எனும்சொல் மறந்துவிடு
கருணை உள்ளம் கொண்டுவிடு
பள்ளம் பார்த்து நடந்துவிடின்
பங்கம் என்றும் அண்டாது
பழிக்கும் செயலைச் செய்யாதே
பசுத்தோல் போர்த்தி அலையாதே ?
இயற்கை இயல்பாய் வாழவிடு
என்றும் இனிமை கண்டுவிடு
முயற்சி செய்தே முன்செல்லு
மூடத் தனத்தைப்பின்தள்ளு !
பயந்து கிடந்து சாகாதே
பழிக்கும் வழியில் போகாதே !
இயன்ற வரையில் உழைத்துவிடு
எளிமை வாழ்வை வாழ்ந்துவிடு!
************