பற்றி வந்து நிற்கும் வெற்றியதும்
உயர வேண்டும் என்றுஎண்ணின்
உழைக்க நாளும் முயலவேண்டும் !
அயர்ந்து உறங்கிக் கிடந்திடாமல்
அனுதினமும் விழிக்க வேண்டும் !
வியர்வை சிந்தி வியர்வைசிந்தி
வெற்றிப் படியில் ஏறிச்சென்றால்
உயர்ந்து என்றும் இருக்கலாமே
உண்மை அறிந்து வாழலாமே !
அலைகள் போலும் தூக்கமின்றி
ஓடி ஓடி உழைக்கவேணும் !
உலையைப் போல பொங்கிஎன்றும்
உண்ணும் உணவை ஆக்கவேணும் !
வலையை வீசிக் காத்திருந்து
விழுந்த மீனை அள்ளவேணும்
பழைமை தன்னை ஒதுக்கிவிட்டு
புதிய வழியைக் காணவேணும் !
பகையை விலக்கி வாழ்ந்துவிட்டால்
பாச உணர்வு பொங்கிநிற்கும்
குகையைப் போல இருண்ட உள்ளம்
குற்ற உணர்வை துரத்திவெல்லும்
புகையாய் இருந்த வெறுப்புகூட
புழுதி போல பறந்துபோகும் !
தகைமை கொண்ட மனத்தினாலே
தலைநிமிர்த்தி வாழலாமே !
படிப்படியாய் ஏறிச் சென்றால்
மாடி சென்று மகிழலாமே ?
அடிமை கொள்ளும் எண்ணமின்றி
ஆளும் தன்மைக் கொள்ளலாமே ?
நடித்து என்றும் ஏய்த்திடுவார்
நடிப்பை அறிந்து கொண்டாலே
துடித்து நெஞ்சம் துவண்டிடவே
தூர விலகி பறந்திடுவார் !
வெற்றி ஒன்றை மனதிலேந்தி
வீறு கொண்டு செல்லவேண்டும்
சுற்றி நிற்கும் துயரங்களை
துடைத்து எறிந்து நடக்கவேண்டும்
உற்ற நல்ல உணர்வுகொண்டு
உருக்கு போல மாறிவிட்டால்
பற்றி வந்து நிற்குமந்த
பதுங்கி விட்ட வெற்றியதும் !
**********************