நேர்பட ஒழுகு
ஏனடா ! மானுடா ! பிறந்ததும் ஏனடா !
கூனடா மனதினைக் கொண்டதும் கேடடா !
தேனடா எண்ணமும் தொலைத்ததும் தீதடா !
வானடா வாழ்வினை வீழ்த்தலும் தீங்கடா !
நன்றெனும் செயலினை மறந்ததும் ஏனடா !
குன்றென நில்லா கூனுடல் ஏனடா !
தன்னிலை மறப்பதும் தளர்வென கிடப்பதும்
புன்னகை ஒழித்துப் புலம்பலும் ஏனடா !
வீழ்ந்தவர் எழுந்திட வழிவகைச் செய்யா
தாழ்ந்த புத்தியை த் தழுவதல் வீணடா !
கோள்வழி சென்றே கொடுந்துயர் கொள்ளலும்
ஊழ்வினை என்றே உளறலும் கேடடா !
அடுத்தவர் சொத்தினை ஆட்டையைப் போடலும்
கொடுப்பவர் வீட்டிலே கொள்ளை அடிப்பதும்
கெடுதியே என்பதை உணர்ந்துநீ வாழடா !
உடுக்கை இழந்தவன் கையென உதவடா !
எரிகிற தீயினில் எண்ணை ஊற்றிடும்
அறிவற்ற மாந்தர் அழிசெயல் ஒழியடா !
முறிந்திடும் முறுங்கை மரத்தினில் ஏறிடும்
செறிவிலா செயலினை சிந்தையில் ஒழியடா !
கூடவே இருந்து குழிதனைப் பறிக்கும்
கேட்டினை விடுத்து கோபுரம் ஆகுடா !
நாடியே நாளும் நற்செயல் செய்துநீ
தேடி சுவைத்திடும் தேனென மாறுடா !
நேர்மை மறந்து நிம்மதி இழப்பதும்
சீர்தரும் எண்ணம் சீர்கெட வாழ்வதும்
ஊரது தூற்றும் உண்மை உணரடா !
பாரது போற்றும் பண்பினைப் பேற்றுடா !
ஒழுக்கம் என்பதை உயிரெனக் கொள்ளடா !
இழிவது இனிக்கும் என்ற போதிலும்
பழியே அதிவென பயந்து ஒதுங்கடா !
தெளிந்த மனதினால் தினமும் வாழடா!