யாசகம்

(என்னை சமீபத்தில் மிகவும் பாதித்த..நெகிழ வைத்த நிகழ்வு)


யாசகம் கேட்டதோர் சிறுமியும்
சிதைத்திட்டாள் என் நெஞ்சினை .சமீபத்தில் !
அவள் வேண்டிய யாசகம் காசல்ல
கொஞ்சம் பழச் சாறென அறிகையில் !

அகவையோ ஆறுதான்
வறுமையின் ஆற்றிலே
அமிழ்ந்த அம்மழலையின்
விழிகளில் கடுந்துயர்..

அதிசய யாசகம் என்பதால் அன்புடன்
இசைந்து நான் பணம் தந்து
கடையினில் தரச் சொன்னேன்
பழச்சாறினை சிறுமிக்கு ..!

உடனவள் மறுத்தது வியப்பினை தந்திட
வினவினேன் சிறுமியை ..மறுப்பது எதற்கென!
எனக்கது தேவையில்லை என்று சொல்லி
அம்மை நோய் கண்டு அருகில் நின்ற அவள்
தாயினை காட்டினாள் !


அம்மை நோய் முடிந்து நான்
அன்றுதான் கடை வீதி வந்தேன்..
யாசகமா இது இல்லை என்றே
மனம் நெகிழ்ந்து கலங்கி பின்
இரட்டிப்பு அளவிலே பழச் சாறினை
கொடுத்திட சொல்லியே பணத்தினை
நீட்டினேன்.. கடையிலே !
..

தாய்ப்பாசம் கண்டதுண்டு..வாழ்வில்
யாசித்து வாழ்ந்திடும் குழந்தை ஒன்று ..
நோயுற்ற தாய்க்கென கை ஏந்தி நின்று
காட்டிய இப்பாசத்தினை கண்டதில்லை !

இவர்கள் வாழ்வினில் வளம் பெற
விழைதலன்றி அறிந்திலேன் வேறொன்றும்!
நன்றி தெரிந்தது சிறுமியின் விழிகளில்!
வாய்ப்பிற்கு நன்றி சொன்னேன் .மனதினில் !

எவ்வளவு பேர்களோ இவர்கள் போல் ..
ஏனோ மனதிற்குள் அழுகிறேன்..!

எழுதியவர் : கருணா (4-Apr-15, 4:57 pm)
Tanglish : yaasakam
பார்வை : 201

மேலே