என்னை விட்டு போகாதே பகுதி 20

மருத்துவமனைக்குள் அவன் நுழைந்தபோது அங்கிருந்து புறப்பட ஆயுத்தமாய் இருந்தாள் கவியரசி. அவளை பார்த்ததும் ஆடி போனான் அவன். எத்தனை அழகான முகம். வசீகரம் நிறைந்தது. இத்தனை நாளாய் இந்த மருந்துகளினால் துவண்டுபோன மலர் இன்று தான் பூத்து காணப்பட்டது அவள் புன்னகையின் வழியே.
“என்ன கண்ணா இத்தனை நேரம். உனக்காக தான் காத்திருந்தேன். இந்த இடத்தை விட்டு விரைவாக சென்றிட வேண்டும்.” சொன்னவளின் முகத்தில் எத்தனை ஆர்வம் அந்த இடத்தை விட்டு விலகி செல்ல.
“இரவு உறங்கிட நேரமாகிவிட்டது.அது தான் எழுந்து கிளம்பிட தாமதமாகிவிட்டது” சொன்னான் அவன்.
“ராத்திரி அவ்வளவு நேரம் என்ன செய்து கொண்டிருந்தாய் உறங்கிட நேரமாகும் அளவுக்கு?” அழகாய் தலை சாய்த்தபடி கேட்டாள் அவள்.
இந்த பெண்கள் எத்தனை நயமான பேச்சுக்கு சொந்தக்காரர்களாய் இருக்கிறார்கள். இரவு அத்தனை நேரம் கைப்பேசியில் தன்னுடன் பேசிக்கொண்டிருந்தவளே இவள் தானே. பிறகு எப்படி இவளால் இப்படி கேட்க முடிகிறது. தனக்குள்ளே சிரித்து கொண்டான் அவன்.
“என் மகா ராணியுடன் பேசி கொண்டிருந்தேன். அது தான் நேரமாகி விட்டது. யாரென்று கேட்காதே. அது ரகசியம்” சொல்லிவிட்டு அவளை பார்த்தான் அவன்.
“சரி சரி. நான் கேட்கவில்லை” என்று சொல்லி புன்னகைத்தவள் பட்டென்று அவனது கையை பற்றியபடி சொன்னாள் “வா புறப்படலாம்” என்று.
அவள் தனது கைகளை பற்றிடும் நேரங்களில் ஏனோ, “தான் தான் அவளை இறுதி வரை பாதுகாவலாய் பார்த்துக்கொள்ள வேண்டும் அவளை தனது குழந்தையாக எண்ணி” என்ற எண்ணம் அவனது மனதில் எழுவதை அவனால் ஏனோ கட்டுப்படுத்த முடிவதில்லை.
அவன் தனது வாழ்க்கை முழுவதும் பிடிக்க எண்ணும் அவளது கைகளை இருக்க பிடித்தபடி “சரி சரி. போகலாம்” என்றான் அவன்.
இருவரும் வெளியில் புறப்பட, அவளது கைபேசி சிணுங்கியது. அழைத்தது அவளது தந்தை. அவனை ஒரு கணம் ஏறிட்டு பார்த்துவிட்டு அழைப்பை ஏற்றாள் அவள். அவள் பேசுவதை கவனியாது இருந்தவனின் காதில் அந்த வார்த்தைகள் மட்டும் ஏனோ தெளிவாய் விழுந்தது.
“கல்யாணத்திற்கு இப்போது என்ன அவசரம் அப்பா” இவை தான் அந்த வார்த்தைகள். அவனது மனதில் ஏதோ ஒன்று ஓங்கி அறைந்தது போன்ற உணர்வு. இன்னும் எத்தனை நாளுக்கு குழப்பத்தோடு தவிப்பது. இவளிடம் நம் காதலை சொல்லாமல் மறைப்பது.
மறைப்பதின் விளைவாய் இந்த தேவதையை இழக்க நேரிட்டால் வாழ்க்கையை இழந்ததற்கு சமமல்லவா அது. அவன் பலவாறு எண்ணி கொண்டிருக்க, அழைப்பை அணைத்துவிட்டு அவனது கைகளை உலுக்கினாள் அவள்.
“என்ன ஆச்சு கண்ணா? எதையோ யோசித்து கொண்டிருக்கிறாய் போல?” கேட்டவளின் பக்கம் திரும்பினான் அவன்.
“ஒன்றும் இல்லை கவி” என்றவன் மனத்திரையை தாண்டி சென்றன அவனது பிறந்த நாளில் அவள் அவனிடம் பேசிட வேண்டும் என்று சொன்னதும், தேவியின் சந்திப்பின் காரணமாக அவன் அதை கேட்காமல் போனதும். அவளிடம் கேட்டு விட எண்ணி பேச தொடங்கினான்.
“கவி, என் பிறந்த நாள் அன்று என்னிடம் ஏதோ சொல்ல வேண்டும் என்று சொன்னாயே. அன்று உன்னிடம் அதை கேட்க முடியாமல் போய்விட்டது. இப்போது சொல்” என்றான் அவன்.
என்ன சொல்வது கண்ணா. உன்னை காதலிப்பதையா? உன்னிடம் அதை சொல்ல நினைத்தபோது நீ தேவியை பற்றி கூறி என் மனதை காயப்படுத்தியதையா? இதை தான் அவள் கேட்க எண்ணினாள். ஆனால் அதை இப்போது கேட்க முடியுமா அவனிடம். மாறாய் அவனை காயப்படுத்தும் ஓர் கேள்வியை கேட்டாள் அவனிடம்.
“அது ஒன்றும் இல்லை கண்ணா. ஊருக்கு போனேன் அல்லவா. அப்பாவும் அம்மாவும் என் கல்யாணத்தை பற்றி பேசினார்கள். ஏதோ ஒரு வரன் வந்திருக்கிறதாம். நாம் பழக தொடங்கிய நாள் முதல் இன்று வரை உன்னிடம் கலந்து பேசாமல் நான் எந்த முடிவை எடுத்திருக்கிறேன். அது தான் உன்னிடம் கேட்கலாம் என்று இருந்தேன்” சொல்லி முடித்தவள் அவனது பதிலை எதிர்பார்த்தபடி அவன் முகத்தை பார்த்தாள்.
“இதை பற்றி தான் உண்மையிலேயே என்னிடம் பேச நினைத்தாயா?” அதிர்ச்சியில் இருந்து விலகாமல் கேட்டான் அவன்.
“ஆமாம் கண்ணா” உறுதியாய் சொன்னாள் அவள். ஆண்கள் சொல்லும் பொய்யை கண்டு கொள்ளும் திறனை பெண்களுக்கு கொடுத்த இறைவன் பெண்களின் பொய்யை அறிந்து கொள்ளும் வரத்தை ஆண்களுக்கு கொடுக்க மறந்ததின் விளைவாய் தான் இவ்வுலகில் பல ஆண்கள் வலியை சுமந்தபடி வாழ்கின்றனர். அவனும் இன்று அந்த நிலைக்குத்தான் தள்ளப்பட்டிருக்கிறான் அவளது பொய்யால்.

எழுதியவர் : தண்டபாணி @ கவிபாலன் (5-Apr-15, 7:53 pm)
சேர்த்தது : L.S.Dhandapani
பார்வை : 266

மேலே