என்னை விட்டு போகாதே பகுதி 21

“என்ன சொல்வது கவி. உனக்கு பிடித்திருந்தால் எனக்கும் பிடிக்க தானே செய்யும். உனக்கு தெரிந்தது தானே இது” இதை தவிர வேறு எதுவும் சொல்லும் தைரியம் இல்லை அவனுக்கு.
“உண்மையாக சொல்கிறாயா கண்ணா. எனக்கு சம்மதம் என்றால் உனக்கும் சம்மதமா? நீ மாப்பிள்ளையை பார்க்க வேண்டாமா?” அவனை மேலும் காயப்படுத்தினாள் அவள்.
“உனக்கு பிடிப்பது தானே கவி முக்கியம். எத்தனை ஆழமாய் சிந்தித்து முடிவு எடுப்பவள் நீ. உனக்கே ஒருவரை பிடித்து போனால் அவர் உனக்கு ஏற்றவராய், எனக்கும் பிடித்தவராய் தான் இருக்க முடியும்” மனதை கல்லாக்கி கொண்டு சொன்னான் அவன்.
கனவிலும் அவள் அருகில் மற்றொருவனை வைத்து அவனால் எண்ணி பார்க்க இயலாது. அவனால் மட்டுமல்ல அவன் நிலையில் எவர் இருப்பினும் அவர்களாலும் அப்படி ஒன்றை கற்பனை செய்திட முடியாது. இருந்தும், தன் காதலை சொல்ல தைரியம் இல்லாத அவனால் இதை மட்டுமே சொல்ல முடிந்தது அவளிடம்.
சில மணி நேரத்திற்கு இருவரும் மௌனமாகி போனார்கள். அவனிடம் இருந்து அவள் எதிர் பார்த்ததும், அவளிடம் இருந்து அவன் எதிர்பார்த்ததும் இது அல்லவே. நமது வாழ்வில் பெரும்பாலும் நாம் எதிர்பார்த்தவை கிடைப்பதில்லை. கிடைப்பவை பல நேரங்களில் நம் மனதிற்கு அமைதியை தருவதில்லை.
இருவரின் மனமும் அமைதியின்றி தடுமாறியது. அவனது கைகளில் இருந்து தனது கையை விடுவித்து கொண்டாள் அவள். அவனது வண்டியில் அமர்ந்து கொண்டாள். அவளது விடுதி சென்று சேரும் வரை இருவருக்குள்ளும் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை.
அவள் விடுதியை அடைந்ததும் அவனை விட்டு அவள் விலகி சென்ற நொடியில் சொன்னான் அவன் “சாப்பிட்டுவிட்டு நீ போட்டு கொள்ள வேண்டிய மாத்திரைகளை ஒழுங்காய் போட்டுக்கொள். மாலை வந்து உன்னை சந்திக்கிறேன்”என்று.
சொல்லிவிட்டு அங்கிருந்து விலகி செல்ல நினைந்தவனை நிறுத்தியது அவளது குரல். “கண்ணா. மாலை நமது பூங்காவிற்கு செல்லலாமா? அங்கு சென்று வெகு நாட்களாகி விட்டது” கெஞ்சலாய் கேட்டாள் அவள்.
அவள் அப்படி கேட்டதும் அவளை உடனே அங்கு அழைத்து சென்றிட வேண்டும் என்பது போல இருந்தது அவனுக்கு.ஆனால் அந்த உச்சி வெயிலில் அவளை அங்கு அழைத்து செல்வது அவள் உடலுக்கு நல்லதல்லவே. அது மட்டும் இன்றி இன்றைய ஒரு நாள் மட்டும் அதிகம் அலைச்சல் இன்றி அவள் ஓய்வு எடுக்க வேண்டும் என்பது மருத்துவரின் பரிந்துரை ஆயிற்றே.
மனதை கட்டுப்படுத்திக்கொண்டு சொன்னான் அவன் "இல்லை கவி. இன்று வேண்டாம். உனக்கு ஓய்வு தேவை. நாளை செல்லலாம்" என்று.
"ஏன் கண்ணா? இன்று உனக்கு முக்கியமான வேலை ஏதேனும் உள்ளதா. தேவியை காண போவதாய் சொல்லி இருக்கிறாயா?" கேட்டுவிட்டு தலையை திருப்பி கொண்டாள் அவள்.
அந்த வார்த்தைகள் அவனை வேதனை படுத்தியதில் ஐயம் ஏதும் இல்லையே. "இல்லை கவி. உன் உடல் நலனுக்காக தான் சொல்கிறேன். புரிந்து கொள்" என்றான் அவன்.
பெண்கள் எப்போதும் தங்களது மனதில் நினைப்பதே சரி என்று நினைப்பது வழக்கம். எத்தனை முறை விளக்கினாலும் அவர்கள் அந்த விளக்கத்தை ஏற்பதில்லை. அவளும் அதற்கு விதி விளக்கல்ல. அவன் எத்தனை முறை சொன்ன போதிலும் அவள் மனம் அங்கேயே நின்று விட்டிருந்தது.
"சரி கண்ணா. நாம் நாளை செல்லலாம், உனக்கு நாளையாவது எந்த வேலையும் இல்லாமலிருக்கும் என்று எண்ணுகிறேன்" சொல்லிவிட்டு அவனை பார்த்து புன்னகைத்துவிட்டு விடுதிக்குள் சென்றாள் அவள்.
இந்த பெண்களின் மனதில் இருப்பதை படிக்க தெரிந்தவனின் முகவரியை யாரேனும் கொடுத்தால் போதுமே,அந்த இடம் எங்கு இருப்பினும் இந்த உலகில் உள்ள ஆண்கள் அனைவரும் அதை தேடி சென்று அவனிடம் அக்கலையை கற்றுவிட மாட்டனரோ.