என்னை விட்டு போகாதே பகுதி 22

அவனும் அந்த ஆண்கள் இனத்தில் ஒருவன் தானே. பாவம், அவனால் என்ன செய்ய முடியும் அவள் செல்வதை வேடிக்கை பார்ப்பதை தவிர. அவன் அங்கிருந்து விலகி செல்ல எத்தனித்த வேளை அவனது கைபேசி சிணுங்கியது. அது வெகு நேரமாய் சிணுங்கியபடி தான் இருந்தது தேவியின் பெயரை காட்டியபடி. கவியின் பேச்சில் இருந்து விலகிய அவனது மனம் இப்போது தான் அந்த கைப்பேசியின் சிணுங்களை கவனித்தது.
இன்றைய மனித வாழ்வில் கைபேசி என்பதே காதலுக்கென்றாகி விட்டது. காதல் தொடங்குவதும், அழகாய் வளர்வதும், ஏன் பல நேரங்களில் அது முடிவதும் கூட கைப்பேசியில் தான்.
இந்த முறை இவள் என்ன சொல்ல போகிறாளோ என்ற கலக்கத்துடனே தான் அழைப்பை ஏற்றான் அவன். "என்ன கண்ணா.. வேலையாய் இருக்கிறாயா? தொந்தரவு செய்துவிட்டேனா?" என்றாள் அவள்.
இந்த கேள்வி பெண்களுக்கென்றே உருவாக்கப்பட்டதோ. அதன் பதிலை அறிந்திருந்தும் அக்கேள்வியை கேட்பதே அவர்களது வழக்கம் ஆகிவிட்டது. எந்த வேலையில் நாம் இருப்பினும் அதை அவர்களை விட முக்கியம் என்பது போல் நாம் காட்டிக்கொள்ள கூடாது. இது எழுதப்படாத நியதி. அப்படி காட்டிக்கொண்டால் அதன்பின் அவர்களது கோபத்திற்கு முன் நிற்பதென்பது சாத்தியமில்லையே.
எனவே தான் ஆண்கள் எப்போதும் அந்த கேள்விக்கு பொதுவான ஒரு பதிலையே கூறிவிடுகின்றனர். அவன் மட்டும் என்ன விதி விளக்கா?
"இல்லை தேவி. அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. சொல்" என்றான் அவன்.
"நாளை நாம் சந்திக்கலாம் அல்லவா? உனக்கு வேலை ஏதும் இல்லையே?" கேட்டாள் அவள்.
அவன் அவளை சந்திப்பதாய் சொன்னதும் அதை மறந்து கவியை நாளை பூங்காவிற்கு அழைத்து செல்வதாய் அவன் சொன்னதும் அவனது நினைவிற்கு வந்தது. ஏது சொல்வது என்று புரியாமல் விழித்தான் அவன்.
"தேவி, நாளை என் உறவினர் ஒருவரை காண செல்கிறேன்" தட்டு தடுமாறி பொய்யினை உரைத்தான் அவன்.
சற்று நேரத்திற்கு மௌனமாகி போனாள் அவள். அவளை காயப்படுத்திய உணர்வு எழுந்தது அவனுள். சில வருடங்களுக்கு முன்பு அவன் அந்த நிலையில் தானே இருந்தான். அவனுக்கு அந்த வலி தரும் வேதனையை அவன் நன்கு அறிவான்.
"என்ன தேவி ஏன் மௌனமாகி விட்டாய். நான் உன்னை காயப்படுத்தி விட்டேனா? என்னை மன்னித்துவிடு" என்றான் அவன்.
"அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை கண்ணா. சரி நீ உன் வேலையை கவனி" என்று சொன்னாள் அவள். அவளது குரலில் அழுகையின் ரேகைகள் இருப்பதை உணர்ந்தான் அவன். நமது மனம் சுமக்கும் சோகத்தை நமக்கு நெருக்கமான உறவுகளிடம் இருந்து மறைப்பது எளிதா என்ன.
அவளது மனதின் சோகத்தை அவன் வாசித்த அந்த நொடிகள் இருவரின் உதடுகளும் பேச மறுத்து ஊமையாகி போயிருந்தன தங்களுக்கு வேலை ஏதும் இல்லை என்பதை உணர்ந்து. கையிலே கைபேசி எந்த உரையாடாலும் இன்றி. அவளது அழுகை ஓசை மட்டும் அதிகரித்தவண்ணம் இருந்தது.
"கண்ணா. என் மீது உனக்கு ஏதேனும் கோபமா? நான் முன்பு உன்னை காயப்படுத்தியது உனது நினைவில் உள்ளதா? இருந்தால் என்னை மன்னித்து விடு. இப்படி விலகி சென்று என்னை தண்டிக்காதே" அழுதவளின் குரல் உடைந்து தான் போனது இந்த வார்த்தைகளை சொன்ன போது.
அவள் அழுவதை அவனால் ஏனோ தாங்கி கொள்ள முடியவில்லை. முதல் காதலை மறைப்பது என்பது எளிதல்லவே. அவனை அவள் மதியாத போதிலும் அவளை அதிகம் நேசித்தவன் ஆயிற்றே அவன்.
"இல்லை தேவி. உன் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை" சொன்னவனின் மனம் தொடர்ந்தது "கோபம் எல்லாம் அந்த இயற்கையின் மீதும் என் மீதும் தான்" என்று.
அவள் மனம் ஏனோ அவனது பதிலில் நிம்மதி காணவில்லை "உண்மையாக தான் சொல்கிறாயா? எனக்காக ஏதும் சொல்ல வேண்டாம்" என்றாள் அவள்.
"உண்மையாக தான் சொல்கிறேன்" என்றான் எதையோ சிந்தித்தவனாய்.சட்டென்று சொன்னான் "இன்று மாலை நாம் சந்திக்கலாமா. உனக்கு வேலை ஏதும் இல்லையென்றால்" என்று.
எதையோ வேண்டி அழுது அடம் பிடிக்கும் மழலைக்கு அந்த பொருளை வாங்கி கொடுக்கின்ற பொழுது அதன் குரலில் ஏற்படும் மாற்றம் தான் அவளது குரலிலும் ஏற்பட்டது, அவன் இப்படி கேட்டதும்.
"உன்னை பார்ப்பதை விட முக்கியமான வேலை வேறு என்ன இருக்க முடியும் எனக்கு. உன்னோடு வாழ போகும் நொடிகளுக்காக தானே ஏங்கி கொண்டிருக்கிறேன் கண்ணா" அவள் சொன்னதை கேட்டதும் சிரித்தான் அவன் வாழ்க்கையின் வினோதத்தை எண்ணி.
இதே வார்த்தைகள் தான் சொல்லப்பட்டன. முன்பு, அவனால் அவளிடம். இன்றோ, அவளால் அவனிடம். ஆனால் இந்த இடைவெளியில் காலம் தனக்கான பங்காய் ஒரு புதிரான நாடகத்தை அரங்கேற்றி விட்டிருந்தது.
"நீ நினைப்பதை போல் உன்னை மகிழ்விக்கும் பதிலை உன்னிடம் நான் சொல்ல போவதில்லை தேவி. உன் மனதை காயப்படுத்த போகும் பதில் தான் என்னிடம் உள்ளது உனக்காக. நீ என் வாழ்வில் மீண்டும் வராமலே போயிருக்கலாம்" மனதுக்குள் சொல்லி கொண்டான் அவன்.
"சரி மாலை பூங்காவில் சந்திக்கலாம்" சொல்லிவிட்டு அவள் அழைப்பை தூண்டிக்க, இன்று எப்படியும் அவளிடம் அனைத்தையும் சொல்லிவிட வேண்டும் என்ற உறுதியோடு கைப்பேசியை வைத்துவிட்டு தனது வீட்டை நோக்கி பயணித்தான் அவன்.

எழுதியவர் : தண்டபாணி @ கவிபாலன் (5-Apr-15, 7:59 pm)
சேர்த்தது : L.S.Dhandapani
பார்வை : 337

மேலே