அவளுடைய மரண அறிக்கை

நல்ல பேரை
சம்பாதிக்காவிட்டாலும்
நாலு பேரை
சம்பாதித்து வைத்தவள்
தூக்கி அடக்கஞ்ச்செய்ய
ஒரு நாலு பேரை சம்பாதிக்காதவள்.
இன்று மரணித்துக் கிடக்கிறாள்
அடக்கத்து வரவேண்டியவர்கள்
எல்லோரும் நல்ல பிள்ளையாய்
அவரவர் வீட்டில்
அடக்கமாகிக் கிடக்கிறார்கள்
அடக்கமான எல்லோரும்
அவள் வாழ்ந்த நாட்களில்
அவளில் அடைக்க்கலாமானவர்கள்தான்
ஆனாலும்,
அவளின் நூலகத்துள்
நுழைந்தவர்கள் பெரும்பாலும்
புத்தக வாசனையே
அறியாதவர்களாக இருந்தார்கள்
அவளுடைய
நந்தவனத்தில் மலர்கள்
கொய்தவர்களோ
மாலையாக்கிச் சூடியதில்லை
அவளின் இளமை நிலத்தை
உழுதவர்கள் எல்லாம்
அறுவடையை எதிர்பார்க்காத்தவர்கள்
அவளின் அழகுப் பேரூந்தில்
பயணித்தவர்கள் எவரும்
பயணச்சீட்டு வாங்கியதில்லை
அவளின் மன்மதப்
பள்ளிக்கூடத்தில்
படித்தவர்கள் எவரும்
பரீட்சை எழுதியதில்லை
அவளின் இரகசிய
மிருதங்கத்தைத்
தட்டிப்பார்த்த
வித்துவான்கள் எவரும்
ரசிகர்களை வைத்துக்
கொண்டதில்லை.
அவளின் சலவைக் கல்லில்
துவைக்க வந்த சலவைக்காரர்கள்
எல்லோரும் அழுக்காகித்
திரும்பியிருந்தார்கள்
அவளின் தென்னை மரத்தில்
ஏறியவர்கள் எல்லோருமே
கீழே விழுந்தவர்கள்தான்.
அவளுடைய பருவத்
தடாகத்தில்
விழுந்தவர்கள் எல்லோருக்கும்
நீச்சல் தெரிந்ததில்லை
அவள் வீட்டுக்கு விலாசம்
மாறிவந்த கடிதங்களிலெல்லாம்
காதல் இருந்ததில்லை.
அவளின் அங்கத் தங்கத்தைப்
புடம்போட்டத் தட்டான்கள்
எவருமே தாலி செய்ததில்லை
அவளுடைய
பொது மருத்துவமனைக்கு
வைத்தியர்கள் கூட
நோயோடு வந்து போயிருந்தாலும்
மருந்து வாங்கியதில்லை
அவளுடைய வங்கியில்
வைப்பீடு செய்தவர்கள்
மீள எடுத்ததில்லை.
வெற்று மூங்கிலாய்
கிடந்தவளின் பருவத்தில்
ஏழ்மை நெருப்பு சன்னமிட
துடித்துப் புல்லாங்குழலாய்
மாறிப் போனவளை
இரவுகளில் மாத்திரம்
வாசிக்கும் கலைஞர்கள்
விருதுகளை எதிர்பார்த்ததில்லை.
அவளுடைய குளத்தில்
குளித்துக் களங்கமாகி போனவர்கள்
வெள்ளை வேட்டியுடன் திரிவதெல்லாம்
அவளறிந்த உண்மை
அவளுடைய இரகசிய
நாட்குறிப்பில்
சொர்க்கம் எழுதிய
அந்தரங்க மாமேதைகள்
ஊரெல்லாம் இருந்தாலும்
இங்கே ஒருவரும் இல்லை.
ஆனாலும் அவளால்
ஊரே அதிரத்தான் போகிறது
இன்னும் சொற்ப நேரத்தில்
வரும் மரண அறிக்கை
குணப்படுத்த முடியாத
பாலியல் நோயால்
இறந்திருக்கிறாள் என்னும் இடியாக,