நேற்று இறந்து விட்டேன் -----------அஹமது அலி-----

தனிமையும் தனிமை வெறுக்கும்
நிசப்த நிலப்பரப்பில்
நிமித்தங்கள் புரியால்
நித்திரையில் ஆழ்ந்து
விழித்திரை திறந்தேன்!
0
எப்படி வந்து சேர்ந்தேனிங்கு
எத்தனை நேரம் தூங்கிப் போனேன்
நியாபகத்தின் வேர்களிலும்
விபரங்கள் ஏதுமில்லை..!
0
என் அறை மொத்தமாக மாறியிருக்கிறது
படுக்கை களவாடப்பட்டுள்ளது
தலையணையும் உறுவப்பட்டுள்ளது
நாட்காட்டி, கடிகாரம் எல்லாமும்
எங்கே போனது?
0
வெள்ளைப் போர்வைக்குள் வைத்துதான்
கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறேன்
வெளிவரும் முயற்சியில் விளங்கிற்று...!
0
மண் பூட்டுகள் என்னைச் சுற்றிலும்
ஒவ்வொரு பூட்டுகளிலும்
என் பிள்ளைகள், உறவினர்கள்
நண்பர்கள், ஊரார்களின்
கைரேகை பதிந்திருக்கிறது...!
0
உறவுகளால் அடைக்கபட்டிருக்கிறேன்
ஏனென்று கேட்க எதிரில் யாருமில்லை
பனை மரத்தின் உச்சியில்
கரைந்த காகத்திடம் கேட்டும் பதிலில்லை..!
0
ஆகாய வீதியில் விமானக் கண்காட்சி
நடத்திய பருந்துகளும்
பதில் சொல்லவில்லை..!
0
வீட்டை நோக்கி நகர்ந்தேன்
சற்று தொலைவில் என் தலையணை...
இன்னும் சற்று தொலைவில்
புதரின் ஓரம் என் படுக்கை...
ஆச்சர்யம் விலகாமல் விரைந்து நடக்க
குப்பைமேட்டில் என் துணிமணிகள்...
0
இப்போது தெருவின் முதல் வீட்டை
அடைந்து விட்டிருந்தேன்
எதிர்பட்டவரிடத்திலெல்லாம் கேட்டேன்
எல்லோரும் செவிடர்களாய்
ஆகி இருந்தனர்...!
0
குழப்பத்துடனே வீடு வந்தேன்
வாராத உறவினர் எல்லாம் வாசலில்
எலோருக்கும் சலாம் உரைத்தேன்
எவரும் பதில் கூறவில்லை..!
0
வீட்டில் உள்ள எல்லோரையும்
அழைத்துப் பார்த்தேன்
என் குரல் அவர்களின் செவி தொடவில்லை
மேலும் முன்னேறினேன்
வீட்டிற்கு வந்தவர்கள்
பேசிக் கொண்டிருந்தனர்
நான் நேற்று இறந்து விட்டதாக..!

எழுதியவர் : அலிநகர்.அஹமது அலி (6-Apr-15, 8:38 am)
பார்வை : 194

மேலே