காமம் கனிந்த காதல்

உயிரே...
உலையில் விழுந்த அரிசியாய்க்
கொதித்தேன்..
கிளையில் உடைந்த துளிகளாய்த்
தெறித்தேன்..
மழையில் நனைந்த மான்களாய்த்
தவித்தேன்..
வெயிலில் நகர்ந்த மண்புழுவாய்த்
துடித்தேன்..
புயலில் பறந்த பூக்களாய்த்
திரிந்தேன்..
வயலில் காய்ந்த பயிர்களாய்
மடிந்தேன்..
உன் மடி சாய்ந்த
நாட்கள் மறந்து
சில நொடி நீ
என்னைப் பிரிந்து..
சத்தமாக சண்டையிட்டு
சிறு தூரம் நடைபோட்டு
சென்ற தருணங்களில்....
அழகே...
உன் மேல் பிழையிருந்தாலும்
நான் தான் பிழையென்றுரைத்து
உன் காதோரம் நெருங்கி
உன் கன்னமோரம் காமக்கவி
எழுத தாமதிக்காமல் வா
சற்று தயக்கமில்லாமல் வா...
கொண்ட சண்டையை உன்
கொண்டைப் பூக்களுக்குள்
பூட்டிவைத்து என்
ஆசைக்கதையெல்லாம் உன்
அடிவயிற்றில் தேக்கிவைக்க
அசையாமல் ஆடி வா
சற்று அசைந்தேனும் ஓடி வா...
அடுத்தவரி எழுதுவதற்க்குள்
அடுப்பங்கரையில் என் அன்னைக்கு ஏதோ உதவி செய்ய எனக்கு
அழைப்பு வந்துவிட்டது..!
காத்திரு என் காதலியே
கல்யாணம் முடிந்து சொல்கிறேன்
மீதி கதையை
"காமம் கனிந்த காதலை"...
செ.மணி