எனது பெயர் மழை மனிதரின் பார்வைக்கு - செ மணி
எனது பெயர் மழையாம்!!!...ஆனால்
எனது பார்வைக்கு
நான் தீக்குளிக்க விழுகின்றேன்...
சாதி எனும் தீ
சிலர் மனதில் மட்டும் எரியாமல்
பொழுது விடிந்தால் பிழைக்க வழி
என்னவென்று புரியாமல்
ஏங்கித் தவிக்கும் ஏழைகளின்
கூரைகளிலும் எரியும் பொழுது..
அதை எதிர்த்து குரல் கொடுக்க
வார்த்தையில்லா சப்தமாக
சாதிவெறியில்லா சுத்தமாக
உயிருடன் அக்கூரைத் தீயின் மீது
தீக்குளிக்கின்றேன்..
மனிதரின் பார்வைக்கு
மழையாக விழுகின்றேன்...!!
எனது பார்வைக்கு
நான் பசும்பால் அபிஷேகமாக விழுகின்றேன்...
கோவிலுக்கு வெளியில்
தொண்டை வறண்ட கிழவன்
குடிக்க நீரின்றி
குவளையேந்தி நிற்க..
கோவிலுக்கு உள்ளே
தங்கச்சிலை வாய்விட்டு கேட்காமல்
தன் தலை களைந்தாலும்
தன் கரம் கொண்டு
சரிசெய்ய முடியாமல்
என்றுமே தவ நிலையில்
நிலையாக நிற்கும் கருங்கல் மேனி
கொண்ட கடவுளுக்கு பசும்பால்
அபிஷேகம் செய்யும் மனிதர்கள்..
இக்காட்சியை கண்டுவிட்டு சற்று
கண் திருப்ப வறட்சி கொண்ட
அக்கிழவன் நிலையில் மடியக்
கிடக்கும் வறண்ட பூமி..
நானும் விழுந்தேன் பசும்பால்
அபிஷேகமாக அந்த
வறண்ட பூமி மீது..
மனிதரின் பார்வைக்கு
மழையாக விழுகின்றேன்...!!
எனது பார்வைக்கு
நான் கண்ணீராக விழுகின்றேன்...
குடி குடியைக் கெடு்க்கும்
என்ற வரிகளை
குடித்துக் கொண்டே படித்தும்
படித்துக் கொண்டே குடித்தும்
தன்குடி மறக்கும் குடிமகன்களை
எண்ணி என்றுமே கண்ணீர் சிந்தும்
மூன்று பெண்மைகள்..
தாயாக ஒருவள்
தாரமாக ஒருவள்
நானும் என் பெண்மையை
உணர்கின்றேன் இவர்களுக்காக
என் கண்கள் கலங்கி நான்
கண்ணீராக விழும்பொழுது..
மனிதரின் பார்வைக்கு
மழையாக விழுகின்றேன்...!!
எனது பார்வைக்கு
நான் வெட்கமாக விழுகின்றேன்...
யாருக்குத்தான் காதல் இல்லை..?
காதல் என்ற ஒன்று
உதித்தால்தான்
உயிர் என்ற ஒன்று
உருவாகும்..
மேகமாக உள்ள என்னை
மோகமாக உள்ள காற்று
வேகமாக வந்து தீண்டும் தருணம்
வெட்கமாக விழுகின்றேன் என்
காதலனை என்னிடம் அனுப்பி வைத்த அந்த காட்டுமரங்களின் மீது..
மனிதரின் பார்வைக்கு
மழையாக விழுகின்றேன்..!!
இப்படி என் பார்வைக்கு நான்
பலவாக விழுந்தாலும்
உங்கள் பார்வைக்கு நான்
ஒன்றுதான்..
எனது இந்த பார்வைகளை உங்கள்
கரம் கொண்டு மறைக்க முடியாது
மனிதர்களே..!! வெட்கப் பார்வையை
தவிர..
உயிர்கள் பல வாழ என் காதலான
காற்றுடன் கலக்க உதவும்
உன்னத காட்டுமரங்களை
உங்கள் கரம் கொண்ட கோடாரி
வெட்டும் பொழுதும் வேதனையுடன்
வெட்கம் கொள்கின்றேன்..!
மனிதர்களே உங்களைக் கண்டு..
என் உயிரான
காட்டு மரங்களை
விட்டு வையுங்கள்
உங்கள் உயிரான
பயிர்களுக்காக....
செ.மணி

